பதிவு செய்த நாள்
29
மே
2012
12:05
வாயு ஸம்ஹிதை (உத்திர பாகம்): நமச்சிவாய ஸோமாய ஸகணாய ஸூநவே, ப்ரதாந புருஷேஸாய ஸர்கஸ்தித்யந்த ஹேதவே
சர்வ மங்களங்களைக் கொடுப்பவனும் ஸோம ஸ்வரூபியும் அஷ்டாதச கணங்களோடும் புத்திரர்களுடனும் கூடியிருப்பவனும், பிரகிருதிக்கும் புருஷனான நாராயணனுக்கும் பிரபுவும், சிருஷ்டி ஸ்திதி சங்காரங்களுக்கு காரண பூதனுமாகிய சிவமூர்த்தியை வணங்குகிறேன்.
சந்திர ப்ரதி பூயஸ்ய ஐஸ்வர்யஞ்சாபி ஸர்வகம்
ஸ்வாமித் வஞ்சவி புத்வஞ்ச ஸ்வபாவம் ஸம்ப்ரசக்ஷதே
தமஜம் விஸ்வகர்மாணம் சாஸ்வதம் சிவமத்வயம்,
மஹாதேவம் மஹாத்மாநம் வ்ரஜாமி சரணம் சிவம்.
எந்த இடத்தும் தடைபடாத சக்தியும் எல்லா இடத்திலும் உள்ள ஐஸ்வரியமும், சுவாமித்துவமும் சர்வ வியாபித்துவமும் எவனுக்கு இயல்பாக இருக்கிறதோ, அத்தகைய பிறப்பில்லாதவனும் பிரபஞ்சங்களையெல்லாம் படைத்தவனும் நிலையாக இருப்பவனும் மங்களஸ்வரூபனும் (தனக்கொத்த) இரண்டாவது பொருள் இல்லாதவனும் பரமாத்ம ஸ்வரூபனு மாகிய மஹாதேவனைச் சரணமடைகிறேன்.
1. கண்ணன் சிவதீøக்ஷ பெற்றது
முனிவர்கள் வாயுதேவனை நோக்கி, சுவாமி, சிவ கடாக்ஷம் பெற்ற உபமன்யு முனிவரிடம், விஷ்ணுவின் அவதாரமாகிய ஸ்ரீ கிருஷ்ணன் வந்து, தன் வினைச் சம்பந்தம் ஒழியும்படி ஞானதீøக்ஷ செய்து கொண்ட வரலாற்றையும் நாங்கள் தங்களிடமிருந்து கேட்க விரும்புகிறோம். ஆகையால் அதையும் தாங்கள் தயவுசெய்து எங்களுக்குச் சொல்ல வேண்டும் என்று வேண்டினார்கள்.
வாயுதேவன் மகிழ்ச்சியாகக் கூறத் துவங்கினார். முனிவர்களே! பூபாரம் தீர்த்தத் திருவவதாரஞ் செய்த கிருஷ்ணமூர்த்தி சிவஞானத்தை அடையவும் ஒரு நற்புத்திரனைப் பெறவுங் கருதி உபமன்யு முனிவரிடம் வந்து அவரை வலம் வந்து பணிந்தார். அப்போது உபமன்யு முனிவர் தம் கரத்தால் திருநீற்றை எடுத்து கண்ணனின் தேகத்தில் அணிவித்து பாசுபத தீøக்ஷ செய்து, பன்னிரண்டு மாத காலம் பாசுபத விரதத்தை அனுஷ்டிக்கச் செய்து, குற்றமில்லாததும் உயர்கதியைக் கொடுக்கவல்லதுமாகிய சிவஞானத்தை உபதேசித்தார். அந்த உபதேசம் பெற்ற ஸ்ரீகிருஷ்ணர் ஒரு நற்புத்திரனைப் பெறக்கருதிச் சந்திரசேகரனாகிய சிவபெருமானைக் குறித்துப் பெருந்தவஞ் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது அவரது தவத்துக்கு மகிழ்ந்த சிவபெருமான் உமாதேவியோடு அவர் முன் காட்சியளித்தார். ஸ்ரீகிருஷ்ணமூர்த்தி சிவபிரானைச் சாஷ்டாங்கமாகப் பணிந்து துதித்து நின்றார். சிவபெருமான் உனக்கு என்ன வரம் வேண்டும்? என்று கேட்டார். அதற்கு கண்ணன் எனக்கு ஓர் வல்லமை மிக்க நற்புதல்வன் வேண்டும் என்று விண்ணப்பித்தார். அன்பர்கள் விரும்பியவற்றையெல்லாம் கொடுக்கும் விரதத்தை மேற்கொண்ட சிவபெருமான் அவருக்கு அவ்வாறே ஒரு புத்திரன் உண்டாவான் என்று திருவருள் செய்து அந்தர்த்தானமானார். அத்தகைய வரத்தைப் பெற்ற கண்ணபிரான் களிப்புடன் தம் மனைவியை அடைந்து வாழ்ந்திருக்கும்போது தம் சாம்பவதி என்னும் மனைவியானவள் கருவுற்று உடல் மதர்ப்புற்று, இடை பருத்து, நடை தள்ளாடிச் சிவ கடாக்ஷத்தால் மஹா பலசாலியான ஒரு நற்புத்திரனை உத்தம முக்ஷர்த்தத்தில் பெற்றாள். அந்தப் புதல்வனைக் கண்டு மனமகிழ்ந்த கண்ணபிரான், அந்தணர், யாகசர் முதலியோருக்கு பொன்னும் மணியும் ஆடைகளும் அவர்கள் மகிழத் தானஞ் செய்தார். அம்பிகையுடன் கூடிய சிவபெருமான் அருளிய புத்திரனாகையால், அவனுக்குச் சாம்பன் என்று பெயரிட்டார். பிறகு, கண்ணன் தம் மனைவியோடும் புதல்வனாகிய சாம்பனோடும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வரும்போது, சாம்பன் பால் பருகியும், தவழ்ந்தும், நடந்தும், சிறுதேர் உருட்டியும் வளர்ந்து முனிவர்களால் ஞானமடைந்து, யானை, குதிரை, தேர் இவற்றைச் செலுத்தும் வல்லமையும் வில், வாள், அஸ்திரம் முதலியவற்றில் பயிற்சியும் பெற்றுச் சிறந்து விளங்கினான். இந்தச் சரிதத்தைப் படித்தவர்கள் வைகுண்ட பதவியில் ஸ்ரீ விஷ்ணுவினால் ஞானமடைந்து சிவகதியை அடைவார்கள் என்று வாயுதேவன் கூறினார்.
2. சிவனே - பசுபதி
முனிவர்கள் வாயுதேவனை நோக்கி, சுவாமி! பாசுபத ஞானம் என்பது யாது? சிவன் எங்ஙனம் பசுபதியாவான்? இந்த விஷயத்தைப் பற்றி ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி, உபமன்யு முனிவரிடம் எவ்வாறு விசாரித்தார்? இந்த விஷயங்களைத் தாங்கள் தயவு செய்து தெளிவுப்படுத்த வேண்டும் என்று கேட்டார்கள். வாயுதேவன் சொல்லத் துவங்கினார்.
முன் மந்திரகிரியில் நீலகண்டனாகிய சிவபெருமான் உமாதேவியாருக்கு உபதேசித்த விஷயமே பாசுபத ஞானமாகும். அந்த ஞானத்தையே கிருஷ்ண பகவானுக்கு உபதேசித்தவாறே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். பூர்வம் உபமன்யு முனிவரிடம் கண்ணபிரான் சென்று, அவரைச் சாஷ்டாங்கமாகப் பணிந்து முனிவர் தலைவரே! சிவபெருமான் உமாதேவியாருக்கு உபதேசித்துள்ள பாசுபத ஞானத்தைக் கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும் என்றும் பசுக்கள் யாவர் என்றும் பசுக்கள் எவ்வகையாகப் பாசத்தால் பிணிக்கப்பட்டுள்ளன என்றும் அந்தப் பசுக்கள் தம்மை பந்தித்துள்ள பாசத்திலிருந்து விடுபடும் வகை இன்னதென்றும் அறிந்துகொள்ளவும் தங்களிடம் வந்தேன். அவற்றைத் தயவுசெய்து எனக்குக் கூறவேண்டும்! என்று கேட்டார். உபமன்யு முனிவர் சிவபெருமானையும் உமாதேவியாரையும் தியானித்துச் சொல்லத் துவங்கினார்.
பிரமன் முதல் தாவரம் ஈறாகவுள்ள யாவும் பசுக்களே! அந்தப் பசுக்களுக்கெல்லாம் பிரபுவாக இருக்கும் சிவபெருமானே! பசுபதி இவ்வகையாக வேதங்கள் நான்கும் சிவபெருமானே பசுபதி என்று கூறுகின்றன. மாயா மலங்களாகிய பாசத்தால், பசுக்களைப் பதியாக உள்ள பகவான் கட்டுகிறான். மாயாபோக்தர்கள் சிவபெருமானை நன்றாக உபாசித்தால், அதே சர்வேசுவரன் அந்த மலசம்பந்தத்தை அகற்றுகிறான். இருபத்து நான்கு தத்துவங்களும் மாயா கர்ம குணங்கள் விஷயம் என்று சொல்லப்படும். இவையே ஜீவர்களுக்குப் பந்தனம் செய்பவை. பிரமாதி ஸ்தம்ப பரியந்தமான பசுக்களை மஹேஸ்வரன் பாசத்தால் கட்டி, அவரவர்கள் செய்ய வேண்டிய காரியங்களைச் செய்விக்கிறான். அந்த மஹாதேவனுடைய ஆக்ஞையாலேயே பிரகிருதியும் புருஷனும் கூடி புத்தியை உண்டாக்கும். புத்தி அகங்காரத்தை உண்டாக்கும். அகங்காரம் மனத்தையும் ஞானேந்திரிய கர்மேந்திரங்களையும் பஞ்ச தன்மாத்திரைகளையும் படைக்கும். அவை பஞ்சமஹாபூதங்களைத் தோற்றுவிக்கும். அந்தப் பஞ்ச பூதங்களும் பிரமன் முதல் எறும்பு ஈறாகவுள்ள எல்லா உயிர்களுக்கும் தேகத்தை உண்டாக்கும். புத்தி நிச்சயத்தைச் செய்யும். அகங்காரம் அதிக ஆசையால் நான் என்று அபிமானிக்கும். சித்தமானது நிச்சயத்தை உண்டு பண்ணும். மனம், சங்கற்பத்தை உண்டாக்கும். ஞானேந்திரியங்கள் ஐந்தும் விஷயங்களை உணரும் கர்மேந்திரியங்கள் ஐந்தும் ஐந்து கர்மங்களைச் செய்யும். இவை யாவும் சர்வேசனது கட்டளையால் தத்தமது தொழிலைச் செய்யும், அவருடைய கட்டளையில்லாத வேறு கர்மங்களை அவை செய்யமாட்டா. அந்தச் சர்வேசனுடைய ஆக்ஞை, எல்லாராலுமே அதிக்கிரமிக்க முடியாது. ஆகாயம், சர்வேசனுடைய ஆக்ஞையாலேயே சர்வ வியாபியாக இருந்து, எல்லாப் பூதங்களுக்கும் அவகாசத்தைக் கொடுக்கிறது. வாயு, பிராண அபானாதி பெயர்களை வெவ்வேறாகப் பெற்று, எல்லாப் பிரபஞ்சத்தையும் பரிக்கிறது. அக்கினி, தேவர்களுக்குரிய ஹவ்யத்தையும் பிதுர்களுக்கு உரிய கவ்யத்தையும் பிறர்க்குரிய பாகத்தையும் செய்கிறது. ஜலம், எல்லாப் பிராணிகளுக்கும் பிழைப்பைக் கொடுக்கிறது. பிருத்வி ஜகம் முழுவதையும் தாங்குகிறது.
இந்திரன் அந்த சர்வேசனுடைய ஆக்ஞையாலேயே தேவராஜனாகி தேவர்களைக் காத்தும் அசுரர்களை அழித்தும் மூவுலங்களையும் காக்கிறான். இயமன் பாவிகளாக இருந்து இறந்தவர்களுக்கு நரக வாதனையையும் பிழைத்திருப்பவர்களுக்கு வியாதிகளையும் கொடுத்துத் தர்மன் என்று வழங்கப்படுகிறான். நிருதி, சாஸ்திர ஹீனமாகச் செய்த கர்ம பலன்களை அழித்து ராக்ஷசர்களுக்குப் பிரபுவாக இருக்கிறான். வருணன் ஜலத்திற்குப் பிரபுவாக இருந்து, பாவிகளைப் பாசத்தால் கட்டுகிறான். குபேரன், பிராணிகள் செய்த புண்ணியத்திற்கு ஏற்ப நவநிதிகளையும் கொடுக்கிறான். ஈசானன், நல்ல புத்திமான்களுக்கு சம்பத்தையும் ஞானத்தையும் கொடுத்து துன்மார்க்கனுக்கு நிக்கிரகத்தையும் ஈஸ்வராக்ஞையாலேயே செய்கிறான். சர்வேசனுடைய கட்டளையாலேயே ஆதிசேஷன் உலகம் முழுவதையும் தன் தலைக்கு மேல் வைத்துத் தாங்குகிறான். பிரமன் சிவாக்ஞையாலேயே சிருஷ்டி செய்கிறான். தானே மும்மூர்த்திகளாகி முத்தொழிலையும் செய்கிறார் விஷ்ணு. உலகம் முழுவதையும் சிவாக்ஞையாலேயே பரிபாலிக்கிறார். உருத்திரன் சிவாக்கினியாலேயே உலகத்தை அழிக்கிறார். இந்த மூர்த்திகள் ஒவ்வொருவரும் மும்மூர்த்திகளாகி முத்தொழில்களையும் செய்கிறார்கள். காலமானது ஈஸ்வராக்கினையால் யாவற்றையும் உண்டாக்கிக் காத்து, அழிக்கிறது. இவ்வகையாக ஈசனே எல்லாவகையிலும் உலக காரியங்களைச் செய்து வருகிறான். ஆகாயத்திலுள்ள சூரியன் மேகங்களால் மழையைப் பெய்வித்தும், பனியைப் பெய்வித்தும், வெய்யிலை காயவைத்தும் பணிசெய்கிறான். சந்திரன் சிவாக்கினையால், மலர்களை மலர்த்தி, எல்லாப் பயிர்களையும் வளர்த்து காய்க்கனி முதலியவற்றை விருத்திசெய்து, தேவர் முதலியவர்களுக்கு ஆகாரம் கொடுத்து உதவுகிறான். ஆதித்தர்கள், வசுக்கள், உருத்திரர்கள், அஸ்வினி தேவர்கள் மருத்துக்கள், கேசரர்கள், முனிவர்கள், சித்தர்கள், நாகர்கள், மானுடர்கள், மிருகங்கள், பக்ஷிகள், கீடகாதிகள், நதிகள், சமுத்திரங்கள், பர்வதங்கள், வனங்கள், சரசுகள், வேதங்கள், சாஸ்திரங்கள், மந்திரங்கள், யாகங்கள் முதலிய யாவையும் பசுக்கள், காலாக்கினியாதி சிவ பரியந்தமான யாவும் பசுக்களே. பிரமாண்டங்களும் அவற்றின் ஆவரணங்களும், சென்றவை இனி வருவதையும் எண்ணிறந்தனவும் திக்குகளும், கால பேதங்களும் நாம் காண்பனவும் கேட்பனவும் சங்கரனுடைய கட்டளையாலேயே நிலை பெற்றிருக்கின்றன. சர்வேசனுடைய உத்தரவினாலேயே பூமி நிலைத்துள்ளதும் பர்வதங்கள் இருப்பதுவுமாம். மேகங்கள் சமுத்திரங்கள் ஜோதிஷ்கணங்கள் இந்திராதி தேவர்கள் சராசரம் முழுவதும் தத்தமது நிலையில் இருப்பனவாம்.
