பதிவு செய்த நாள்
27
அக்
2020
04:10
சென்னை : கேரள மாநிலம், எடநீர் மடாதிபதியாக, சச்சிதானந்த பாரதி சுவாமிகள் நேற்று பொறுப்பேற்றார்.
கேரள மாநிலத்தில் உள்ள, எடநீர் மடாதிபதியான ஸ்ரீ கேசவானந்த பாரதி சுவாமிகள், 60, கடந்த மாதம், 6ல் சித்தி அடைந்தார். இவர், காஞ்சி மடத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர். உச்சநீதிமன்றத்தில், அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்பு பற்றி, புகழ் பெற்ற தீர்ப்பை பெற்றுத் தந்தவர். இந்த தீர்ப்பு பின்நாளில், கேசவானந்த பாரதி வழக்கு என, பல நீதிமன்றங்களில் பேசப்பட்டு, பல்வேறு தீர்ப்புகளுக்கு முன்னோடியாக அமைந்தது.
இந்நிலையில், ஸ்ரீ கேசவானந்த பாரதி சுவாமிகள் தன் வாழ்நாளின் போதே, ஸ்ரீ ஜயராம மஞ்சத்தாயா என்பவரை, தன் வாரிசாக நியமிக்க விரும்புவதாக பக்தர்களிடம் கூறியிருந்தார். அதேபோல, ஸித்தியடைந்த நாளில், ஒருவேளை எனக்கு எதிர்பாராத சூழ்நிலை ஏற்பட்டால், காஞ்சி மடாதிபதியை அணுகி, அவரது ஆசியையும், வழிகாட்டுதல் களையும் பெற்று, ஸ்ரீ ஜயராம மஞ்சத்தாயாவுக்கு, சன்யாச ஆஸ்ரம உபதேசம் வழங்க வைத்து, எடநீர் மடத்தின் வாரிசாக நியமிக்க வேண்டும் என, பக்தர்களிடம், ஸ்ரீ கேசவானந்த பாரதி சுவாமிகள், விருப்பம் தெரிவித்திருந்தார். இதன்படி, எடநீர் மடத்தின் நிர்வாகிகள் மற்றும் பக்தர்களுடன், ஸ்ரீ ஜயராம மஞ்சத்தாயா, காஞ்சிபுரம் வந்தடைந்தார். அங்கு, காமாட்சி, ஏகாம்பரநாதர், வரதராஜ சுவாமி கோவில்களில் தரிசனம் செய்தார்.பின், தேனம்பாக்கம் ஸ்ரீமடம் முகாமுக்கு சென்று, ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து, தரிசனம் செய்தார். பின், ஸ்ரீ விஜயேந்திரர் ஆசியுடன், பல்வேறு கோவில்களுக்கு சென்று தீர்த்த யாத்திரை மேற்கொண்ட, ஸ்ரீ ஜயராம மஞ்சத்தாயா, கடந்த, 10ம் தேதி முதல், உரிய சடங்குகளை மேற்கொண்டார். இந்நிலையில், காஞ்சிபுரம் அருகில் உள்ள ஓரிருக்கை சன்னிதியில், எடநீர் மடாதிபதியாக அவரை நியமிக்கும் நிகழ்வு நேற்று நடந்தது. ஸ்ரீ விஜயேந்திரர் அருளாசி வழங்க, ஸ்ரீ ஜயராம மஞ்சத்தாயா, எடநீர் மடாதிபதியாக பொறுப்பேற்றார். எடநீர் மடத்து சம்பிரதாயப்படி, ஸ்ரீ ஜயராம மஞ்சத்தாயாவுக்கு, ஸ்ரீ சச்சிதானந்த பாரதி என, நாமம் சூட்டபட்டது.