பதிவு செய்த நாள்
19
அக்
2020
02:10
புதுச்சேரி : புதுச்சேரியில், உலக மக்கள் நன்மைக்காக நடத்தப்பட்டு வரும் சத சண்டீ மகா ஹோமத்தில் இரண்டாம் நாளான நேற்று நடந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சாரதா நவராத்திரியை முன்னிட்டு, புதுச்சேரி தர்ம சம்ரக் ஷண சமிதி சார்பில், கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள சங்கர வித்யாலயா பள்ளி வளாகத்தில், 10 நாட்கள் நடக்கும், சத சண்டீ மகா ஹோமம் நேற்று முன்தினம் துவங்கியது.இரண்டாம் நாளான நேற்று காலை 7:00 மணிக்கு ஹோமம் துவங்கியது. தேவி மாகாத்நிய பாராயணம், 13 அத்தியா ஹோமமும், மதியம் 1:00 மணிக்கு மகா பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, சுமங்கலி பூஜை, கன்யா பூஜை, வடுக்கள் பூஜை, தம்பதி பூஜையும், மாலை 4:30 மணிக்கு, விக்னேஸ்வர பூஜை, வேதிகார்ச்சனை, மூலமந்திர ஹோமம், லலிதா சஹஸ்ரநாம பாராயணம், ரிக், யஜூர், சாம, அதர்வண வேத உபசாரங்கள் நடந்தது.வரும் 26ம் தேதி வரை நடக்கும், மகா ஹோமத்தில் அனைவரும் பங்கேற்கலாம் என தர்ம சம்ரக் ஷன சமிதியினர் தெரிவித்தனர். உலக மக்கள் நன்மைக்காக நடத்தப்படும் இந்த மகா ஹோமத்தை தர்ம சம்ரக் ஷண சமிதியின் பொருப்பாளர்கள், உறுப்பினர்கள் நடத்துகின்றனர்.நேற்றைய ஹோமத்தில் எல்.ஐ.சி. ரகோத்தமன், புரவலர் பி.டி.ஐ. துரைசாமி, ஆடிட்டர் கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.