3. யாவும் சிவன் செயல்
உபமன்யு முனிவர் ஸ்ரீ கிருஷ்ணனை நோக்கி, கிருஷ்ணா! வேதத்தில் சிவபெருமானைப் பற்றிச் சொல்லப்பட்ட ஒரு கதையுண்டு அதைக் கேட்பாயாக. முன்பொரு சமயம் இந்திரன் முதலிய தேவர்கள் போர் செய்து அரக்கர்களை வென்று ஒருவரோடொருவர், நான் வென்றேன், நான் வென்றேன் என்று கலகஞ் செய்து கொண்டிருந்தார்கள். அப்போது சாம்பவமூர்த்தி தம் சொரூபத்தை விலக்கி ஒரு யக்ஷ வடிவம் கொண்டு, தேவர்களே! நீங்கள் ஏன் போர் செய்கிறீர்கள்! என்று ஒரு துரும்பை பூமியின் மேல் வைத்து, இதை அசைத்து விகாரப்படுத்தக்கூடியவனே, அரக்கர்களை வென்றவன் என்று சொல்ல அதைக் கேட்ட இந்திரன் கோபத்துடன் புன்னகை செய்து அந்தத் துரும்பை எடுக்க எத்தனித்து, தன்னால் முடியாது இருந்தான். அப்போது அவன் தன் வஜ்ராயுதத்தை எடுத்து அதன்மீது செலுத்த, அதன் கூர்வாய் மழுங்கி நிலத்தில் விழுந்தது. இவ்வகையாக இந்திரன் ஆற்றலிழந்தான். பிறகு அக்கினித்தேவன், நான் இதை எரித்துவிடுவேன்! என்று சமீபத்து, அதை எரிக்க முயலும் போது அவனே எரிந்தான். அதைக்கண்ட வாயுதேவன் நான் இந்தத் துரும்பை ஊதிவிடுவேன்! என்று சொல்லிப் பிரளயகாலத்தில் வீசும் பிரசண்டவேகத்துடன் அதன்மீது மோதினான். அப்போதும் அது இடம் விட்டு அசையவில்லை. காற்றுத்தேவன் தூரமாகச் சென்று விழுந்தான். அதைக்கண்ட வருணன், இந்தத் துரும்பை ஒழிப்பேன் என்று கூறி, தண்ணீர் வெள்ளத்தை உண்டாக்கினான். அதனால் வெள்ளம் ஒழிந்ததேயல்லாமல் அந்தத் துரும்பு அசையவே இல்லை. இவற்றையெல்லாம் கண்ட இந்திரன் மிகவும் ஆச்சரியமடைந்து, யக்ஷரூபத்தில் இருந்த சிவபெருமானை நோக்கி, நீ யார்? என்று கேட்க யக்ஷரூபி ஒன்றும் பதில் சொல்லாமல் அங்கிருந்து மறைந்தார். அந்தச் சமயத்தில் உலக மாதாவாகிய உமாதேவி, அமரர்களின் அகந்தையையும் சந்தேகத்தையும் விலக்கக் கருதி, தேவர்கள் அனைவருக்கும் தெரியும்படி, ஆகாயத்திலே தங்கினாள். ஈஸ்வரியைக் கண்ட இமையவர்கள் கூட்டமாகச் சென்று, தேவியைப் பணிந்து துதித்து, தேவி! இங்கு ஒருவன் வந்து, துரும்பு ஒன்றை நட்டு, எங்கள் வலிமையைத் தொலைத்துச் சென்றான். அவன் யார்? இதை எங்களுக்குச் சொல்ல வேண்டும்? என்று கேட்டார்கள். தேவியானவள் மகிழ்ந்து, அமரர்களே! அங்ஙனம் செய்தவர், மனம், வாக்கு, காயம் என்ற திரிகரணங்களாலும் அறியத்தக்கவர் அல்லர். தேவர், மாநுடர், சராசரங்களோடு அண்டாண்ட பிரம்மாண்டங்களையும் படைத்தும் அவற்றைப் பாலித்தும் அழித்தும் விளங்குவர் அவரே சிவபெருமான். அவரே நமது தலைவர். அவரே எங்களுடைய வல்லமையை உங்களுக்கு உணர்த்தும் படி, அந்தத் துரும்பை, அளவறி கருவியாக அமைத்தார் என்று கூறி, ஜகன் மாதாவாகிய தேவியும் மறைந்தாள். தேவர்கள் அனைவரும் விஷயத்தை உணர்ந்து, சிவபெருமானின் கருணையை வியந்து, தமக்குள் கலகம் ஒழிந்து, சந்தோஷத்துடன் தங்கள் இருக்கைகளை அடைந்தார்கள் என்று கூறி, அந்தச் சிவபெருமானாலேயே உலகம் முழுவதும் நிலைத்துள்ளவகையும் கூறுவேன் என்று உபமன்யு முனிவர், கண்ணனை நோக்கி, மேலும் சொல்லத் துவங்கினார் என்று வாயுதேவன் தொடர்ந்து கூறலானார்.
4. பஞ்சபிரமமும் அஷ்ட மூர்த்தமும்
கிருஷ்ணா! சர்வ ஆத்மஸ்வரூபியான சாம்பவமூர்த்தியின் மூர்த்திச் சிறப்பால் இந்தப் பிரபஞ்சம் முழுவதும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. சிவபெருமானே தனது மூர்த்தி பேதங்களால், எங்கும் வியாபித்திருப்பதாலேயே சராசரப் பிரபஞ்சம் முழுவதும் அவரை சிவன் என்று கூறும். அவை பிரமன், விஷ்ணு, ருத்திரன், மஹேஸ்வரன், சதாசிவன் என்ற மூர்த்திகளாகும். அவை தவிர பஞ்சப்பிரமம் என்று சொல்லப்படும் ஐந்து மூர்த்தங்களும் உள்ளன. அந்த மூர்த்தங்களால் வியாபிக்கப்படாதது எது ஒன்றுமில்லை. ஈசானம், தற்புருஷம். அகோரம், வாமதேவம், சத்தியோஜாதம் என்ற ஐந்துமே பஞ்சப் பிரமமூர்த்தங்களாகும். முற்பட்டதாகிய ஈசானமூர்த்தி மிகச் சிறந்தது. அது பிரகிருதியை அனுபவிக்கும் புருஷனைச் சாக்ஷõத்தாக அதிஷ்டித்துள்ளது. தற்புருஷ மூர்த்தியானது திரிகுணாத்தும் சொரூபமும் போக்கியமயமுமான அவ்வியக்கத்தை அதிஷ்டித்துத் தொழில்கள் நடத்தும். மஹாபூஜ்யமாகவுள்ள அகோரமூர்த்தி தர்மாதி அஷ்டாங்க சம்யுக்தமான புத்தி தத்துவத்தை நடத்தும் வாமதேவமூர்த்தி, அகங்காரத்தை அதிஷ்டித்து உள்ளது என்று ஆகமங்கள் கூறும். சத்தியோஜாத மூர்த்தி மனதை நடத்தும் என்று விவேகிகள் சொல்லுகிறார்கள். ஈசானன், செவி, வாய், சப்தம், ஆகாயம் ஆகியவற்றுக்குத் தலைவன். தற்புருஷன் துவக்கு, பரணி ஸ்பரிசம் வாயுக்கள் ஆகியவற்றுக்குத் தலைவன் அகோரமூர்த்தி சட்சுசு, பாதங்கள் உருவம், அக்கினி இவற்றுக்கு ஈஸ்வரன், வாமதேவ மூர்த்தி, நா, குதம், இரசம், ஜலம் இவற்றுக்குத் தலைவன், சத்தியோஜாத மூர்த்தி நாசி, உபஸ்தம், கந்தம், பூமி, இவற்றுக்குப் பிரபு என்று உபமன்யு முனிவர் உரைத்தார்.
5. சிவசக்தி மகிமை
கிருஷ்ணமூர்த்தி, ஷட்குண ஐஸ்வரியரான உபமன்யு முனிவரை நோக்கி, சுவாமி! உலகம் யாவும் இஷ்டமூர்த்திகளால் வியாப்தமாகவுள்ளது என்று தேவரீர் சொல்லக்கேட்டு உணர்ந்தேன். பார்வதி பரமேஸ்வரருடைய விபூதியை உண்மையாக உணரவிரும்புகிறேன். அந்தப் பார்வதி பரமேஸ்வரர்கள் எப்படிப் பிரபஞ்சத்தை அதிஷ்டித்திருக்கிறார்கள்? என்று கேட்க, உபமன்யு முனிவர், சிவபெருமானைக் தியானித்துச் சொல்லத் துவங்கினார்.
கிருஷ்ணா! நீ கேட்ட பார்வதி பரமேஸ்வரருடைய விபூதியையும் உண்மை நிலையையும் சுருக்கமாகச் சொல்லுகிறேன். விவரமாகச் சொல்ல நான்முகனாலும் இயலாது. உமாதேவியே சக்தி சிவபெருமானே சக்தியையுடையவன். சக்தி சக்திமான்களுடைய விபூதிலேசமே இந்தப் பிரபஞ்சம் முழுதுமாகும். ஜடரூபமான பொருளும், சித்ரூபமான பொருளும் ஆகிய இரண்டும் சுத்தம் என்றும் அசுத்தம் என்றும் பெயர்களைப் பெறும். அன்றியும் பரம் என்றும் அபரம் என்றும் பெயர்களைப் பெறும். சித்ரூபமானது ஜடத்தைப் பொருந்திய பிரகிருதியை உண்டு செய்யும். அந்த ஞான ரூபமே சுத்தம் என்றும் பரம் என்றும் சொல்லப்படும். சித்து அசித்து முதலியவற்றுக்கெல்லாம் சிவனுஞ்சக்தியுமே தலைவர்கள். ஆகையால் பிரபஞ்ச முழுவதும் சிவசக்திகளின் ஸ்வாதீனத்தில் இருக்கும். அவ்வாறில்லாமல், இவர்கள் பிரபஞ்சத்தின் வசத்தில் இருப்பவர்களல்ல. இவர்கள் இருவரும் பிரபஞ்சத்துக்குப் பாலகர்களாகையால் விஸ்வேஸ்வரர் என்று சொல்வார்கள். சந்திரிகையில்லாமல் சந்திரனும், பிரபை இல்லாமல் சூரியனும் பிரகாசியாததுபோல, சிவபெருமான் இருந்தாலும் சக்தியில்லாமல் பிரகாசிக்க மாட்டான். ஆகையால் சிவனைப் போலவே சக்தியும் சக்தியைப் போலவே சிவனும் ஆகும். இவர்களுக்குத் தாரதம்மியம் கிடையாது. சக்தியில்லாமல் சிவனில்லை! சிவனில்லாமல் சக்தியில்லை. சிவன் சக்தியுடன் கூடியிருந்தே தேகிகளுக்குப் பக்தி முக்திகளைக் கொடுக்க வல்லவனாவான். ஏகமாகிய பராசக்தி அபர சக்திகளைச் சிருஷ்டி செய்யும். அந்தச் சக்தியே மூலப்பிரகிருதி, மாயை முக்குணங்கள் என்று சொல்லும்படிப் பிரியும் பராசக்தியே சிவதத்துவம் முதலாகப் பிரகிருதி ஈறாக ஜகம் முழுவதையும் விரிக்கும். எம்பெருமானைப் பிரியாமல் எள்ளில் எண்ணெயைப்போல விளங்கும் பராசக்தி, படைப்புக்காலத்தில் ஜனித்தும், அதனிடமாகக் கிரியாசக்தி தோன்றும். அந்த கிரியாசக்தியே மூலப்பிரகிருதியை அதிஷ்டித்து, நாத தத்துவத்தை உண்டு செய்யும் நாததத்துவத்திலிருந்து விந்து ஜனிக்கும். விந்துவிலிருந்து சதாசிவன் உதிப்பான். சதாசிவத்திலிருந்து மஹேஸ்வரன் உதிப்பான். மஹேஸ்வரனிடத்தில் சுத்தவித்தை தோன்றும். அந்தச் சுத்தவித்தையை வாகீஸ்வரருக்குச் சக்தியாகிய வாகீஸ்வரி என்று கூறப்படும்.
இவ்விதமாகச் சுத்த தத்துவங்கள் ஐந்தும் தோன்றிய பிறகு, அனந்தன் என்னும் வித்தியேஸ்வரனால் மாயை யானது காலம், நியதி, கலை வித்தைகளைத் தோன்றச் செய்யும். கலையிலிருந்து இராசத்துவமும் புருஷதத்துவமும் தோன்றும். மாயையிலிருந்து திரிகுணப்பகுதி ஜனிக்கும். அவற்றிலிருந்து எண்ணற்ற அண்டங்களும் தேகங்களும் ஜனிக்கும். ஆகையால் உலகம் முழுவதும் சக்தி மயமேயாகும். இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்திகளால் சிவன் இவ்வுலகக் காரியத்தை நடத்துகிறான். அவற்றில் இச்சாசக்தி அறியும் ஞானசக்தி அதற்கு இது காரணம் என்று உணர்த்தும். கிரியாசக்தி விரும்பிய தொழிலைச் செய்யும். பராசக்தியின் ஏவலால் அபரசக்தி உலகை உண்டாக்கும். சிவனும் சக்தியும் இல்லாவிட்டால் ஜகத் இல்லை. சிவனும் சக்தியுமாகப் படைத்த உலகைச்சாத்தம் என்பார்கள். சிவனே தந்தை; சக்தியே தாய் சிவனே பரமான்மா. சக்தியே மனோன்மணி, சிவனே மஹேஸ்வரன்; சக்தியே மாயை; சிவனே புருஷன், சக்தியே பிரகிருதி, அச்சிவனும் சக்தியுமே உருத்திரனும் உருத்திராணியும் திருமாலும் கமலையும், பிரமனும் பிரமிணியும் சூரியனும் பிரபையும் இந்திரனும் இந்திராணியும் அக்கினியும் ஸ்வாஹா தேவியும், யமனும் யாமியும், நிருதியும் நைருதியும் குபேரனும் புத்தியும் சந்திரனும் ரோகிணியும், ஈசானனும் ஈசானியும் அனந்தனும், அனந்தையும், காலாக்கினி. ருத்திரனும். காளியும் சுவாயம்பு மனுவும் சதருபையும், தக்கனும், பிரசூதியும் ருசியும் ஆஹூதியும், பிருகுவும், கியாதியும், மரீசியும், சம்பூதியும், அங்கிரசும், ஸ்மிருதியும், அத்திரியும், அநுசூயையும், காசிபனும் அதிதியும், வசிஷ்டனும் அருந்ததியுமாக ஆணுருவங்கள் எல்லாம் சிவனும் பெண்ணுருவங்கள் எல்லாம் சக்தியுமாம். விஷயங்கள் எல்லாம் சக்தி; அவைகளை நுகர்வோன் சிவன், கேட்பவன் சிவன், கேட்டிடப்படுவது சக்தி தொடுவோன் - சிவன்; தொடப்படுவது சக்தி காண்பவன்- சிவன். காணப்படுவது சக்தி, சுவைகள் சக்தி; சுøவுப்போன் சிவன் கணங்கள் சக்தியும் அவற்றை அநுபவிப்பவன் சிவனுமாகும்.
அறிபவன் சிவன் அறிபவை சக்தி; உயிரே சிவன் உடலை சக்தி பகல் சிவன், இரவு சக்தி ஆகாயம் சிவன் பூமி சக்தி சமுத்திரஞ் சிவன் அதன் கரை சக்தி மரங்கள் சிவன் அவற்றில் படரும் கொடிகள் சக்தி சொல் சக்தி அதன் பொருள் சிவன் இவ்வகையாகச் சிவனும் சக்தியும் எப்பொருளிலும் ஒருவரையொருவர் பிரியாது உறைவார்கள். சிவ சக்திகளின் விபூதிகளில் சிலவற்றையே நான் கூறினேன். அநேக ஆயிரம் ஆண்டுகள் சொன்னாலும் அது சொல்லி முடியாதது பிரகிருதி முதலிய விபூதியானது. இப்பொழுது நான் சொன்ன விபூதியாகும். பிருகிருதிக்கு மேற்பட்ட விபூதியை எனக்குத் தெரிந்தவரையில் சிறந்த சிவபக்தனான உனக்குச் சொன்னேன். இந்தச் சிவசக்திகளின் விபூதியைப் பக்தியில்லாதவர்களுக்கும் பாவிகளுக்கும் மாணவ ரல்லாதவருக்கும் சிவனடியாரல்லாதவருக்கும் சொல்லக்கூடாது. இதுவே, நான்கு வேதங்களிலும் சொல்லப்பட்டுள்ள பரம இரகசிய பொருள். இந்தக் கதையைச் சொன்னவர்களும் கேட்டவர்களும் தமது உறவினரோடு நெடுங்காலம் வாழ்ந்து உத்தம மைந்தர்களைப் பெற்று, சிவபக்தியில் சிறந்தவராகி தமது பாவங்களையெல்லாம் ஒழித்து சுகவாழ்வு வாழ்வார்கள்! என்று உபமன்யு முனிவர் சொல்லிவிட்டு மேலும் தொடர்ந்தார்.
