ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் ஒதுங்கும் கடல்பாசியை, அப்புறப்படுத்த முடியாமல் நகராட்சி ஊழியர்கள் திணறுகின்றனர்.
வடகிழக்கு பருவ காற்று வீசும் சீசனில் பாக்ஜலசந்தி கடல் கொந்தளித்து, கடலுக்கு அடியில் வளரும் பாசிகள் பெயர்ந்து கரை ஒதுங்குவது வழங்கும். தற்போது வடகிழக்கு பருவ காற்று தீவிரமடைந்ததால், கடல்பாசிகள் பெயர்ந்து ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் தினமும் 2 முதல் 3 டன் ஒதுங்குகிறது.தினமும் நகராட்சி ஊழியர்கள் 5 பேர் தீர்த்த கரையில் ஒதுங்கும் கடல்பாசியை 3 டிராக்டரில் ஏற்றி, சுத்தம் செய்கின்றனர். ஆனால் அடுத்தடுத்து கரை ஒதுங்கும் பாசிகளை விரைவாக அள்ள முடியாமல் ஊழியர்கள் திணறுகின்றனர்.இதனால் அக்னி தீர்த்த கரையில் பாசிகள் குவிந்த சில மணி நேரத்தில், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதால் பக்தர்கள் சிரமத்துடன் புனித நீராடி செல்கின்றனர்.