பொதுவாக லட்சுமிநரசிம்மர், தாயாரை இடதுபுறத்தில் அமர்த்திய கோலத்தில் தான் காட்சி தருவார். தஞ்சை மாமணிக்கோயில்களில் ஒன்றான நீலமேகப் பெருமாள் சன்னதியில் உள்ள நரசிம்மர் மகாலட்சுமியை வலப்புறத்தில் அமர்த்திய நிலையில் இருக்கிறார். இவரை வலவந்தை நரசிம்மர் என்கின்றனர். ஒரு அசுரனை வதம் செய்த நரசிம்மரை சாந்தப்படுத்தவே மகாலட்சுமி வந்தாள். ஆனாலும், அவர் அதிக கோபத்துடன் இருக்கவே மகாலட்சுமியே பயந்துபோய், அவருக்கு வலப்புறமாக அமர்ந்து கொண்டாள். கோபம் இருக்கும் இடத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதில்லை என்பதை இந்த வடிவம் உணர்த்துகிறது. இதுமட்டுமின்றி இங்குள்ள ஹயக்ரீவர், லட்சுமியுடன் தனி சன்னதியில் வடக்கு பார்த்தபடி இருக்கிறார். கல்விக்கு அதிபதியான ஹயக்ரீவர், செல்வத்திற்கு அதிபதியான லட்சுமி இருவரையும் ஒரே நேரத்தில் தரிசனம் செய்வது விசேஷம். இருவருக்கும் ஏலக்காய் மாலை, நெய்விளக்கு, கற்கண்டு நைவேத்யம் படைத்து வணங்கினால் கல்வியில் சிறக்கலாம், செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.