6. ஈஸ்வரப் பிரபாவம்
கிருஷ்ணா! தாவரச் சங்கமங்களாகிய பிரபஞ்சம் முழுவதும் சிவசொரூபமேயாகும். இந்த உலகம் முற்றும் சிவரூபம் என்பதைப் பசுக்கள் அறியமாட்டா. அந்தச் சிவபெருமானை உள்ளபடியே உணர்ந்த பெரியோர்கள் அபர பிரமம் என்றும் பரப்பிரமம் என்றும் மஹாதேவன் என்றும் சிவன் என்றும் சர்வசாக்ஷி என்றும் பலவகையாகச் சொல்லுவார்கள். பூதம் முதல் பிரகிருதி ஈறாகவுள்ளவை அபர பிரமமாகும் ஞானரூபமே பரப்பிரமம். யாவற்றையும் படைக்குந்தன்மையாலும் பரம், அபரம் என்பவற்றை அறியும் மேம்பாடுடையவர்கள் பிரமம் என்பார்கள். வித்தை அவித்தைகளின் வடிவமென்றும் சத்து அசத்துக்களுக்கு முதற்பொருள் என்றும் சொல்லுவார்கள். க்ஷரம் என்றும் அக்ஷரம் என்றும் அந்த க்ஷரா க்ஷரங்களுக்குப் பரம் என்றும் சமஷ்டி என்றும் வியஷ்டியென்றும் இரண்டிற்கும் காரணம் என்றும் பிரதானம் என்றும் புருஷன் என்றும் மகா வியக்தம் என்றும் காலம் என்றும் விராட் என்றும் ஹிருண்ய கர்ப்பன் அந்தர்யாமியென்றும் பரன் என்றும் விசுவன் என்றும் தைசதன் என்றும் பவன் என்றும் பர்க்கன் என்றும் சொல்லுவார்கள். கருத்தாவுடன் கிரியை கூடுவதே காரியம் என்பதாகும். குற்றமற்ற தவமுடையவர்கள், கரணம் காரணம், சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம், விருணன், குணன், சுதந்திரன் சுதந்திரமில்லாதவன், குரூரன், சவுமியன் ஆசையுடையவன், நிராசையுடையவன். கிரியாவான் கிரியையில்லாதவன், இந்திரியமுள்ளவன். இந்திரியமில்லாதவன், அக்ஷரன், அழிவுடையவன் என்று பலவாறாகக் கூறுவார்கள். உருவம் அருவம் காணப்படுவது, காணப்படாதது, சொல்லப்படுவது சொல்லப்படாதது. சிந்தாஸ்வரூபம் சிந்தாதீதம், ஞானம், அஞ்ஞானம் உணர்வு, உணவற்றது என்று இவ்வகையாக அந்தப் பொருளைப் பலர் பலவகையாகச் சொல்வார்கள். எந்தவகையாகச் சொன்னாலும் இறுதியில் அந்தச் சிவபகவானையே அடைந்து அவன் திருவடி நிழலிலேயே வசிப்பார்கள். சிவபெருமானை உணரமாட்டாத, பசுக்கள், சக்கரம் போலச் சுழன்று வரும் பிறவிகளில், சிவ பெருமானை நன்றாக உணர்வார்களானால் பசுத்துவமும் பாசமும் ஒழிந்து, சிவபெருமானையடைந்து சிவபெருமானுடைய திருவடிகளில் கலப்பார்கள்.
7. நிஷ்களமும் சகளமும்
கிருஷ்ணா! இன்னும் கேட்பாயாக, அந்தச் சிவபெருமானுக்கு ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களும் பிரகிருதி, புத்தி, அகங்காரம், மனம், சித்தம், இந்திரியம் முதலியவற்றால் பந்தமும் இல்லை. பூதங்கள், தன்மாத்திரைகள், காலம், வித்தை, நியதி, ராகம் இவற்றாலும் பந்தமில்லை விருப்பு வெறுப்புகள் இல்லை, இருவினையும் இல்லை. கர்த்தா ஒருவனுமிலன். காரணமுங் கிடையாது. ஆதியும் அந்தமும் இல்லை. பகையும் இல்லை. உறவும் இல்லை. குருவுமில்லை. தலைவனும் இல்லை. இறப்பும் பிறப்பும் இல்லை. அவனே பிரமன் விஷ்ணு முதலிய யாவருக்கும் மேம்பட்டவனாய் அந்த அநந்த கல்யாண குணமுடையவனாய் பாவிகளால் அறியப்படாமல் புண்ணியர்களுக்கே காணப்படுவானாகையால் ஞானிகள் அவனைத் தாணு என்று சொல்வார்கள். அந்தச் சிவபெருமானே யாவுமாகி விளங்குவதால் சரவன், மஹான், புருஷன், ஒப்பற்றவன், நீலலோஹிதன் என்ற பெயர்களில் ஞானிகள் உணரும்படி விளங்குவான். உடலில் தகராகாயத்தில் தமது ஞானத்தாலே காணும் முனிவர்களுக்குக் காட்சியளிப்பான். மோகத்தையுடையவர்களுக்கு ஒருபோதும் காட்சிதர மாட்டான். சூரியனும் மின்மினி போல ஒளி குன்றும்படியான பெருஞ்ஜோதிப் பிழம்பாக உள்ளவன், கிருபாமூர்த்தி, உக்கிரரூபி, சாந்தமும் கோபமும் கலந்த குணத்தினன், நிர்க்குணன் அக்ஷரங்களின் வடிவாகவுள்ளவன், அமிர்தசொரூபி, உலகிற்கு முழுமுதல்வன். அந்தகனுக்கு அந்தகன், சின்முத்திரை யுடையவன், அத்தகைய சிறப்பு வாய்ந்த சிவனுடைய சக்தியே சுத்தமாக இருக்கும். அவனையே பிரணவமானது உண்மை யுணர்ந்து கூறும் பிரணவத்தைக் குரு மூலமாக உபதேசம் பெற்றும் முறைப்படி ஜபஞ் செய்தால் சிவபெருமானைத் தரிசிக்கலாகும். சிவபெருமானைத் தரிசித்தால், அதைவிடச் சிறந்தது ஏதுமில்லை. சிவசொரூபத்தை உணர்வதற்கு, ஆகமங்களை ஐயந்திரிபறக்கற்று, மாயா சம்பந்தத்தை ஒழித்து, அப்பிரணவமே சிவசொரூபம் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என மேலோர் சொல்வார்கள். அந்தப் பிரணவமானது அகர, உகர மகரங்களுடன் நாதம் என்பது கூடியதாய் சொல்லப்படும். அந்தப் பிரணவமானது மூன்றரை மாத்திரைக்கான உச்சரிப்புடையதாய் விளங்கும். அவற்றுள் அகரமானது இருக்கு வேதமும், மகானும், பீஜமும், இராஜச குணமும், பிரமனுமாக, இருக்கும். உகாரமானது யஜுர்வேதமும், பிரகிருதியும், சாத்வீக குணமும், விஷ்ணுவுமாக இருக்கும். மகாரமானது சாம வேதமும் புருஷனும் தாமச குணமும் ருத்திரனுமாக இருக்கும். நாதம், அதர்வண வேதமும் செயலற்றதும் சிவசொரூபமாக இருக்கும் என்று சொல்லப்படும். பிரணவமானது நாத தத்துவத்தால் சிவனையறியச் செய்யும், சர்வத்துக்கும், ஆதிகாரணனாகிய சிவபெருமானே சர்வ வியாபியாக அமர்ந்துள்ளான். ஆகையால் அந்தப் பகவானையே பக்திச் சிரத்தைகளுடன் உபாசனை செய்து சிறந்த கதியை அடையவேண்டும் என்று உபமன்யு முனிவர் கிருஷ்ண பகவானுக்கு உபதேசம் செய்தார்.
8. உமாமகேஸ்வர உபாசனையும் ஆகம உற்பத்தியும்
உபமன்யு முனிவர், மேலும் தொடர்ந்தார். கண்ணா! தேவர்களுக்கெல்லாம் தேவனான பரமசிவன், பராசக்தி இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி, மாயாசக்தி, முதலிய சக்திகளாகப் பிரிந்து, தானே விளங்குவன். அந்தச் சக்திகளில், பராசக்தி சதாசிவனையும் மகேசனையும் வித்யேஸ்வரர்களையும் புருஷர்களையும் பிரகிருதியையும் தத்துவங்களையும் பிரமன் முதலானவர்களையும் படைக்கும். அந்தச் சக்தியே, சர்வ வியாபியாய் அணுமயமாய் ஞானமயமாய் ஒப்பற்று விளங்கும். சிவன், சக்தியோடு விளங்குவதால் சிவனை சக்திமான் என்று தவசிகள் கூறுவார்கள். தவமுனிவர்கள் சிவபெருமானைத் தமது அறிவாலறிவதால் வேத்தியன் (அறிவால் அறியத் தக்கவன்) என்றும் சிவனைச் சக்தியே அறியத் செய்தலால், அதனை விஞ்சை என்றும் சொல்வார்கள். மேலே சொன்ன பராசக்தி பிரமன் முதலிய எல்லோரையும் மயங்கச் செய்து அந்த மயக்கத்தை ஒழித்து, முக்தியடைய உதவுவான். அத்தகைய சக்தியாகிய மாதேவியின் பாதங்களைப் பணிந்து முக்தி வீட்டை அடைய வேண்டும். பூர்வத்தில் முனிவர்கள், உலகம் உண்டாவதற்குக் காரணம் என்ன? நாமெல்லோரும் எங்கிருந்து பிறந்தோம்? யாவரால் பிழைத்திருக்கிறோம்? இந்தச் சுக துக்கங்களை நமக்குக் கொடுப்பவர் யாவர்? கடல் சூழ்ந்த இந்தப் பூமியைப் படைத்தவர் யார்? என்ற சந்தேகங்களையடைந்து, யோக நிஷ்டையிலிருந்து, எமது சிவபெருமானுடைய வாமபாகத்தில் பொருந்திய உமாதேவியைத் தரிசித்தார்கள். அவ்வுமாதேவியின் திருவருளால் பாசங்களை ஒழித்து, மயிலின் சாயலையுடைய அந்தத் தேவியோடு சிவபெருமானையும் தமது ஞான திருஷ்டியால் கண்டார்கள். அவ்வாறு பார்த்து, மனம் மகிழ்ந்து இவனே, எல்லாப் பொருள்களுமாக வியாபித்துள்ளவன் என்று சந்தேகம் ஒழிந்து, இவனே பரம்பொருள் என்று தெளிந்து மோக்ஷம் அடைந்தார்கள். சிவபெருமானையும் உமாதேவியையும் மனதில் கொண்டு தியானம் செய்பவர்களே, மோக்ஷம் அடையத் தக்கவர்கள். கர்மயோகமும் ஞானயோகமும் இந்த விஷயத்தில் வேண்டுவதில்லை. சிவபெருமானின் கடாக்ஷத்தை அடைய வேண்டியதே ஜீவனின் தொழில். அந்தச் சிவபெருமானைக் கருதியவுடன் தேவர்கள் முதல் கிருமி ஈறாகவுள்ள ஜீவர்கள் யாவரும் பந்தம் ஒழிந்து முக்தியடைவதில் தடையில்லை.
கிருஷ்ணா! ஆன்மாக்கள் தாய் வயிற்றில் கருப்பையினுள் கட்டப்பட்டுக் கிடக்கும்போதாயினும் பிறக்கும்போதாயினும், வயோதிகத்திலாயினும், நரகமனுபவிக்கையிலாயினும், சுவர்க்கம் அனுபவிக்கையிலாயினும் நமது சங்கரன் திருவுளம் செய்தால் உடனே அந்த ஆன்மாவுக்கு முக்தி நிலை கைகூடுவது நிச்சயம் அவனுடைய திருவருளாலேயே பக்தி உண்டாக வேண்டும். சிவபக்தியினாலேயே சிவகடாக்ஷம் உண்டாக வேண்டும். அந்தச் சிவபக்தி எண்ணிறந்த பிறவிகளில் வேதோக்தமான நற்கர்மங்களைச் செய்த புண்ணிய பயனால் சிவபெருமான் அனுக்கிரகம் செய்ய உண்டாவதாகும். சிவபக்தியுண்டாவதால் அது சிவதர்மங்களைச் செய்விக்கும். சிவதர்மம் செய்வதால் சிவபெருமான் திருவருள் செய்வான். திருவருளால் இருவினைத் தொடர்பு அழியும். இருவினைத் தொடர்பு அழிந்தால் முக்தியுண்டாகும். சிவபெருமானுடைய திருவடியில் சிறிதளவு ஒருவகையாகப் பக்தி செய்தவர்களும் மேல் பிறவியடைய மாட்டார்கள். தேகத்தால் பணிதலே பக்தியாகும். உடலாற் பணிதலும் வாக்கால் அவனைத் துதித்தலும், மனதால் அவனைத் தியானித்தலும் கையால் பூஜித்தாலும் ஒவ்வொரு அவயவங்களாலும் அவனைப் பணிவிடை செய்தலுஞ்சிவ தர்மங்களாகும். தவம், கருமம், ஜபம், தியானம், ஞானம் எனப்படும். அவற்றுள் சாந்திராயணம் முதலியன தவங்கள். சிவலிங்கபூஜையே கருமம். பஞ்சாக்ஷ மந்தரஞ் செபித்தலே ஜபம். சிவ பெருமானை மனதால் தியானித்தாலே தியானம். சிவாகமங்கள் முறையிடுவதே ஞானம் பூர்வம். சிவபெருமான், ஆன்மகோடிகள் கடைத்தேறும்படி உமாதேவியாருக்கு விரித்துக் கூறியதாகவுள்ள ஆகமங்கள் இருபத்தெட்டே ஞானத்தை உதவ வல்லன். அவை, காமிசம், யோகசம், சிந்தியம், காரணம், அசிதம், தீப்தம், சூஷ்மம், ஸஹஸ்ரம், அம்சுமான், சுப்ரபேதம், விஜயம் நிஸ்வாஸம், ஸ்வயம் பூதம், ஆக்நேயம், வீரம், ரவுரவம், மகுடம், விமலம், சுந்தரஞானம் முகபிம்பம், ப்மோத்கீதம், இலளிதம், சித்தம் சந்திரதம், சர்வோத்தமம், பாரமேச்சரம் கிரணம், வாதுஞ்சம் என்பன. காமிசம் யோகஜம், சிந்தியம், காரணம், அசிதம் என்னும் ஐந்தையும் ஸத்தியோஜாத முகத்திலிருந்து கவுசிகரிஷியின் பொருட்டும், தீர்த்தம் சூஷ்மம், ஸஹஸ்ரம், அம்சுமான் சுப்ரபேதம் என்ற ஐந்தையும் வாமதேவ முகத்திலிருந்து காசிபரிஷியின் பொருட்டும், விஜயம், நிஸ்வாஸம் சுவாயம்பவம், ஆக்னேயம், வீரம் என்ற ஐந்தையும் அகோர முகத்திலிருந்து பாரத்வாஜ ரிஷியின் பொருட்டும், புரோகீதம், இலளிதம், சித்தம் சந்தாநம் சர்வோக்தம், பாரமேசுவரம் கிரணம் வாதுளம் என்ற எட்டையும் ஈசானமுகத்திலிருந்து அகஸ்திய ரிஷியின் பொருட்டும் அருளிச்செய்தார் என்பது நூல்வழக்கு. ஆகம என்னும் மொழியில் ஆ என்பது ஞானம் க என்பது மோக்ஷம் ம என்பது மலநாசமும் ஆம். ஆகவே, ஆன்மாக்களுக்கு மலத்தை நாசஞ்செய்து ஞானத்தை புதுப்பித்து மோக்ஷத்தைக் கொடுப்பதால் ஆகமம் என்ற பெயராயிற்று. வேதமும் ஆகமமும் சிவபெருமானாலேயே அருளப்பட்டவை. ஆகையால் அவை தம்முன் சிறிதும் பேதமில்லாமல் இயலுந்தன்மையுடையன.
சிவபெருமானுக்கு காமிசம் திருவடிகள், யோகசம் கணைக்கால்கள், சிந்தியம் திருவடி விரல்கள், காரணம் கொண்டைக்கால்கள், அசிதம் முழந்தாள்கள், தீப்தம், தொடைகள், சூஷ்மம் குய்யத்தானம், சகஸ்ரம் கடித்தானம், அம்சுமான் முதுகு சுப்பிரபேதம் கொப்பூழ், விஜயம் உதரம், நிஸ்வாஸம் நாசி, சுவாயம்புவம் முலைகள், ஆக்கினேயம் கண்கள், வீரம் கழுத்து, ரவுரவம் செவிகள், மகுடம் திருமுடி, விமலம் கைகள், சந்திரஞானம் மார்பு, முகபிம்பம் திருமுகம், புரோத்கீதம் திருநாக்கு, இலளிதம் கபோலம், சித்தம் திருநெற்றி, சந்தானம் குண்டலம், ம சருவோத்தமம் உபவீதம் பாரமேஸ்வரம் ஆரம், கிரணம் இரத்தின ஆபரணங்கள், வாதுளம் திருப்பரி வட்டம், காலோத்தரம் திருமேற்பூச்சு, மற்றைய உப ஆகமங்கள் எல்லாம் பரிமள திரவியங்களும் புஷ்பங்களும் சைவசித்தாந்தம் நைவேத்தியமுமாம் அவற்றுள் காமிசத்துக்கு மூன்று யோகஜத்துக்கு ஐந்து சிந்தியத்துக்கு ஆறு காரணத்துக்கு ஏழு, அசிதத்துக்கு நான்கு, தீப்தத்துக்கு ஒன்பது சூஷ்மத்துக்கு ஒன்று, சகஸ்ரத்துக்குப் பத்து அம்சுமானுக்குப் பன்னிரண்டு சுப்பிரபேதத்துக்கு ஒன்று விஜயத்துக்கு எட்டு, சுவாயம்புவத்துக்கு மூன்று, ஆக்னேயத்துக்கு ஒன்று வீரத்துக்கு பதின்மூன்று ரவுரவத்துக்கு ஆறு, மகுடத்துக்கு இரண்டு விமலத்துக்குப் பதினாறு சந்திரஞானத்துக்கு பதினான்கு முகபிம்பத்துக்குப் பதினைந்து, புரோத்கீதத்துக்குப் பதினாறு. இலளிதத்துக்கு மூன்று சித்தத்துக்கு நான்கு; சந்தானத்துக்கு ஏழு, சர்வோத்தத்துக்கு ஐந்து, பாரமேஸ்வரத்துக்கு ஏழு: கிரணத்துக்கு ஒன்பது வாதுளத்துக்கு பன்னிரண்டு உபபேதங்கள் உள்ளன. இந்த ஆகமங்களும் முதலில் சொன்ன பத்தும் சிவபேதம் என்றும் இறுதியிற் சொன்ன பதினெட்டும் சூத்திரபேதங்கள் என்றும் சொல்லப்படும்.
