பதிவு செய்த நாள்
22
டிச
2010
02:12
வேணி என்றால் நதி என்பது பொருள். மூன்று நதிகள் (கங்கை, யமுனை, சரஸ்வதி) சங்கமத்தில் சென்று நீராடுகிறோம். அதன் மூலம் நமக்கும் நமது முன்னோர்களுக்கும் புண்ணியம் கிடைக்கச் செய்கிறோம். கங்கா நதி நீர், வெண்மையாகவும், யமுனை நதி நீர், கருணையாகவும், சரஸ்வதி அந்தர்வாகினியாக கண்ணுக்குத் தெரியாமல் கீழே ஒடிக்கலப்பதாக ஐதீகம். இத்தகைய திரிவேணி சங்கமத்தில், ஸ்ரீராமர், லட்சுமணர், சீதாதேவி நீராடிய புண்ணிய பூமி. இங்கு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பமேளாகவும், 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை அர்த்கும்பமேளா திருவிழாவும், சிறப்பாக நடைபெறுகிறது. லட்சக்கணக்கான பக்தர்களும், சாதுக்களும் இங்கே வந்து முன்னோர்களை வணங்கி நீராடுவர். பிரயாகையில் முண்டம், காசியில் தண்டம், கயையில் பிண்டம் என்ற ஒரு வழக்கு உண்டு. இவற்றின் முக்கிய நோக்கம்,பாவம் களைவது. பாவம் அண்டாமல் தடுப்பது, பாவம் நீங்கி இறையோடு ஒன்றாவது ஆகும். முண்டம் என்பது முடி எடுத்தல். உடலில் வளரும் கேசங்கள் தாமாகவே அகலக்கூடியவை. அகற்றினாலும், உபத்திரவம் தாராதவை. அவற்றைப் போல் நம் பாவங்கள் களையப்படவேண்டும் என்பதற்காக பிரயாகை ஷேத்திரத்திலே முடி எடுத்து பாவங்களை களைய வேண்டும். பிரயாகையில் முக்கியமானது அட்சயவடம் என்று அழைக்கப்படும் ஆலமரம். இதன் வேர் பகுதி பிரயாகையிலும், நடுப்பகுதி காசியிலும், நுனி கயாவிலும், இருப்பதாக கூறுகிறார்கள். அதனால் இந்த மூன்று இடங்களிலும் வரிசையாக, பித்ரு காரியங்களை செய்ய வேண்டியது தமது கடமை என்று இந்துக்கள் நம்புகிறார்கள்.