பதிவு செய்த நாள்
09
டிச
2020
04:12
வீரபாண்டி: காலபைரவர் ஜென்மாஷ்டமியையொட்டி, கரபுரநாதர் கோவில் காலபைரவருக்கு, 108 சங்காபிஷேகம், 1,008 வடை மாலையுடன் சிறப்பு பூஜை நடந்தது. ஒவ்வொரு ஆண்டும், கார்த்திகை மாதத்தில் வரும், தேய்பிறை அஷ்டமியை, காலபைரவரின் ஜென்மாஷ்டமியாக கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டின் ஜென்மாஷ்டமி நேற்று நடந்தது. காலை, 9:00 மணிக்கு, 108 சங்குகளில் புனித நீரை நிரப்பி, மலர்களால் அலங்கரித்து, சிறப்பு யாக பூஜை நடத்தப்பட்டது. பூர்ணாஹூதி முடிந்து, சங்கு மற்றும் கலசத்தில் வைக்கப்பட்ட புனித நீரால், காலபைரவருக்கு அபி?ஷகம் செய்யப்பட்டது. மூலவர் காலபைரவர், சன்னதி கோபுரத்தில் உள்ள அஷ்ட பைரவர் சிலைகளுக்கு, 1,008 வடைமாலை சார்த்தி, சிறப்பு சந்தனகாப்பு அலங்காரத்துடன் தீபாராதனை காட்டப்பட்டது. இதே போல், சேலம் இரண்டாவது அக்ரஹாரம் சேர்மன் ராஜரத்தினம் தெருவில் உள்ள, சக்தி கணபதி கோவில் கால பைரவருக்கும், சிறப்பு யாக பூஜைகள் செய்து, ராஜ அலங்காரத்தில் பைரவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.