இவை ஞானபாதம், யோகபாதம், சிரியாபாதம், கிரியாபாதம் என்று தனித்தனி நான்கு பாதங்கள் உடையன. இவற்றுள், ஞானபாதத்தில் பரமசிவனுடைய சொரூபமும் விஞ்ஞான கலர் பிரளயாகரர் சகலர் என்ற ஆன்மாக்களின் சொரூபமும் ஆணவம் காமியம் மாம்யேயம் வைந்தவம் திரோதான சக்தி என்னும் பாசங்களின் சொரூபமும் சக்தியின் சொரூபமும் சிவதத்துவம் முதல் பிருத்வி தத்துவம்வரை முப்பத்தாறு தத்துவங்கள் உற்பத்தியும், இவை ஆன்மாக்கள் போகம் புசிக்கைக்குக் கருவியாகும் முறைமையும் பாசுபதம், மஹாவிரதம் கபாலம் முதலிய மதங்களின் சொரூபமும் சொல்லப்படும். இனி கிரியாபாதத்தில் மந்திரங்களின் உத்தாரணம் சந்தியாவந்தனம், பூஜை ஜபஹோமங்களும் சமய விசேஷநிருவாண ஆசாரிய அபிஷேகங்களும் புக்தி முக்திகளுக்கு உபாயமாகிய தீøக்ஷயும் கூறப்படும். இனி யோகபாதத்தில் இந்த முப்பத்தாறு தத்துவங்களும் தத்துவேசுரரும் ஆன்மாவும், பரமசிவனும் சீதையும் ஜகத்துக்கு காரணமாகிய மாயை மஹாமாயைகளைக் காணும் வல்லமையும் அணிமாதி சித்திகள் உண்டாகும் முறைமையும் இயமம், நியமம் ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தியானம், தாரணம் சமாதிகளினுடைய முறைமையும் மூலாதாரம் முதலிய ஆதாரங்களின் முறைமையும் கூறப்படும். இனி சரியாபாதத்தில் பிராயச்சித்த விதியும் பவித்திர விதியும் சிவலிங்க லக்ஷணமும் நந்தி முதலிய கணநாதர் லக்ஷணமும், ஜபமாலை, யோகபட்டம், தண்டம், கமண்டலம் முதலியவற்றின் லக்ஷணமும் அந்தியேஷ்டி விதியும் சிரார்த்த விதியும் கூறப்படும்.
சிவபேதம் பத்தையும் கேட்டவர் ஒருவரிடத்தொருவராக ஒவ்வோராகமத்துக்கு மும்மூன்று பேராம் அணு சதாசிவருடன் அனைவராகிய பிரணவர் முதல் முப்பதின்மராவர். அவர்கள் பெயர் வருமாறு: காமிகங் கேட்டவர் பிரணவர் திரிகலா; ஹரர்; யோகசங்கேட்டவர் சுதாக்கியர் பஸ்மர்; விபு; சிந்தியக்கேட்டவர் சுதீப்தர், கோபதி, அம்பிகை, காரணம் கேட்பவர் காரணர் சர்வருத்திரர்; பிரசேசர்; அசிதங் கேட்டவர்; சுசிவர்; சிவர்; அச்சுதர்; தீப்தம் கேட்டவர் ஈசர்; திரிமூர்த்தி உதாசனர்; சூஷ்மங்கேட்டவர் சூஷ்மர் வைசிரவணர்; பிரபஞ்சனர்; சகஸ்ரங் கேட்டவர் காலர்; வீமர்; தர்மர் அம்சுமான் கேட்டவர் ஒருவரிடத்தொருவராக ஒவ்வோராக மத்துக்கு இவ்விரண்டு பேராய் அநாதி ருத்திரர் முதல் முப்பத்து அறுவராவர் அவர் பெயர் வருமாறு விசுபங்கேட்டவர்; அநாதி ருத்திரர்; பரமேசர்; நிஸ்வாஸங் கேட்டவர், தஸார்ணர் பார்ப்பதி; சுவாயம்புவங்கேட்டவர்; நிதனேசர் பத்மபூ; ஆக்நேயங்கேட்டவர்; வியோமர்; உதாசனர்; வீரங்கேட்டவர் தேசர் பிரஜாபதி; ரவுரவங் கேட்டவர்; பிரமேசர் நந்திகேசர்; மகுடங் கேட்டவர்; சிவர்; மஹாதேவர்; விமலங் கேட்டவர்; சர்வாத்மர்; வீரபத்திரர் சந்திரஞானம் கேட்டவர்; அநந்தாபிரகஸ்பதி; முகபிம்பம் கேட்டவர்; பிரசாந்தர் ததீசி புரோத்கீதம் கேட்டவர் சூலி கவசர்; இலளிதம் கேட்டவர் ஆலயேசர், இலளிதர்; சித்தங்கேட்டவர்; விந்து சண்டேசர்; சந்தானங்கேட்டவர்; சிவ நிஷ்டர்; அசம்பாதர் சர்வோத்தங் கேட்டவர் சோமதேவர் நிருசிங்கர் பாரமேஸ்வரங்கேட்டவர்; ஸ்ரீதேவி உசனர் கிரணங்கேட்டவர்; தேவவிபுசம் வர்த்தர், வாதுளங்கேட்டவர்; சிவர், மகாகாளர் விஷய வாதனையில் மனஞ் செல்லாது அடங்கி அவ்விறைவனுடைய திருவடியை இத்தகைய ஆத்மமார்க்கத்தாலேயே அடையவேண்டும் என்று உபமன்யு முனிவர் கூறினார்.
9. தேவர்களுக்குச் சிவாகமம் அளித்தல்
கிருஷ்ணர் உபமன்யு முனிவரை நோக்கி, தவசியே! சந்திர சேகரனும் சர்ப்ப ஆபரணனுமாகிய சிவபெருமான் உமா தேவியாருக்கு சிவாகமங்களைக் கூறியவகையில் எனக்கும் அவற்றைக் கூறவேண்டும் என்று கேட்க, உபமன்யு முனிவர் சொல்லத் துவங்கினார்.
பூர்வத்தில் சிவபெருமான் அவ்யக்தத்திலிருந்து தோன்றிப் பதுமாசனனாகிய பிரமதேவனைப் படைத்தான். அந்தப் பிரம தேவன் உலகு வர்ணம், ஆச்சிரமம், சோமம் என்பனவற்றைப் படைத்தான். சோமத்திலிருந்தும் உலகையெல்லாம் தன்னிடத்து ஒடுக்கியுள்ள ஆகாயம் தோன்றியது. அதற்குப்பிறகு ஆகாயத்திலிருந்து பிற பூதங்களும் அவற்றிலிருந்து எல்லாப் பொருள்களுமாக முறையே தோன்றின. பிரமன் முதலிய தேவர்கள் உருத்திர மந்திரத்தினால் சிவபகவானை துதிக்க, சிவபெருமான் அவர்கள் நேரே நின்று அவர்களது அறிவை மயக்க அவர்கள் இறைவனை உணராமல் நீ யாவன்? என்று கேட்டார்கள். அப்போது சிவபகவான் அமரர்களே! யானே இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்னும் காலத்திரயங்களிலும் உள்ளவன். பகைப்புலன்கள் துன்பஞ் செய்யவொட்டாமல் அவற்றைத்தடுத்து எம்மை யடைந்தவர்கள் மோட்சமடைவார்கள். எம்மை அடையாதவர்கள் ஒருகாலத்திலும் மோக்ஷம் என்பதைக் கண்ணாலும் காண மாட்டார்கள் என்று கூறி அங்கிருந்து மறைந்தார். அப்போது அங்கிருந்த தேவர்கள் சிவபெருமானே! இவ்வாறு அருளிச் செய்தனன் என்று தெரிந்துகொண்டு, சிவபக்தியுடையவர்களாய்ப் பாசுபத விரதத்தை மேற்கொண்டு சிவதியானபரர்களாய் நெடுங்காலம் கழித்து வந்தார்கள். சிவபெருமான் அவர்களுடைய அன்புக்கு அகமிகமகிழ்ந்து தமது ஸ்வரூப தரிசனம் தந்தார். அதனால் தேவர்கள் சிவபெருமானையும் வாமபாகத்தில் இருக்கும் மலைமகளையும் மான், மழு, திரிசூலம் முதலியவற்றையும் கண்கள் களிக்கக்கண்டு, அளவில்லாத மகிழ்ச்சிக் கொண்டு சிவபெருமானையும் உமாதேவியாரையும் பலவாறு துதித்து, அஷ்டாங்க பஞ்சாங்க நமஸ்காரஞ் செய்து நிற்க, சந்திரசேகரனாகிய சங்கரன் தேவர்களே! உங்கள் தோத்திரத்திற்காக மனமகிழ்ந்தோம் என்றார்.
தேவர்கள் கடவுளே! தங்களை நாங்கள் பூஜிக்க விரும்புகிறோம் என விண்ணப்பஞ் செய்ய அப்படியே செய்வீர்களாகவென்று அவர்கட்கு அனுமதி கொடுத்துச் சூரியமண்டல நடுவில் பிரகாசிக்கும் நான்கு முகங்களுடன் காட்சி தந்தனர். அதை உணர்ந்த தேவர்கள் அவ்விறைவனுக்கு அர்க்கியம் கொடுத்துப் பலவாறு பூஜை செய்தார்கள். அவர்கள் செய்த பூஜைக்கு அகங் களிகொண்ட சிவபகவான் பூர்வம் உமாதேவியாருக்கு உபதேசித்த ஆகமங்களை அவர்களுக்கு முழுதுங் கூறியருளி மறைந்துபோனார். அவ்வாறு சிவபெருமான் மறைந்த பிறகு தேவர்கள் அவ்வாகமங்களை உணர்ந்து இதனால் வேதியர், அரசர், வணிகர் என்ற குலத்தினர் பூஜை செய்வதற்குரியவர்கள் என்று தீர்மானித்துக்கொண்டு, சுயேச்சையாக சென்றார்கள். தேவர் சென்ற பிறகு நாட்கள் கடந்தன. இறைவன் அளித்த ஆகமங்களில் சிற்சில இருந்தன. அதைக் கண்ட உமாதேவியார் மனங்கனிந்து சிவபெருமானை நோக்கி, கடவுளே! இறந்த ஆகமங்களை மீண்டும் சரிவர நடத்தச் செய்ய வேண்டும் என்று கேட்ப, சிவபெருமான் தேவியின் விருப்பத்தை ஏற்று, ஓர் இரவில் அதை மீண்டும் கூறினார். அந்த ஆகமங்களைச் சிவகடாக்ஷத்தால் அகஸ்திய முனிவரும், யானும் குருவும் ததீசியும் கற்று உணர்ந்து உலகில் பலருக்கும் வெளிப்படுத்தினோம். கலியுங்கள் தோறும் அந்தச் சங்கர பகவானே யோகாசாரியராகத் தோன்றி சிவாம்சங்களை விளக்குவான். அந்தச் சமயத்தில் அவருக்கு மாணவர்களாக நால்வர் தோன்றி அதனைப் பிரபலப்படுத்துவார்கள். ஆகமத்தை உணர்ந்து சிவபெருமானே கடவுள் என்று உறுதி கொண்டு, அவ்விறைவனை அடைந்தவர்களே, முக்தியிற் கலப்பார்கள் என்று உபமன்யு முனிவர் கண்ணபிரானுக்குக் கூறியருளினார்.
10. ஆசிரியர் பெயரும் மாணவர் பெயரும்
கிருஷ்ணமூர்த்தி உபமன்யு முனிவரைப் பணிந்து, தவஞானியே! கலியுகந்தோறும் ஆகமத்தை விளக்கும்படி வருகின்ற ஆசிரியர்கள் பெயர்களையும் அவர்களிடம் கற்று உலகினருக்கு உரைக்கும் மாணவர்களின் பெயர்களையும் கேட்க, உபமன்யு முனிவர் சொல்லலானார்.
அந்த ஆசாரியர்கள் சுவேதன், சுதாரன், தமணன், சுகோத்திரன், சுங்கன், லோகாஷிசைகிஷவ்யன், திவாகரன், குஷபன், ருத்திரன், அத்திரி, ஜ்வலைகன், கவுதமன், வேதசிரன், கோகர்ணன், குஹாவாசி, ஜிகண்டி, ஜடாமாலி அட்டகாசன், தாருகன், இலாங்கதி, மஹாகாயன், சூலி, ஜண்டி, முண்டிசன், சயிஷ்ணு, சோமசன், வருணேசன் என்று சொல்லப்பட்டவர்கள். அந்த யோகசாரியார்களுக்கு மாணவர்களாக இருந்தவர்கள் சுவேதன், அவேதாசியன், சுவேதலோகீதன், துந்துபி, சதரூபன், ருக்ஷிகன், கேதுமான், விகோசரன், விசேகன், விசாகன், சாபசாதனன், சமூகன், துன்மதன், துன்முகன், துரதுக்கிரமன், சனகன், சனந்தனன், சனாதனன், சனத்குமாரன், சுதர்மன், விரசன் சங்வவான், விநதன், சாரசுதன், மேஹன், மேஹவாஹனன், கபிலன், ஆசுசி, பஞ்சசகன், பயிலன் பராசரன், கற்கன், பார்க்கவன், அங்கிரசு, நிராமித்திரன், பலவேந்தன், தபேர்தனன், லம்போதரன், லம்பன், லம்பாக்ஷன், ஸம்கேசன், சர்வக்ஞன், சமபுத்தி, சாத்தியன், சுதாமா, சத்தியன். காசிபன், அத்திரி, வசிஷ்டன், உக்கிரன், சிரவணன், சிரவிஷ்டகன், குணி, குணிவாகு, குசரீரன், குநேத்திரன், காஷ்யபன், உசன், சியவனன் உசத்தியன், பிருஹஸ்பதி, வாமதேவன், மஹிகாயன், மஹாநீலன், வாசச்சிரவா, சவாசன், கிருதுமான், கவுதமன், மதுபிங்கன், சுவேதன், கேது, உசிதன், பிருஹதுக்கதன், தேவலன், சாலிகோத்திரன், சுவசியன் உலனாசுவன், சரத்துவசு குண்ட கன்னன் மஹாகும்பன், சகலன், பிரபாகுகன், உலூகன், சம்புகன் மத்யுதன், ஜவலாயனன், அக்ஷபாதன், குமாரன் உத்தியோனன் அச்சன்னாகுசிகன், கர்ப்பன் மித்திரகன் என்று சொல்லப்படுவார்கள்.
இவர்கள் யாவரும் அந்தந்தக் கலியுகங்களில் உண்டாகும் ஆசிரியர்களைப் பணிந்து அவர்கள் பால் சிவதீøக்ஷப் பெற்றுத் திருவெண்ணீறு பூசி, உத்திராக்ஷ மாலையணிந்து, பஞ்சாக்ஷர மந்திரம் ஓதி, வேதசிவாகமங்களை ஆய்ந்து அறிந்து பாசுபத விரதிகளாகிச் சிவபெருமானை இடைவிடாமல் தொழுது அவ்வெம்பிரானுடைய மஹிமா அதிசயங்களை விளங்கச் செய்வார்கள். இவர்கள் யாவரும் ஆசிரியர்கள். ஆகையால் இவர்களுடைய பாதங்களைப் பணிந்து சிவபெருமானிடத்துப் பக்தியுடன் சிவபூஜை செய்பவர்கள் அழியாத முக்தி வீட்டை அடைவார்கள் என்று உபமன்யு முனிவர் ஸ்ரீகிருஷ்ண மூர்த்திக்கு உரைத்தருளினார்.
11. சிவபெருமான் மகாதேவிக்கு அருளியது
உபமன்யு முனிவர் அவ்வாறு கூறியதும், ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி அவரை நோக்கி, மானுட தேகங்கொண்டு வந்த தெய்வமே! அந்தச் சிவபகவானே உமாதேவியார் கேட்ட கேள்வியையும் அதற்கு அவர் சொன்ன பதிலையும் கேட்க ஆவலாக இருக்கிறேன். தயவு செய்து கூறுங்கள் என்றார்.
