மதுரை : மதுரையில் நடுகல் வீரர் கருப்பசுவாமி, தானிய சேமிப்பு குழுமை, திருவள்ளுவர், நந்தனார் என மூன்று தொல்லியல் சின்னங்களை தொல்லியல் ஆய்வு சங்க ஆய்வாளர்கள் தேவி அறிவுச்செல்வம், சசிகலா கண்டுபிடித்து உள்ளனர்.
அவர்கள் கூறியதாவது:தெற்குவாசலில் நடுகல் வீரராக கருதும் கருப்பசுவாமி சிற்பம் உள்ளது. கருப்பசுவாமி தமிழரின் பழங்காலத்திலிருந்து வழிபாட்டில் உள்ளார். 3 அடி உயர சிற்பமாக உள்ள கருப்பசுவாமி வலது கையில் ஓங்கிய வாள், இடது கையில் சுக்கு மாந்தடி ஊன்றி நிற்கிறார். இச்சிற்பம் இங்குள்ள பெண் தெய்வ கோயில் சுவரில் உள்ளது. இவர் காவல் தெய்வமாக திகழ்கிறார். தானியங்களை சேமிக்கும் குழுமை ஒன்று மேலுார் ரோடு மாங்குளம்ஏரிக்கரையில் கிடைத்தது.மக்கள் தானியங்கள் சேமித்து கீழேயுள்ள துளை வழி தேவையான அளவு எடுக்க குழுமையின் கீழ் துளையும் உள்ளது. இவ்வூர் அருகே அம்மன்பட்டியில் முற்கால பாண்டியர் குடைவரை கோயில் உள்ளது. இப்பகுதி கி.பி., 6-7ம் நுாற்றாண்டுகளில் வளமாக இருந்திருக்கலாம். திருப்பரங்குன்றம் தியாகராஜர் கல்லுாரி செல்லும் வழியில் 4 அடி உயர பலகை கல்லில் திருவள்ளுவர், நந்தனார் புடைப்பு சிற்பங்களாக உள்ளனர். கல்லின் கீழே திருவள்ளுவர், நந்தனார் என கல்வெட்டு பொறித்து உள்ளனர். கல்வெட்டை வைத்து இரு ஆண் உருவங்களையும் அடையாளம் காண்டோம். திருவள்ளுவர் இடது கையில் சுவடிகள், வலது கையில் எழுத்தாணி பிடித்து விழிகள் மூடி உள்ளார். திருவள்ளுவர் அருகே தாடி, மீசையுடன்யானை மீது அமர்ந்த நந்தனார் சிற்பம் உள்ளது. இவரை 63 நாயன்மார்களில் ஒருவரான நந்தனாராக கருதலாம், என்றனர்.