பொள்ளாச்சி: சபரிமலை ஐயப்பன் கோவில் பிரசாதத்தை, தபாலில் பெற்றுக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. பொள்ளாச்சி கோட்ட தபால் கண்காணிப்பாளர் அறிக்கை:கொரோனா பரவல் காலம் என்பதால், பெருமளவில் பக்தர்கள் சபரிமலைக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்கும் வகையில், சுவாமி ஐயப்பனின் பிரசாதத்தை நேரடியாக வீட்டிலேயே பெற்றுக்கொள்ள, தபால்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கான நடவடிக்கையில், பொள்ளாச்சி கோட்டத்தில் உள்ள தலைமை மற்றும் துணை தபால் நிலையங்களில், இ-பேமென்ட் வாயிலாக பணம் செலுத்தி பிரசாதம் பெற்றுக்கொள்ளலாம். இதற்கான படிவத்தை பூர்த்தி செய்து, பிரசாத பாக்கெட் ஒன்றுக்கு, 450 ரூபாய் செலுத்தி, தபால் அலுவலகங்களில் பெறலாம். ஒரு நபர் அதிகபட்சம், 10 பிரசாத பாக்கெட்டுகள் பெற முன்பதிவு செய்யலாம். பாக்கெட்களில் சபரிமலை கோவிலின் அரவணை பாயாசம், நெய், குங்குமம், மஞ்சள், விபூதி மற்றும் அர்ச்சனை பிரசாதம் இருக்கும். அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் பிரசாதம் தேவைப்படுவோர், அதற்கென தனியாக விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.விண்ணப்பித்த நபருக்கு ஸ்பீட் போஸ்ட் வாயிலாக, வீடு தேடி பட்டுவாடா செய்யப்படும். மேலும் விபரங்களுக்கு, 97888 15985, 04259 224866 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.