உடனே உபமன்யு முனிவர், சிவபெருமானைத் தியானித்து சொல்லத் துவங்கினார். கிருஷ்ணா! முன்பு ஒரு காலத்தில், மந்தர பர்வதத்தின் சாரலில் ஒரு நந்தவனத்தில் சிவபெருமான் உமாதேவியின் தோழிகளில் ஒருத்தியாகிய சுபாவதி என்பவள் பலவகை மலர்களைக் கையில் தாங்கிவந்து அவற்றால் விநோதமான மாலைகளைத் தொடுத்துத் தேவியின் கூந்தலைச் சீவி அழகுப்படுத்திப் பின்னி அதில் அந்த மலர் மாலைகளை அணிவித்தாள். சிவபெருமான் அப்பொழுது உமாதேவியை எடுத்து தம் தொடை மீது இருத்திக் கணங்கள் எல்லோரும் வந்து துதி செய்யும்படி ஒரு சிங்காதனத்தில் எழுந்தருளியிருந்தார். அப்போது உமாதேவி சிவபெருமானை நோக்கி, தலைவரே! அறியாமையுடைய மானுடருக்கு எவ்வகையாக எதனால் கிருபை செய்கிறீர்? இந்த விவரத்தை எனக்குச் சொல்ல வேண்டும் என்று கேட்க, சிவபெருமான் கூறலானார். பிராண நாயகி, கேட்பாயாக! கருமம், தவம், ஜெபம், சமாதி, ஞானம் முதலியவற்றைச் செய்பவர்களுக்கு யாம் சுவாதீன மல்லோம். ஆனால் பிறருக்குத் தீமை செய்யாது எம்மிடத்திலேயே இடையறாப் பக்தியுடையவர்களுக்கே சுவாதீனமாக இருப்போம். அவர்களுடைய மனதிலேயே வசிப்போம். பிரமதேவன் கூறிய வகையில் வர்ணாசிரம தர்மங்களை நிறைவேற்றுதல் அசாத்தியம் என்று நாம் அதை வேறு வகையாகக் கூறியுள்ளோம். நம்முடைய அன்பர்கள் அதையே கடைப்பிடித்து ஒழுகுவார்களாயின், மும்மலங்களும் பாசபந்தங்களும் ஒழியப் பெற்று, தேவர் உலகத்தை அடைந்து நம்முலகத்தைப் பெற்று, மோக்ஷத்தை அடைந்து அனுபவிப்பார்கள். ஆசாரியனிடத்தில் முறைப்படி தீøக்ஷ செய்து கொண்டு சிவதர்மத்தை அனுசரித்து நடப்பார்களாயின், சிவ தீøக்ஷயில்லாதவர்களுக்குச் சொல்லி தர்மப்படி நடப்பவர்கள் அடையும் பயனைவிடக் கோடி பங்கு விசேஷப் பயனையடைவார்கள். ஆகையால் சிவதீøக்ஷ செய்து கொண்டே வர்ணாசிரம தர்மங்களை விதிப்படி செய்யவேண்டும். கலியுகங்களிலெல்லாம் இவ்வேற்பாடுகள் நிலைதவறுதலால், நாமே மனங்கனிந்து யோகாசாரியனாகி மாணவர்கள் புடைசூழ வந்து சிவ தருமங்களை நிலைபெறச் செய்வோம். நம்மிடம் விசாரணை செய்தறிந்த மாணவர்களை வழிபட்டு அவர் கூறியபடி சிவ தர்மங்களைச் செய்தவர்களே உண்மையை அறிந்து மோக்ஷம் அடைவார்கள். அவ்வாறல்லாமல் அவர்கள் சொல்லியதைக் கொள்ளாமல் வெவ்வேறு மார்க்கங்களைக் கைக்கொள்வோர்கள் தீயநெறியில் பிரவேசித்து, இம்மை மறுமைப் பயன்களையும் இழந்து துன்பமடைவார்கள். முக்தியைத் தரவல்ல உத்தம வழியில் முயன்று செல்லாதவர்கள் உத்தமர்களாகமாட்டார்கள். ஆனால் அவர்கள் அறிவிருந்தும் அறிவீனர்களும், கண்கள் இருந்தும் குருடர்களும், வாயிருந்தும் ஊமைகளும், செவிகள் இருந்தும் செவிடர்களாகவும் ஆவார்கள்.
மோக்ஷப் பிராப்தமான சிவதர்மமானது, ஞானம், கிரியை, சரியை, யோகம் என்ற நான்கு பாதங்களையுடையதாய் அநாதியாக இருக்கும். பதி பசு பாசங்களின் இலக்கணங்களை உணர்வதே ஞானம், தவம், ஜபம் முதலியவற்றால் சாதிக்கத்தக்க ஷடத்துவாக்களை சுத்தி செய்வதே கிரியை வர்ணாசிரமங்களுக்குத் தக்கவாறு நடப்பதே சரியை, என்னால் கூறப்பட்ட வகையிலேயே என்னிடத்திலேயே பக்தியும் பிற தேவர்களிடத்திலேயே மனதை நிறுத்தி பிற இடங்களில் செலுத்தாது இருப்பது நூறு அசுவமேத யாகங்களை செய்ததைவிட உயர்ந்த பயனைத்தரும். விஷய விருப்பம் உடையவர்களுக்கு அது சாத்தியப்படாது. இமய நியமாதிகளால் இந்திரிய நிக்கிரகஞ் செய்து விரக்தனானவனுக்கு எல்லாப் பாவங்களையும் விலக்கத்தக்க சித்தப் பிரசாதன ரூபமான இந்த யோகங்கைகூடும், ஞான யோகத்துக்குச் சாதனங்களையும் சொல்லுகிறேன். வைராக்கியத்தால் ஞானமும், ஞானத்தால் யோகமும் உண்டாக வேண்டும். அதை உணர்ந்தவன் பெரும்பாவியாக இருந்தாலும் எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுபடுகிறான். தயை, அஹிம்சை, ஞான உணர்வு, சத்தியம், களவாடாமை, ஆஸ்திக்யம், சிரத்தை, இந்திரியை நிக்கிரகம், அத்தியாபனம், அத்தியயனம், ஈசுவரபாவம், ஞானசீலத்துவம் இவை யாவும் இருந்தாலன்றி ஞானயோகம் சித்திக்க மாட்டாது. அவ்வாறு இருந்தால் அதிவிரைவில் ஞானம் உண்டாகி அந்த ஞானத்தால் யோக சித்தி உண்டாகும். அத்தகைய ஞானி, தனது ஞானாக்கினியால் இந்தத் தேகத்தைத் தகிக்கச் செய்து, என் அனுக்ரகத்தால் கர்மபந்தங்களை ஒழிப்பான். புண்ணிய பாவஸ்வரூபமான கர்மமே, முக்திக்குத் தடையாக இருப்பதாகும். ஆகையால் யோகவான் தனது யோகத்தால் புண்ணிய பாவங்களை விலக்கிக் கர்மங்களிலே பலா பேஷையில்லாமல் கர்மங்களை மட்டுமே செய்கிறான். கர்மங்களை அறவேயொழிக்கக்கூடாது. பார்வதி என்னை முதலில் கர்மயோகத்தாலேயே பூஜிக்க வேண்டும். அதற்குப் பிறகு ஞான யோகத்தில் விருப்புண்டாகும். பிறகு யோகத்தைப் பயின்று வரவேண்டும். எனது உண்மை நிலையை உணர்ந்தவர்கள் கர்மயாகத்தால் என்னைப் பூஜிக்கமாட்டார்கள். நிம்மதியாக என்னிடத்திலேயே பொருந்திய மனமுடையவர்கள், ஞான யோகிகளாகி உன்னுடைய சாயுஜ்ஜியத்தையடைவார்கள். என்னை ஆஸ்ரயித்து விரக்தர்களாக இருப்பவர்கள், ஞான சரியா கிரியைகளிலே சிறந்தவர்கள் என்று கருதப்படுவார்கள்.
பார்வதி! என் பூஜையானது பாஹ்யபூஜை என்றும் ஆப்யந்தர பூஜை என்றும் இருவகைப்படும். அவற்றுள் புறத்தில் செய்கிற பாஹ்ய பூஜையைவிட மனத்தில் செய்யும் ஆப்யந்திர பூஜையே சிறந்தது. அது மனம் வாக்கு காயங்களால் மூவகைப்படும். சிலர் அதை ஜபம், கர்மம், தவம், தியானம், ஞானம் என்று ஐவகைப்படும் என்பார்கள். பிறரறியும்படி என்னைப் பூஜிப்பது - பாஹ்யம் அதையே தனக்கு மட்டும் தெரியும்படிச் செய்வது ஆப்யந்தரம் எனப்படும். என்னிடத்தில் ஆசக்தியுடைய மனமும் என்னுடைய நாமங்களை இடைவிடாமல் உச்சரிப்பவருக்கும் என்னுடைய சின்னங்களைத் தரித்து என் உபசாரத்தையே செய்யத்தக்க காயமும் ஆகிய இம்மூன்றும் மூவகைப்படும். யாகாதிகளால் என்னை ஆராதிப்பதே கர்மம். எனக்காக தேகத்தைச் சோஷிக்கும் வண்ணம் சாந்திரயணாதி விரதங்களைச் செய்வதே - தவம். பஞ்சாக்ஷர மந்திரத்தை ஜெபிப்பதே ஜபம் பிரணவத்தை ஜபித்தலும் ஜபமாம். வேதத்தை மட்டுமே அத்தியயனஞ் செய்தல் ஜபமாகமாட்டாது. என்னையே தியானித்து, வேறு ஒன்றையும் சிந்திக்காமல் இருப்பதே - தியானம், என்னால் சொல்லப்பட்ட சிவாகமங்களை உணர்தலே ஞானம். சிவாகமங்களுக்கு வேறான நூல்களை உணர்வது ஞானமல்ல - பாஹ்யம் பூஜையிலாவது ஜன்மாந்தர வாசனையால் உண்டாகும். மனோவிருப்பத்தின் படி நிஷ்டையை ஆசரியக்க வேண்டும். பாஹ்யத்தைவிட ஆப்யந்தரம் நூறு பங்கு அதிகப்பட்டதாக இருக்கும். ஆப்யந்திர பூஜையில் சிறிதும் தோஷம் உண்டாகாது. ஆகையாலும் சங்கிரமமாகச் செய்யக் கூடியதாகையாலும் அதுவே சிறந்ததாயிற்று. ஆப்யந்திர சவுசமே சவுசமேயன்றி, பாஹ்ய சவுசம் சவுசமாகமாட்டாது.
மேலே பரிசுத்தனாகக் காணப்பட்டாலும் அந்தரத்தில் புனிதமில்லாதவன் அசுகியானவனே பாஹ்ய பூஜையாயினும் ஆப்யந்திர பூஜையாயினும் பக்தி பூர்வமாகச் செய்வதே - சேவை பக்தியில்லாமல் செய்வது பிறரை வஞ்சிக்கச் செய்வதேயல்லாமல் உண்மையிற் சேவையல்ல மாநுடர் செய்யும் அன்பை மட்டுமே அவர்களிடமிருந்து நான் பெறுகிறேன். அந்தப் பக்தியை மனம் வாக்கு காயங்களால் மற்றொன்றை விரும்பாமல் செலுத்தும் பக்ஷத்தில் நான் அதற்கே மனம் மகிழ்ந்து அவர்களுக்குத் திருவருள் புரிவேன். பயனை விரும்பும் ஒருவன் என்னிடம் பக்தி செய்வது அதனைப் பெறும்வரையில் அல்லது அதில் விரக்தியுண்டாகும் வரையேயன்றி, அவன் எக்காலத்தும் இடைவிடாமல் என்னிடத்தில் பக்தி செய்யாவிட்டால், அந்தப் பக்தி லகுபக்தியாகும். பலாபேøக்ஷயால் பக்தி செய்பவர்களுக்கு நானே பயன்களைத் தருபவன் பலாபேøக்ஷயின்றி எவருடைய மனம் என்னிடம் லயித்து பக்தியுக்தமாகப் பொருந்தியுள்ளதோ அவர்களே எனக்குப் பிரீதியைச் செய்யும் பக்தர்கள் - அவர்களுக்குப் பின்பு ஒரு காலத்தில் பிறர் பலாபேøக்ஷயாய் தம்மைத் தியானிக்கத்தக்கவர்களாவார்கள். பூர்வஜன்ம புண்ணிய விசேஷத்தால் பலாபலன்களை விசாரிக்காமல் என்னிடம் பக்தி செய்பவர்கள் எனக்குப் பிரியதமர்கள். என்னுடைய லாபத்தைவிட அவர்களுக்கு வேறு லாபம் ஒன்றுமில்லை. அவர்களுடைய லாபத்தைவிட எனக்கு வேறு லாபம் இல்லை. அவர்களுக்கு என்னுடைய அனுக்கிரகத்தால் என்னிடத்தில் நீங்காத பக்தி உண்டாகிறது. அதற்குப் பயன் மிகப்புனிதமான சுகத்தைக் கொடுக்கும்.
மலைமகளே! மகாத்மாக்களும் என்னிடத்திலன்றி பிறரிடத்திலும் மனத்தைச் செலுத்தாதவர்களுமாகி, என்னுடைய சிவதர்மத்தையே அனுஷ்டானம் செய்யும் பக்தர்களுக்கு எட்டுவகை லக்ஷணங்கள் உள்ளன. என்னுடைய பக்தர்களிடத்தில் மிக்கவிருப்பும் என்னுடைய பூஜையையும் பக்த பூஜையையும் விரும்பிக்காணலும், தாமாகவே பூஜித்தலும் எனக்காக உத்தம விரதங்களை ஆசரித்து உடலைச் சோக்ஷிக்கச் செய்தலும் என்னுடைய பிரபாவங்களைச் சிரவணஞ் செய்தலும் சிரம் கரம் நேத்திரம் முதலியவற்றை எனக்கே விநியோகித்தலும் மனதில் என்னையே ஸ்மரித்தாலும் முக்திப் பிரதாயகம் என்னிடத்திலேயே உண்டு என்று நம்பி என்னையே ஆசரித்தாலும், இவ்விதமான எட்டுவகைச் சின்னங்களையும் உடையவன், மிலேச்சனாக இருப்பினும் அவனே சிரேஷ்டமான பிராமணன். அவனே மஹத்தான முனிவான். அவனே ஸ்ரீயுக்தன் அவனே யதி: அவனே பண்டிதன்: இத்தகைய சின்னங்களையுடையவன் நான்கு வேதங்களைக் கரைகண்டவனை விட எனக்குப் பிரியமானவன். தானம் கொடுப்பது அத்தகையவனுக்கே கொடுக்கத்தகும். அவ்வகையினனே, உத்தமனான தாதாவும் ஆவான். என்னைப் போலவே அவனும் பிறரால் பூஜிக்கத் தக்கவன். அத்தகையவனுக்கே ஞானாதிகளைக் கொடுக்கத்தகும். பத்திரம், புஷ்பம், பழம், ஜலம் முதலிய எதையாவது பக்திபூர்வமாக எனக்குக் கொடுத்தாலும், கொடுத்தவனுக்கு நான் பிரசன்னமாகி அதனை அன்போடு பெறுகிறேன். அவன் எனக்கு யாவும் கொடுத்தவன். என்னுடைய பக்தர்களுடைய வருணதர்மத்தைச் சங்கிரகமாகச் சொல்லுகிறேன். திரிகாலங்களிலும் ஸ்நானம், அக்கினிகாரியம், சிவலிங்க அர்ச்சனம், தானம், ஈஸ்வர பாவம், தயை, சத்தியம், சந்தோஷம் ஆஸ்திக்கியம், அஹிம்சை, சிரத்தை அத்தியாபனம், அத்தியயனம், யோகம், வியாக்கியானம் சிவதர்ம உணர்ச்சி, பிரமசரியம், சிவாகம சிரவணம், தவம், பொறுமை, சவுசம், சிகாயக்ஞோபவீத தாரணம், விபூதிதாரணம், உருத்திராக்ஷம் அணிதல், நிஷித்த உணவுகளை விலக்குதல், பர்வகாலங்களில் பூஜை, சதுர்த்தசியில் சிறப்பான பூசை, மாதந்தோறும் பஞ்சகவ்விய பிராசனம் பிரம்ம சர்ச்சத்து நீரால் விசேஷமாக என்னை அபிஷேகித்தல், அந்நீரை உட்கொள்ளல் சிரார்த்தான்னம், விக்கிர அன்னம், நியமமில்லாத அன்னம், ஈஸ்வர நிவேதனஞ் செய்யாத அன்னம், பழஞ்சோறு முதலியவற்றை விலக்கல், கள் குடியாமை கள்ளின் மணம் பெறாமை முதலினவாகும்.
