பதிவு செய்த நாள்
25
அக்
2020
04:10
நவராத்திரியின் முக்கிய தெய்வம் துர்க்கை. பெண் சக்தியை துணையாக கொண்டு நடந்த வதத்தின், இறுதிநாள் வெற்றியை விவரிக்கும் நிகழ்வே விஜயதசமி. கல்வி, கேள்வி, அறிவில் சிறந்து விளங்கவும், தொழில் சார்ந்த புது முயற்சிகளுக்கு பிள்ளையார் சுழி போடவும் ஏற்ற நாளாகும். ஆட்சி, அதிகாரம், நாடு உள்பட சகலமானதையும் இழந்த பாண்டவர்கள், 12 ஆண்டு வனவாசம், ஓராண்டு மறைவு வாழ்க்கை முடிந்து, விஜயதசமியன்றே மீண்டும் அனைத்து ஆயுதங்களையும், தாங்கள் இழந்த பலம் ஆகியவற்றை பெற்றனர் என்பது, சங்க இலக்கிய பதிவு. விஜயதசமி நாளில் கல்வி, கலைகள் என, இந்நாளில் எது தொடங்கினாலும் வெற்றியுடன் முடியும் என்பது நம்பிக்கை.
குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கும் நாள், அவர்களின் வாழ்நாளில் மிக முக்கியமான நாள். அவர்களது ஆரம்ப நிலை கல்வியறிவு தான், அவர்கள் வாழ்நாள் முழுதும், அறிவாற்றலுக்கும், நற்பண்புகளுக்கும் துணை நிற்கிறது. நவராத்திரியில், முப்பெருந்தேவியரின் பூஜை முடிந்த பின் வரும், 10வது நாளான விஜயதசமியன்று தொடங்கப்படும் எந்தவொரு செயலும், சிறந்த வெற்றி தரும் என்பது நம்பிக்கை. அந்த தினத்தில், குழந்தைகள் கற்றுக் கொள்ள துவங்கும் கலையில், அவர்கள் ஒன்றிவிடுவர். விஜயதசமியன்று, குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்யப்படுகிறது.‘அக்ஷரபியாசம்’ என்றும் இதை கூறுகின்றனர். கல்வி கற்றுத்தரும் குருவின் பங்கு, இதில் மிக முக்கியம். அறிவை கற்றுத்தரும் குருவை சிறப்பிப்பதாகவும், இந்நிகழ்வு நடக்கிறது. அப்பா, தாத்தா அல்லது தாய் மாமாவின் மடியில், குழந்தைகளை அமர வைத்து கொள்வர். ஒரு தட்டில், அரிசியை முழுவதுமாக பரப்பி வைத்துக் கொள்வர். குழந்தையின் சுட்டு விரலை பிடித்து, தட்டில் உள்ள அரிசியின் மேல் தங்கள் தாய் மொழியின் எழுத்தை, எழுத வைப்பார். சிலர் ‘ஓம் ஸ்ரீகணபதையே நமஹ’ என்றும் எழுதுவர். பின், தங்க மோதிரத்தை கொண்டு, குழந்தையின் நாவில் எழுதுவார்கள். ‘குழந்தை தடையின்றி எழுதவும், பேசவும் இந்த சுபநிகழ்ச்சி ஆரம்பமாக இருக்கட்டும்’ என்பதே, இதற்கான அடையாளம். விஜயதசமியை முன்னிட்டு, அரசு பள்ளிகள் வழக்கம் போல் திறந்திருக்கும். குழந்தைகள், அதிகளவில், பள்ளிகளில் சேர்க்கப்படுவதோடு, கல்வியாண்டின் இறுதி சேர்க்கை நாளாகவும் இது அமையும்.