இனி வேதியருக்கு அவசியமான தர்மத்தைச் சொல்கிறேன். பொறுமை, சாந்தி, மகிழ்ச்சி, சத்தியம், திருடாமை, பிரமசரியம், சிவஞானம், வைராக்கியம், விபூதிப் பூச்சு, சர்வ சங்கநிவர்த்தி என்ற பத்தும் சிறப்புடையன. சந்நியாசிகளும் வானப்பிரஸ்தர்களும் பகற்காலத்தில் மட்டும் பிøக்ஷ எடுத்துப் புசிக்கவேண்டும். இவர்கள் நிலமிசையே துயின்று இரவுப் பொழுதில் உணவு கொள்ளாதிருக்க வேண்டும். பிரமசாரிகளுக்கு அத்தியயன அத்தியயனங்களே சிறப்பான தர்மங்கள். அவர்கள் விருப்பமிருந்தால் இரவிலும் புசிக்கலாம். க்ஷத்திரியர்கள் அத்தியயனஞ் செய்தல், பிரஜைகளை காத்தல், யுத்தத்தில் சத்துருக்களைக் கோறல், கொடுமைசெய்யும் மிருக பறவைகளையும் மனிதர்களையும் தண்டித்தல், சிவபக்த விசுவாசம் காலத்தில் பெண்ணின்பக் கூடல், படைகளைக் காத்தல் உலக நிலையை விசாரித்து அறிதல், அஸ்திர சஸ்திரங்களைத் தரித்திருத்தல், விபூதிப்பூச்சு, யாகஞ் செய்தல் இவற்றை எனது தர்மங்களாக அனுசரிக்க வேண்டும். வைசியன் பசுகாத்தல், வாணிபம், உழவு செய்தல் முதலியவற்றைத் தர்மங்களாக அனுசரிக்க வேண்டும். சூத்திரன் மேற்கூறிய மூவருக்கும் பணிசெய்தல் என்னுடைய ÷க்ஷத்திரங்களில் உத்தியான வனங்களை வளர்த்தல் இவை என்னுடைய தர்மங்களாகும். கிரகஸ்தன், ருதுகாலங்களில் தன் தர்ம பக்தினியுடன் கூடியிருத்தல் தகுதி. சந்நியாசி, வானப்பிரஸ்தன், பிரமசாரி இவர்கள் மூவருக்கும் பெண்ணின்பக்கூடல் எப்போதுங்கூடாது. பெண்களுக்குத் தங்கள் கணவனுக்குப் பணிசெய்வதைத் தவிர வேறு பணியொன்றுமில்லை. கணவன் விருப்பமிருந்து உத்தரவு கொடுத்தாலன்றி என்னைப் பூஜித்தலும் அவளுக்கு அவசியமில்லை. கணவனது கருத்தில்லாமல் என்னைப் பூஜித்தாலும் அந்தப் பெண் நரகத்தை அடைவாள். கணவனை இழந்த விதவையோ விரதம். தானம், தவம், பரிசுத்தம், நிலமிசை உறங்கல், ஆடவர்கலவி சக்திக்கேற்ற நீராடல், சக்தியில்லாவிட்டால் பஸ்மஸ்நானம், சாந்தி, மவுனம் க்ஷமை என்னைப் பூஜித்தல் துஷ்டர்களைக் கலவாமை ஒரு வேளை பகலிலேயே புசித்தல், அஷ்டமி, சதுர்த்தசி, பூரணை, ஏகாதசி இத்தினங்களில் உபவாசம் முதலியவற்றைக் கொண்டு, என்னுடைய ÷க்ஷத்திரத்தில் வசிக்க வேண்டும்.
பார்வதீ! பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர், பிரமசாரி, கிருகஸ்தர், வானப்பிரஸ்தர் சன்னியாசிகள் பெண்கள் முதலியவர்களுடைய தர்மத்தை பூரணமாகச் சொன்னேன். ஆகையால் என்னையே எப்போதும் தியானித்துப் பஞ்சாக்ஷர ஜபத்தை பிரணவசகிதமாகச் செய்ய வேண்டும். வேதாகமங்களில் சொல்லிய சிவதர்மங்கள் இவையாம். பூர்வ புண்ணியச் சிறப்பால் என்னிடத்தில் விசேஷ பக்தியுடையவர்களாக விளங்கும் சிவஞானிகள், விலாசார்த்தமாகத் தேகத்திற்கேற்ப பெண்ணின்பம் முதலிய விஷய விருப்பமுடையவர்களாயினும் விரக்தியுடையவர்ளாயினும், தாமரையிலேயிலுள்ள நீர், அந்த இலையில் ஒட்டாதிருப்பது போல, பாவங்கள் அவர்களை அடையமாட்டாது. பரிசுத்தர்களும் விவேகிகளும் என் அருள் பெற்றவர்களுமாகிய அவர்கள், ஆத்மஞான முண்டாயிருத்தலின் அவர்களுக்கு வருணாசிரம தர்மம் அவசியமில்லை. ஆகையால் அவர்களுக்கு செய்யத்தக்க கருமங்கள், செய்யத்தகாத கர்மங்கள் என்ற விதிமுறைகளில்லை. பரிபூரணனான எனக்கு கோரிக்கை எப்படியில்லையோ, அப்படியே கிருதகிருத்தியர்களான அவர்களுக்கும் இல்லை. பிரமாதி தேவர்களுக்கும் ஒவ்வொரு பிராணிக்கும் என் ஆக்ஞையே சிறந்து விளங்கும்.
என் ஆக்கினையிலாவது என்னிடத்திலுள்ள பக்தியினாலாவது சிவ தர்மங்களைக் கடைப்பிடித்தவர்களுக்குப் பாபநலிவு உண்டாகி, என் உலகவாசம் உண்டாகும். என் பக்தர்களுடைய லக்ஷணங்கள், உடல் நடுங்கல், வியர்வு, கண்ணீர், கண்டத்தில் ஸ்வரம் பேதித்தல் பரமானந்தம் முதலியனவாகும். இவையாவும் ஒருவனுக்கு இருக்குமானால் அவன் மனிதர்களில் உத்தமனாவான். இரண்டொன்று குறைந்தால் மத்திமன். ஒன்று இரண்டு மாத்திரம் இருப்பின் அவன் அதமன். அக்கினியும் இரும்பும் சேர்ந்த காலத்தில் அதைச் சாதாரண இரும்பு என்று கருதக்கூடாததுபோல மேற்கூறிய உத்தம மத்திம அதமர்களாகிய என் பக்தர்கள் என்னுடைய சாந்நித்யம் பெற்று இருப்பதால் அவர்களைச் சாதாரண மனிதர்கள் என்று நினைக்கக்கூடாது. அவர்கள் காஞ்சிபுரம் முதலியவற்றுடன் மனித உடல் எடுத்துத் தோன்றிய உருத்திரர்கள் என்று நினைக்கத்தக்கவர்கள். அவர்களை மனிதர்கள் என்று தீர்மானித்தவன், பண்டிதன் அல்லன். முழுமூடன் மஹாத்மாக்கள் விஷயத்தில் அஞ்ஞானிகள் அபசாரஞ்செய்தால் அவர்களுடைய செல்வம் ஸ்திரீ முதலியன நசித்துக் கடைசியில் நரகத்தை அடைவார்கள். என்னை விரும்பி பிறதேவர்களைப் பணியாத ஞானியர் பிரம விஷ்ணுவாதிகளின் பதவியைத் துச்சமாக மதிப்பவர்கள். பிருமா - விஷ்ணு, சுரேசர்கள், குணவிசிஷ்டர்களாøகாயல் அவர்களை நாடுபவர்கள் உயர் பதவியை செலுத்துவதே முக்கிய சாதனமாகும் என்று உமாதேவியாருக்கு சிவபெருமான் சென்னார்.
கிருஷ்ணா! பரமாத்மஸ்வரூபமான ஸ்ரீகண்ட பரமேஸ்வரன், உலகை உய்விக்கும் பொருட்டு ஞானமார்க்கத்தை இவ்வகையில் சுருங்கக் கூறினேன். இதுவே எல்லா வேதசாஸ்திரங்களாலும் உண்டாகும் ஞானத்தின் சுருக்கமாகும். இதிகாச புராணங்களின் தாற்பரியம் பரவலாயுள்ளது. ஆனால் ஞானம், நேயம், அநுஷ்டேயம், அதிகாரம் சாதனம், சாத்தியம் என்னும் இவற்றின் சங்கிரமேயாகும். ஞானம் என்பது குருவால் உபதேசிக்கப்பட்டு உணர்ந்து கொள்வது. ஞேயம் என்பது பசு, பதி, பாசம் என்பன. அநுஷ்டேயம் என்பது சிவ லிங்கார்ச்சனை முதலியன. பிரமக்ஷத்திரிய வைசியர்கள் அதிகாரிகள், சாதனம் என்பது சிவசமானத்துவம். இந்த ஆறு அர்த்தங்களையும் நன்றாக உணர்ந்தவனே சர்வக்ஞன் என்று சொல்லப்படுவான். முதலில் பக்தியுடன் பொருளாசை இல்லாமல் கர்ம யாகங்களால் சிவபெருமானைப் பாஹ்ய பூஜை செய்ய வேண்டும். பிறகு மனதில் சிவபக்தி உண்டாவதே ஆப்யந்தர பூஜை எனப்படும். அது பாஹ்ய பூஜையை விடச் சிறப்பானது. அந்தப் பூஜையைச் செய்பவன் பாஹ்ய கர்மம் செய்ய வேண்டுவதில்லை. ஞானாமிருதத்தால் திருப்தியடைந்த சிவசொரூபிக்கு பஹிர் பூஜை என்றும் அந்தர் பூஜை என்றும் அவசியமில்லை. ஆகையால் கிரமமாகப் பாஹ்யாப்பியந்தர பூஜைகளை விட்டு, ஞானத்தால் ஞேயத்தைக் கண்டு, பிறகு ஞானத்தையும் பரிகரித்து சிவத்தினிடத்தில் மனதை ஏகமாகச் செலுத்தினால் அவன் கர்மத்தால் அனுபவிக்க வேண்டியது ஒன்றுமில்லை. ஏகாக்கிரக மனமடைய விரும்புவான். பாஹ்யாந்தர கர்மங்களைச் செய்தாலும் செய்யாவிட்டாலும் எவ்வுபாயத்திலாவது சிவத்திடம் மனதைச் செலுத்த வேண்டும். சிவத்திடமே சித்தத்தைச் செலுத்திய பரம புருஷர்களுக்கு இம்மை மறுமை சுகம் உண்டாகும். பஞ்சாக்ஷர மந்திர உபாசனையாலேயே சித்தர்களாக இருப்பவர்கள் பராபர விபூதிக்காக அந்தச் சர்வேசனை ஆராதித்து பொருந்தியிருக்கிறார்கள் என்று உபமன்யு முனிவர் ஸ்ரீகிருஷ்ணரிடம் சொன்னார்.
12. பஞ்சாக்ஷர மந்திரமகிமை
உபமன்யு முனிவரை நோக்கி, ஸ்ரீகிருஷ்ணர் ஞானங்கள் யாவற்றுக்கும் பிறப்பிடமாகிய மாமுனிவரே! பஞ்சாக்ஷர மந்திர மகத்துவத்தை விசாரித்தறிய விருப்பமுள்ளதால் அதை எனக்கு உபதேசித்தருள செய்ய வேண்டும் என்று கேட்டார். உபமன்யு முனிவர் சொல்லத் துவங்கினார். யாதவ குல திலகனே! பஞ்சாக்ஷர மந்திரத்தின் மகிமையைச் சொல்ல ஒரு கோடி வருஷங்களாகும். ஆனாலும் சுருங்கச் சொல்கிறேன்.
இந்தப் பஞ்சாக்ஷரமே பிரணவத்துடன் கூடிச் சடாக்ஷரமாக இருக்கும் என்று வேத சிவாகமங்கள் கூறும். இது மந்திரங்களிலெல்லாம் சிறந்த மந்திர ராஜமாகும். இது சில எழுத்துக்களே ஆயினும் விசேஷ அர்த்தமுடையது. சிவ பக்தர்கள் இரவு உச்சரிப்பதால் முக்தி நிலை கிடைக்கும். எல்லா மந்திரங்களுக்கும் ஆதி மந்திரமாயுள்ளது. பயனைச் சந்தேகமன்றி கொடுக்கவல்லது. இந்த மந்திரமே சிவ சொரூபமாயுள்ளது. அனேகம் சித்திகளை அளிக்கவல்லது. மங்களகரமானது. மக்களின் சித்தத்துக்கு ரஞ்சகமானது. சுகமாக உச்சரிக்கத்தக்கது. சர்வக்ஞனான சிவபெருமானால் எல்லா ஜீவர்களுக்கும் இதம் உண்டாகும்படி ஆலமரத்தின் இலை, கிளை, காய், கனி முதலியவற்றுக்கெல்லாம் சிறுவிதை காரணமாக இருப்பதுபோல் எண்ணிறந்த பொருள்களுக்கு எல்லாம் இடமாகவுள்ள இந்த பஞ்சாக்ஷர மந்திரம் உண்டாக்கப்பட்டது.
வாச்சியன், சிவன், வாசகம், மந்திரம் இவ்விரண்டுக்கும் சம்பந்தம் அநாதியாக இருக்கிறது. சம்சாரம் அநாதியாக இருப்பது போல அதற்கு நிவாரண ஆகிய பரமசிவன் அநாதியாக இருக்கிறான். அமிழ்தங்கள் வியாதிக்கு விரோதமாக இருப்பதுபோலவே சிவபெருமான் பிறவிச்சுழல் என்னும் நோய்க்கு விரோதியாக இருக்கிறான். சூரியன் இல்லாவிட்டால் உலகம் முழுவதும் இருள்மயமாகி அல்லலுறும் அல்லவா? அதுபோல ஈஸ்வரன் இல்லாவிட்டால் உலக சிருஷ்டியும் அஞ்ஞானத்தால் மயங்கி அழியும். பிரகிருதி புருஷர்களால் சிருஷ்டி நடவாதோ என்று கேட்பாயாயின் சிருஷ்டி என்பது புத்திமானால் செய்யத்தக்கது. பிரகிருதி அசேதனமானது, புருஷன் கிஞ்சிக்ஞன். ஆகையால் சிருஷ்டி நடவாது என்று தெரிந்து கொள்வாயாக, தர்மா தர்மங்களும் பந்தமோக்ஷ விசாரணையுஞ் செய்யச் சர்வேஸ்வரனேயல்லாமல் வேறு காரணமில்லை. வைத்தியன் இல்லாவிட்டால் நோயாளிகள் இறப்பதுபோல சர்வேஸ்வரன் இல்லாவிட்டால் உலகம் முழுவதும் வருந்தி ஒழியும். ஆகையால் அநாதியும் ஆதியும், சர்வக்ஞனும் பரிபூரணசொரூபியும் மங்களகரனும், யாவரையும் சம்சார பந்தத்திலிருந்து காப்பவனும் ஆதிமத்தியாந்தமற்றவனும், விமலனும் சிவாகமங்களாலறியத்தக்கவனுமாகிய சிவபெருமான் உளன் என்று வேதங்கள் முறையிடுவது உண்மை. அத்தகைய சர்வேசனை அறிந்து சொல்லத்தக்க மந்திரம் இந்தப் பஞ்சாக்ஷர மந்திரமேயாகும். இதன் பொருள் அந்தப் பரமேசனேயாகும். அர்த்தமில்லாமல் சப்தமில்லை சப்தமில்லாமல் அர்த்தமில்லை என்னும் அபிதான அபிதேயத்தால் அம்மந்திரமே பரமசிவன். இதுவே சிவஞானம். இதுவே பரமபதம் இந்தப் பஞ்சாக்ஷர வாக்கியம் சிவ சம்பந்தமான விதுவாக்கியமன்றிச் சிவ சம்பந்தமான அர்த்தவாத வாக்கியம் அல்ல. ஏனென்றால், சர்வக்ஞனும் சர்வ பரிபூரணனும் சுபாவ விமலனுமாகிய ஈஸ்வரன் உலக அநுக்கிரக காரணமாக குணதோஷமுடைய பொருட்களை அக்குணதோஷங்களுடன் உண்மையாகக் கூறுவன் அன்றிப் பொய்யாகக் கூறமாட்டான்.
ஆனால் இராகத்துவேஷாதிகளுடையவர்களே அங்ஙனம் கூறுவார்கள். கேட்ட மாத்திரத்திலேயே காமக்குரோதாதிகளை ஒழித்துக் கீர்த்தியைக் கொடுக்கத்தக்க மந்திரம் எதுவோ அதுவே பரமமங்களமானது. மந்திரங்கள் அநேகம் இருந்தாலும் சாம்பவமூர்த்தியால் சொல்லப்பட்ட நிர்மலமான இந்த மந்திரத்திற்கு ஒப்பான மந்திரம் வேறொன்றுமில்லை. வேத வேதாங்கம் முழுதும் இந்த ஒரு மந்திரத்திலேயே விளங்கும். எவனுடைய இதயத்தில் பிரணவசகிதமான பஞ்சாக்ஷர மந்திரம் இருக்கிறதோ அவன் எல்லா சாஸ்திரங்களையும் கேட்டவன் சிவாய என்ற மூன்று எழுத்துக்கள் எவனுடைய நாவில் எப்போதும் விளங்குமோ அவன் வாழ்வே உயிர் வாழ்வு நீசனாயினும் அதமனாயினும் மூர்க்கனாயினும் பண்டிதனாயினும் பஞ்சாக்ஷர நிஷ்டையுடையவனாயின் பாவ பஞ்சரத்திலிருந்து விடுபடுவான் என்று சிவபெருமான் உலகத்தாருக்கு நன்மையுண்டாகும்படி பூர்வம் உமாதேவியாருக்குச் சொல்லியருளினார். அவ்வாறு சொல்லிய சர்வேசனை நோக்கி, ஸ்வாமீ! கலியுகம் பாவமுடையதல்லவா? அக்காலத்தில் மனிதர்கள் அஞ்ஞானமும், பாவமும் அடைந்து வர்ணாசிரமதர்மங்களை விட்டுச் சர்வஜாதிகளும் சங்கரமாகி யாவரும் மந்திராதிகளாக இருத்தலின், குருசிஷ்ய சிரமம் இல்லாமையால் உம்முடைய பக்தர்கள் எப்படி முக்தியடைவார்கள்? என்று உமாதேவி கேட்க, சங்கரபகவான் பின்வருமாறு கூறினார்.
பார்வதி என் சம்பந்தமான சிறந்த பஞ்சாக்ஷர வித்தையை அனுசரித்து பக்தியுடன் இருக்கும் கலிகாலபக்தர்கள் முக்தியையே அடைவார்கள். மனவாக்கு காயங்களால் செய்த தோஷங்களால் தூஷிக்கத்தக்கவர்களும் தயையே சிறிதும் இல்லாதவர்களும் சப்தர்களுமாகிய துஷ்டமனமுடைய பாவிகளும் என்னிடத்தில் பக்திமட்டுமே உடையவர்களாயின், என்னுடைய பஞ்சாக்ஷர வித்தையே அவர்களை எல்லாப் பாவங்களிலிருந்தும் விலக்கும் என்று இந்தப் பூவுலகில் நான் பலமுறை பிரதிக்ஞை செய்திருக்கிறேன். பதிதனாயினும் என் பக்தனாகிப் பஞ்சாக்ஷரோபாசனை செய்தால் முக்தனாவான் என்று கூறினார். உமாதேவியார் சுவாமி! பதிதன் என்பவன் எப்போதும் கர்மங்களைச் செய்வதற்கு அயோக்கியன் அல்லவா? அத்தகையவன் எத்தகைய கர்மத்தைச் செய்தாலும் அதன் பயனை அடையாமலே நரகத்திற்கு ஏதுவாவான் அல்லவா? அவ்வாறு இருக்கப் பதிதன் இந்தப் பஞ்சாக்ஷர மந்திரத்தால் எப்படி முக்தனாவான் என்பதையும் எனக்குக் கூற வேண்டும் என்று கேட்டார்! அதற்கு சிவபெருமான் பெண்ணே! நல்ல கேள்வி கேட்டாய்! இதன் பதில் இரகசியமானது பதிதன் தன்னைப் புனிதனாகக் கருதி, வேத மந்திரங்களால் என்னைப் பூஜிப்பானாயின் தயையின்றி நரகத்தையே அடைவான். ஆனால் பஞ்சாக்ஷர மந்திரத்தால் என்னைத் தியானிப்பானாயின் மோக்ஷத்தை அடைவான். உதகபக்ஷணமும் வாயுபக்ஷமும் செய்து கொண்டு எண்ணற்ற விரதங்களைச் செய்து உடலைச் சோஷிக்கச் செய்து பல மந்திரங்களால் என்னைத் தியானித்தாலும் என்னுடைய சாலோக பதவி கிடைக்காது. இந்தப் பஞ்சாக்ஷர மந்திரத்தாலே ஒருமுறை என்னைத் தியானஞ்செய்தாலும் என்னுடைய லோகத்தையடையச் சந்தேகமில்லை. ஆகையால் தவம், யாகம், நியமம் முதலிய யாவும் பஞ்சாக்ஷர மந்திர உபாசனைக்குக் கோடியமிசத்தில் ஓர் அமிசத்திற்கு நிகராகாது. பாசபக்தனாயினும் முக்தனாயினும் எவன் பஞ்சாக்ஷர மந்திரத்தால் என்னை பூஜிப்பானோ அவனே ஐயமின்றி முக்தியடைவான். சிவபக்தியுடையவனாயினும் சிவபக்தியில்லாதவனாயினும் பதிதனேயாயினும் மூடனாயினும் ஒருமுறை என்னைப் பஞ்சாக்ஷர மந்திரத்தால் பூஜித்தால் அவன் முக்தனாகிறான். பஞ்சாக்ஷரங்களாலாவது, சடாக்ஷரங்களாலாவது என்னைப் பக்தியோடு ஜபித்தால் முக்தனாகிறான். குருமுகத்தால் உபதேசம் பெற்றாவது. உபதேசிக்கப் பெறாமலாவது இந்தப் பஞ்சாக்ஷர மந்திரத்தால் என்னைப் பூஜித்தவன் என் பக்தன். உபதேசம் பெறாதவனைவிட உபதேசம் பெற்றவன் கோடிப் பங்கு அதிகம். ஆகையால் என்னுடைய பஞ்சாக்ஷர மந்திரத்தை குருமுகமாக உபதேசிக்கப் பெற்றுக் கொண்டே உபாசிக்க வேண்டும். குருமுகமாக உபதேசிக்கப் பெற்று பஞ்சாக்ஷர உபாசனை செய்யும் பிரமச்சாரி என்னுடைய சாரூப்பியத்தை (இறைவனுருவை) அடைவான். சிறப்பாகச் சொல்ல வேண்டியதென்ன என்னுடைய பக்தர்கள் யாவரும் இந்த மந்திர உபாசனைக்கு அதிகாரிகள், அதில் குருபதேசம் பெற்றவன் உயர்ந்தோன்.
இந்தப் பஞ்சாக்ஷர பிரபாவத்தாலேயே உலகங்கள், வேதங்கள், மாமுனிவர், தர்மங்கள், தேவர்கள், எல்லா ஜகத்தும் யாவும் சாசுவிதமாக நிலைத்துள்ளன. பிரளயம் நிகழ்ந்த காலத்தில் தாவர ஜங்கமங்கள் யாவும் நசிக்கையில் யாவும் பிரகிருதியில் அடங்க, அப்பிரகிருதி என்னிடத்தில் லயமடையும் அப்போது நான் ஒருவனே இருப்பேன். எனக்கு இரண்டாவதாக ஒருவனும் இருக்கமாட்டான். அப்போது வேதங்கள், சாஸ்திரங்கள், வித்தைகள் யாவும் பஞ்சாக்ஷர மந்திரத்தில் இருக்கும்படி என் சக்தியால் செய்கிறேன். அவை என்னுடைய சக்தியால் நாசமடையாது இருக்கும். படைப்புத்துவக்கமும் என்னாலேயே பிரகிருதி புருஷ பேதத்தால் செய்யப்பட்டது. அப்போது கடல் நடுவே சேஷசயனத்தில் மாயனாகிய நாராயணன் துயில் செய்தனன். அவனது நாபியிலிருந்து தோன்றிய பிரமன் ஈகாமியமில்லாமல் மூவுலகங்களையும் படைக்கச் சக்தியற்று மஹாதேஜஸ் உள்ள பத்து முனிவர்களை படைத்து, அவர்களுக்குச் சிருஷ்டி செய்யும் ஆற்றலை உண்டாக்க வேண்டும் என்று விருப்பங்கொண்டு, அவர்களுடன் என் அருகில் வந்து, ஜகதீசா! என் மக்களான இவர்களுக்கு படைப்புத்திறன் உண்டாகத் தயை புரியவேண்டும்! என்று வேண்டினான். நான் ஐந்து திருமுகங்களுடன் விளங்கி ஐந்து முகங்களால் ஐந்து எழுத்துக்களையும் பிரமதேவனுக்கு உரைக்க, அவன் ஐந்து முகங்களால் அவ்வைந்து எழுத்துக்களையும் கிரகித்துக் கொண்டு வாச்சிய வாசக சம்பந்தத்தால் சர்வேசனான பரமாத்மா யான் என்பதை உணர்ந்து அந்த மந்திர விநியோகத்தையும் உணர்ந்து, அந்தப் பத்து முனிவர்களுக்கும் விதிப்படி உபதேசித்தான். அவர்கள் அந்த மந்திரத்தை அடைந்து தங்கள் தந்தையின் கட்டளைப்படி என் ஆராதனையில் மிகவும் விருப்பமுடையவர்களாகி மேருமலைச் சிகரத்திலுள்ள எனக்குப் பிரியமான முஞ்சவான் என்ற சிகரத்தையடைந்து அதன் உச்சியில் உலக சிருஷ்டியை விரும்பி, ஆயிரத்தேவ ஆண்டுகள் காற்றைப்புசித்துக் கொண்டு பஞ்சாக்ஷர மந்திர ஜபத்துடன் உக்கிரமான தவத்தைச் செய்தார்கள். அவர்கள் தவத்தை மெச்சிய நான் காட்சியளித்து படைப்புத் தொழில் விருத்தியடையும்படி அந்த ரிஷிகளுக்கு பஞ்சாக்ஷர மந்திரத்தில் ருக்ஷி, சந்தஸ், கீலம், பீஜம், சந்தி தெய்வதம், நியாசம், ஷடங்க திக்பந்தரம், விதி, யோகம் முதலியவற்றை உபதேசிக்கும் போது, அவர்கள் அந்த மந்திர மகிமையால் அதிக தவ சம்பன்னர்களாய் தேவ; அசுர, மனிதர்களின் படைப்பைச் செய்தார்கள்.
சுந்தரீ ! பரமவித்தையாகிய இந்த பஞ்சாக்ஷர மந்திர ஸ்வரூபத்தை இப்போது சொல்லுகிறேன் கேட்பாயாக. முதலில் நம: என்னும் பதத்தை உச்சரிக்க வேண்டும். பிறகு சிவாய என்னும் பதத்தை உச்சரிக்க வேண்டும். இவ்வைந்து எழுத்துக்களே சங்கிரகமாகவுள்ள பீஜம். அது முதலில் என்னாலேயே சொல்லப்பட்டது. அது எனக்கே வாசகமாக இருக்கிறது. அந்தப் பஞ்சாக்ஷரி புடமிட்டெடுத்த பொன்மயமும் பூரித்துயர்ந்த கொங்கைகளும் ஆறு சிரங்களும் கரங்களில் பதுமம், உற்பவம் வாதம் அபயங்களும் சர்வ லக்ஷணங்களும் விசேஷ ஆபரண பூஷிதமும் புண்டரீகாசனமும் கரிய சுருண்ட மயிர்களும் கொண்டு விளங்குவதை பரமஞானிகளே உணர்வார்கள். இவ்வைந்து எழுத்துக்களும் முறையே மஞ்சள் நிறம், கருநிறம், புகைநிறம், பொன்னிறம், செந்நிறங்களாக விளங்கும். இந்த ஐந்து எழுத்துக்களையும் விந்து நாதங்களுடன் கூட்டி உச்சரிக்கவேண்டும். விந்து, அர்த்தசந்திர ஸ்வரூபமானது. நாதம் தீப சிகையைப் போன்றது. இரண்டாம் எழுத்து பீஜம். நான்காம் எழுத்து தீர்க்கபூர்வமானது. ஐந்தாம் எழுத்து சக்தி, இந்த மந்திரத்திற்கு வாமதேவன். ரிஷி பங்க்தி சந்தஸு, தேவதை சிவனாவான். இவ்வைந்து எழுத்துக்களுக்கும், கவுதமன், அத்திரி, விசுவாமித்திரன், ஆங்கிரசு, பரத்துவாஜர் முதலியோர் முறையே ரிஷிகள், காயத்திரி அனுஷ்டிப்பு திரிஷ்டிப்பு சந்தஸு: பிரஹதி விராட் என்று சொல்லப்படும் இந்திரன், உருத்திரன், விஷ்ணு, பிரமன், குமாரஸ்வாமி இவர்கள் தேவர்கள் இவ்வைந்து எழுத்துக்களும் என் ஐந்து முகங்களிலேயே பொருந்தியிருக்கும். அவற்றுள் கிழக்கு முகத்தில் நகாரமும், தெற்கு முகத்தில் மகாரமும், மேற்கு முகத்தில் சிகாரமும், வடக்கு முகத்தில் வகாரமும், ஊர்த்துவத்திலுள்ள ஈஸான முகத்தில் யகாரமும் பொருந்தும். அவற்றுள் முதல் எழுத்தும், நான்காவது எழுத்தும் உதாத்தம். இரண்டாம் எழுத்தும், ஐந்தாம் எழுத்தும் ஸ்வரிதம். மூன்றாம் எழுத்து அறுதாத்தம். இந்த ஐந்து எழுத்துக்களும் மங்களகரமாகக் கோர்வை செய்யப்பட்டுள்ளன. இதுவே மூலவித்தை என் ஸ்வரூபமான இவற்றின் பெயர்கள் தெரியத்தக்கவை. நகாரம் சிவன், மகாரம் சிகை, சிகாரம் கவசம், வாகாரம் நேத்திரம், யகாரம் அஸ்திரம் நம: ஸ்வாஹா வஷட்ஹும் வெளஷட்பட் என்னும் இவை அவற்றின் இறுதியில் கூட அங்கத்துவமடைகின்றன.
பெண்ணே! இந்தப் பஞ்சாக்ஷர மந்திரத்தின் ஐந்தாவது எழுத்தாகிய யகாரத்தை பன்னிரண்டாவது ஸ்வரமாகிய ஐகாரத்துடன் சேர்த்து உச்சரித்தால் (சிவை) உனக்கு மூல மந்திரமாகும். ஆகையால் இந்த மந்திரத்தால் மனவாக்குக் காயங்களால் நம்முடைய இருவர் பூஜையையும் ஜபஹோமாதிகளையும் ஞானத்தோடும் சிரத்தையோடும் காலத்தில் பக்தி பூர்வமாகச் சக்திக்கு ஏற்ப, சம்பத்து முதலியவற்றை மதியாமல், அன்புடன் செய்யத்தகும். ஒருவன் எவ்விடத்திலாவது எந்தக் காலத்திலாவது பக்தியுடன், நம்மைப் பூஜிப்பானாயின் முக்தியடைவான். என் பக்தர்களுக்காகவே சாஸ்திர நியமங்கள் செய்யப்பட்டுள்ளன. இனி மந்திரத்தைக் கிரகிக்க வேண்டிய முறையைக் கூறுகிறேன். குரு உபதேசம் இல்லாமலும் கிரியா பூர்வம் இல்லாமலும் சிரத்தையில்லாமலும் குருதக்ஷிணை கொடாமலும் பெற்ற மந்திரத்தை எப்பொழுதும் ஜபித்தாலும் பயன் உண்டாகமாட்டாது. குரு உபதேசம் பெற்று கிரியா பூர்வமாகச் சிரத்தையுடன் குருதட்சிணை கொடுத்து என் ஸ்வரூபமான மந்திரத்தைப் பெற்று ஜபித்தால் பெரும் பயன்களைக் கொடுக்கும். ஆசாரிய ஸ்தானத்திற்கு யோக்கியதையும் வேத வேதாங்க உணர்ச்சியும் ஜபசீலமும் நற்குணமும் தியானயோகத்தில் விடாத சித்தமுமுடைய உத்தம அந்தணனாகிய குருவின் சன்னதியை அடைந்து, பக்தியுடன் மனவாக்கு காயங்களால் பூஜித்து மகிழ்ந்து ஆசிரிய பக்தி வகிக்க வேண்டும். ஆசாரியனுக்கு யானை, குதிரை, தேர், இரத்தினம், நிலம், வீடு, அணிமணி ஆடை, தானியம், தனம் முதலியவற்றைத் தத்தம் சக்திக்கு ஏற்ப வஞ்சனையில்லாமல் குருதக்ஷிணையாகக் கொடுக்க வேண்டும். மந்திர சித்தி உண்டாக வேண்டும் என்று கருதுவோன் தன்னிடமுள்ள பொருளை ஆசாரியனுக்கு மறைக்கக்கூடாது. அவ்வாசிரியனுக்கு தன் உடல் பொருள் ஆவி மூன்றினையும் ஒப்புவிக்கவேண்டும். இப்படி ஆசாரியனை மகிழ்ச்சியடையச் செய்து, அவன் மூலமாக மந்திரத்தையும் ஞானத்தையும் முறைமையாகக் கிரகிக்க வேண்டும். அவ்வாறு மகிழ்ந்த குருவானவன் தன்னை ஓராண்டுக் காலம் பணிவிடை செய்து வந்து அகங்காரம் ஒழிந்து, பரிசுத்தனாய் உபவாசாதி விரதங்களை அனுஷ்டிக்கும் மாணவனை மந்திரபூர்வமாகப் பூரண கும்பத்தால் ஸ்நானம் செய்வித்து, கந்தம், புஷ்பம், ஆடை ஆபரணம் முதலியவற்றால் அலங்கரித்து, புண்ணியமான வசனம் செய்வித்தும் பிராமண பூஜை செய்வித்து கடற்கரை, நதிக்கரை, பசுக்கள் தங்குமிடம் சிவாலயம், புண்ணியபூமி, தன்வீடு ஆகிய இடங்களில் ஓரிடத்தில் சுபநட்சத்திரமும் சுபயோகமும் சுபகரணமும் கூடிய ஒரு காலத்தில் ஏகாந்தமாக இருந்து, மகிழ்ச்சியுள்ளத்துடன் பஞ்சாக்ஷர மந்திரத்தை உதாத்தாதி வாயுக்தமாக உபதேசித்து, அவனை அவ்வகையே சிரமமாக உச்சரிக்க வல்லவனாகச் செய்து உனக்குச் சுகமுண்டாகுக நீ யாவருக்கும் பிரியவாவனாகுக! என்று வாழ்த்த இவ்வகையாக மந்திரத்தைக் கொடுக்க வேண்டும். அவன் நடந்துகொள்ள வேண்டிய செயல்களைக் குறித்து ஆக்ஞை செய்யவேண்டும்.
இவ்வகையாக, குருவினால் மந்திரத்தையும் ஆக்ஞையையும் அடைந்த ஜீவன், நாள்தோறும் சங்கற்பம் செய்து, தான் பிழைத்திருக்கும் வரையில், ஆயிரத்தெட்டுமுறை மந்திர ஜபஞ் செய்தால் அவன் உத்தமகதியை அடைவான். இந்த மந்திரத்தின் ஒவ்வொரு அக்ஷரத்திற்கு நான்கு லக்ஷம் ஜபம் செய்துகொண்டு இரவில் மட்டும் உணவருந்தி வருபவன் (புனஸ்சரணை) நியமமாக ஜபம் செய்தவன் எனப்படுவான். புனஸ்சரணை செய்தபிறகும் ஜபத்தை நிறுத்தாமல் மேலும் செய்துகொண்டு வருபவனுக்குச் சமமான மந்திரசித்தியுடையவன் ஒருவனுமில்லை. நீராடித் தூய்மையான ஓர் இடத்தில் ஆசனத்தில் வடக்கு முகமாகவாவது கிழக்கு முகமாகவாவது இருந்து ஏகமனதாக உன்னையும் என்னையும் ஆசாரியனையும் தியானித்து, பஞ்சபூதங்களையும் தஹனபலாலனாதிகளால் சுத்திசெய்து, நியாசங்களைச் செய்து, பிராணாயாமம் முடித்து ஆசாரியனால் உபதேசிக்கப்பட்ட மந்திரம், ருஷி, சந்தஸ், அதிதேவதை, பீஜம் சக்தி முதலியவற்றுடன் ஸ்மரணைசெய்து பஞ்சாக்ஷர ஜபம் செய்யவேண்டும். மானஸமானஜபம் உத்தமம், மெல்லப் பிறர் கேளாத வகையில் செய்யும் ஜபம் மத்திமம், யாவருக்கும் கேட்கும்படியாக உயர்த்தி ஜபித்தல் அதமம். மேற்கூறிய மூவகைகள் ஜபபேதத்தால் உண்டாகுமிடத்து உத்தமத்திற்குத் தெய்வம் உருத்திரனும் மத்திமத்திற்கு விஷ்ணுவும், அதமத்திற்குப் பிரமனுமாவர். உதாத்தாறுதாத்த ஸ்வரிதஸ்வரங்களுடன் மந்திராக்ஷரங்களை உச்சரித்து செய்யும் ஜபம் வாசிகம். நாக்கை மட்டும் அசைத்து செய்யும் ஜபம் உபாம்ஸு (இரகசியம்) மனதிலேயே தியான ரூபமாக ஜபித்தல் மானசீகம். வாசிகத்துக்கு ஜபித்த அளவே பயன். உபாம்சு ஒன்றுக்கு ஆயிரம் வாசிக பலன் உண்டாகும். ஆதியந்தங்களில் பிராணாயாமகங்களையுடைய ஜபம் ஸகர்ப்பம் என்றும், ஆதியந்தங்களில் பிராணாயாமமில்லாத ஜபம் அகர்ப்பம் என்றும் சொல்லப்படும். பிராணாயாமமாவது நேசக பூரகங்களைச் செய்து, நாற்பதுரு ஜபிக்கும் வரை வாயுபந்தனம் செய்வதாகும். அசக்தனாக இருப்பவன். நாற்பதுரு ஜபிக்கும் வரையில் நிறுத்தக்கடமையால் ஐந்துரு மூன்றுரு அல்லது ஒருருவாவது ஜெபிக்கும் அளவுகாலம் வாயுவைச் சிந்தித்தலும் பிராணாயாமம் என்பர். ஸகர்ப்ப அகர்ப்பங்களில் ஸகர்ப்பமே சிறந்தது. ஸகர்ப்பத்தைவிட ஸத்தியானம் ஆயிரம் பங்கு சிறப்புடையது. இவ்வகையான ஜபங்களில் தன் சக்திக்கு ஏற்ப ஒரு வகையான ஜபத்தைச் செய்யவேண்டும்.
பார்வதி! ஜபம் செய்யும்போது விரலாற் கணக்கிடுதல் அவ்வளவு பயனேயே தரும், விரல் ரேகையால் அளவிடல் எட்டுப் பங்கு அதிகம், புத்திர ஜீவமணியால் ஜபித்தால் பத்துப் பங்கு அதிகம், பவளத்தால் ஜபித்தால் அதில் ஆயிரம் மடங்கு அதிகம், ஸ்படிக மணியால் ஜபித்தால் அதில் பதினாயிரம் பங்கு அதிகமாகும். முத்து மணியால் ஜபித்தால் அதில் இலக்ஷம் பங்கு அதிகம், தாமரைமணியால் ஜபித்தால் அதில் பத்து லக்ஷம் பங்கு அதிகம், பொன்னாற் செய்த மணியால் ஜபித்தால் அதில் கோடிப் பங்கு அதிகப்பயனுண்டாகும். உருத்திராக்ஷ மணியாலாவது தர்ப்பை முடியிலாவது ஜபிக்கும் பயனுக்கு அளவு சொல்லி முடியாது. இனி ஜபமாலை முப்பது மணிகள் கொண்டதாயின் ஐசுவரியம் உண்டாகும். இருபத்தேழுக்கு புஷ்டியும், இருபத்தைந்துக்கு முக்தியும், பதினைந்துக்கு அபிசார் மந்திர சித்தியும் உண்டாகும். அங்குஷ்ட (பெரு) விரலால் ஜபித்தால் முக்தி உண்டாகும். தர்ஜனி (சுட்டு) விரலால் ஜபித்தால் சத்துரு நாசம் உண்டாகும். மத்திம (நடு) விரலால் ஜபித்தால் பொருள் உண்டாகும். அநாமிகை (மோதிர) விரலால் ஜபித்தால் சாந்தி உண்டாகும். கனிஷ்டிகை (சிறு) விரலால் ஜபித்தால் யாவும் உண்டாகும். பெருவிரலைக் கூட்டாது ஜபித்தால் நிஷ்பலமாம். வீட்டில் ஜபிப்பதைவிட பசுமந்தை தங்குமிடத்தில் ஜபித்தல் அதைப்போல நூறுபங்கும், நந்தவனத்தில் ஜபித்தால் அதில் ஆயிரம் பங்கும், புண்ணிய பர்வதங்களில் ஜபித்தல் அதிலும் ஆயிரமும், நதிகளில் லக்ஷமும் தேவாலயத்தில் கோடியும் நமது சன்னதியில் அநந்தமுமாக விசேஷ பயனையளிக்கும். சூரியன், சந்திரன், ஆசாரியன் விளக்கு, ஜலம், வேதியர், பசு இவற்றின் முன்னர் ஜபித்தல் நலம். கிழக்கு முகம் பார்த்து ஜபித்தால் வசியமும் தக்ஷிணம் அபிசாரமும், மேற்கு தனமும் உத்தரம் காந்தியும் உண்டாக்கும். சூரியன், அக்கினி, குரு, பிராமணர், பெரியோர் வந்தால், அவர் முன்னிலையிலிருந்ததன்றி அவர்களை விலகி ஜபிக்கக்கூடாது. ஜபம் செய்யும் போது, தலைமீது துகில் சுற்றியும், உடலை வஸ்திரத்தால் போர்த்தியும் தலைமயிரை விரித்துக்கொண்டும் திகம்பரனாயும் (நிர்வாணமாகவும்) பவித்திரமணியாமல் இருந்தும் ஜபம் செய்யக்கூடாது. வார்த்தையாடிக் கொண்டும் புனிதமில்லாமலும் கோபம், சாந்தம், தும்முதல், கொட்டாவி விடுதல் உமித்தல் முதலியன செய்யாமலும் புலையர் நாய் முதலிய அசுத்தங்களைப் பாராமலும் ஜபம் செய்யவேண்டும்.
தும்மல், இருமல் முதலியன தேகதர்மங்கள். ஆகையால் அத்தகைய உடற்குற்றங்கள் சம்பவித்தால் மும்முறை ஆசமனீயம் செய்து, என்னையும் உன்னையும் தியானிக்க வேண்டும், அல்லது சூரியன் அக்கினி தீபம் இவற்றில் ஒன்றைப் பார்க்க வேண்டும், அல்லது பிராணாயாமம் செய்ய வேண்டும். ஆசனமில்லாமலும் சயனித்தும், நடந்தும், நின்றும், கால் நீட்டியும், குக்குடாசன மிட்டும் வாகனமீதமர்ந்தும், கட்டிலிலிருந்தும் மனதில் சிந்தனையுற்றும், தெரு, அசுத்தமான இடம், இருள் முதலிய இடங்களிலும் மந்திரத்தை ஜபிக்கக்கூடாது. சக்தியிருக்கும் வரையில் இந்த நியமங்களைக் கவனிக்கவும். சக்தியில்லா விட்டால் சக்திக்குத் தக்கவாறும் ஜபிக்கலாம். விசேஷமாகச் சொல்ல வேண்டியதில்லை. ஒரே வாக்கியம் சொல்லுகிறேன். சதாசார சம்பன்னனாய், சுத்தமாக மந்திர ஜபம் செய்பவனுக்கு எல்லா மங்களங்களும் சித்திக்கும். ஆசாரமே முதலான தர்மம் ஆசாரமே உத்திருஷ்டமான தனம். ஆசாரமே மேம்பாடான வித்தை, ஆசாரமே உயர்வானகதி, ஆசாரமற்றவன் பூவுலகில் நிந்திக்கப்படுவான். பரலோகத்திலும் சுகமடையமாட்டான். ஆகையால் மந்திரம் ஜபிப்பவன் ஆசாரத்துடன் இருக்க வேண்டும். எவனுக்கு வேத சாஸ்திரங்களில் எவ்வெக் கருமங்கள் விதிக்கப்பட்டிருக்கின்றனவோ அவற்றைக் கடைப் பிடிப்பதே சதாசாரம். ஏனயவை சமாசாரமாக மாட்டாது. சத் புருஷர்களால் ஆசரிக்கப்படுவதால் சதாசாரம் எனப்படும். சதாசாரத்திற்கு மூல காரணம் ஆஸ்திக்கியம். ஆஸ்திகனாக இருந்து விதிவலியால் சதாசார அனுஷ்டானத்துக்கு இடையூறு சம்பவிக்குமானால் அவன் தூஷிக்கத்தக்கவனல்லன். ஆகையால் ஆஸ்திகனாக இருக்க வேண்டும். புண்ணிய பாவங்களால் இவ்வுலகத்தில் சுக துக்கங்களுண்டாவது போல, பரலோகத்திலும் சுக துக்கங்களை அநுபவிக்க வேண்டும் என்ற நம்பிக்கையுண்டாயிருத்தலே ஆஸ்திக்கியம்.
பார்வதி! மிகவும் இரகசியமாகப் போற்றத்தக்க வேறொன்றையுஞ் சொல்லுகிறேன். அது நாஸ்திகர் முதலான பாவிகளுக்குச் சொல்லலாகாது. அது என்னவெனில் சதாசார மில்லாதவனாயினும் பதிதனாயினும் சண்டாளனாயினும் ஒருவனைக் காக்கத் தக்கது. பஞ்சாக்ஷர மந்திரத்தைவிட பிறிதொன்றில்லை. நடந்து கொண்டிருந்தாலும், நின்று கொண்டிருந்தாலும் தன் விருப்பத்தின்படி கஷ்டத்தனமான காரியங்களைச் செய்து கொண்டிருந்தாலும் அசுசியாயினும் சுசியாயினும் ஷடத்துவ பரிசோதனமில்லாமல் அநாசாரமுடையவனாயினும் இந்த மந்திரம் குருவால் உபதேசிக்கப்படினும் உபதேசிக்கப்படாவிட்டாலும் சிறிது ஜபித்தாலும் பெரும் பயனைக் கொடுக்கும். எல்லாத் தோஷங்களையுடையவனாயினும் என்னிடம் பக்தி என்பது ஒன்றுமட்டும் இருக்குமானால் அவனுக்குச் சந்தேகமில்லாமல் மந்திர சித்தியுண்டாகும். அத்தகைய பக்தனுக்கு, லக்கினம், திதி, வாரம், யோகம் நட்சத்திரம் முதலியவை நன்றென்றும் தீதென்றும் அவசியம் இல்லை. அவன் நித்திரை செய்யும் போதும் விழித்துக் கொண்டிருப்பவனே யாவான். ஒருவனுக்கும் அவன் ஒரு காலத்திலும் பகைவனாக மாட்டான். மந்திரசித்தியடைந்த குருவை அடுத்து உபதேசம் பெற்றவன். சித்தன் பரிசுத்தமுள்ள குருவையடுத்து உபதேசம் பெற்றவன் சித்தன். உபதேசம் இல்லாமல் செரிப்பவன் சாத்தியன். என்னிடத்தும் மந்திரத்தினிடத்தும் குருவிடத்தும் சிரத்தைபக்தியுடையவர்கள் இதர மந்திரங்களை விடுத்து, பஞ்சாக்ஷர மந்திரத்திலேயே நிர்விக்கினமாக மனதைச் செலுத்தி ஜபிக்கவேண்டும். மற்ற இந்த மந்திரமே சித்திக்குமாயின் எல்லா மந்திரங்களுஞ் சித்தியடைந்தனவேயாகும். அநேக தேவர்கள் சுவாதீனர்களாயினும் நான் ஒருவனே சுவாதீனமாகாதவன். நானே ஸ்வாதீனமாவேனாயின் எல்லாத் தேவர்களும் சுவாதீனமாவார்கள். பிற மந்திரங்களுக்குள்ள தோஷங்கள் ஒன்று இந்த மந்திர சித்திக்கு கிடையாது. இந்த மந்திர அனுஷ்டானத்திற்கு ஜாதி நியமங்களும் இல்லை. ஆகையால் சண்டாளர் முதலிய யாவரும் இதை ஜபிக்கலாம். ஆகையாலேயே இந்த மந்திரம் பிரபலமானது. அகண்டபயனைக் கொடுப்பதுமாகும் என்று உமாதேவிக்கு சர்வலோக நாயகனாகிய பரமசிவன் கூறினார் என்று உபமன்யு முனிவர் கிருஷ்ணமூர்த்திக்குக் கூறினார். இந்த மந்திரத்தை பக்தியுடன் ஜபித்தவனும் சொன்னவனும் கேட்டவனும் சகல பாவங்களும் ஒழிந்து உத்தம பதவியை அடைவார்கள்.
13. குருதீக்ஷõ விதி
கிருஷ்ணபகவான் உபமன்யு முனிவரை நோக்கி, மாதவரே பஞ்சாக்ஷர பிரபாவத்தை நன்றாகக் கூறி விளக்கினீர்கள். அந்த மந்திர விதானத்தையும் அதன் ஸம்ஸ்காரத்தையும் கூறவேண்டும் என்றார்.
உபமன்யு முனிவர் கிருஷ்ணனை நோக்கிக் கூறலானார்: கிருஷ்ணா! பாசபந்தங்களையெல்லாம் ஒழித்து, உண்மை ஞானத்தைக் கொடுக்கவல்லதும் சிவபெருமானாலேயே சொல்லப்பட்டதுமான ஸம்ஸ்காரத்தைச் சொல்லுகிறேன்: கேள். ஈஸ்வர பூஜையில் மனிதனுக்கு அதிகாரம் உண்டாவதால் இதற்கு ஸம்ஸ்காரம் என்று பெயர். ஸம்ஸ்காரத்தாலேயே ஷடத்துவ பரிசோதனம் உண்டாகிறது. விஞ்ஞானத்தை கொடுப்பதாலும் பாசபந்தத்தை நசிக்கச் செய்வதாலும் இந்த ஸம்ஸ்காரமே தீøக்ஷ என்று சொல்லப்படும். தீ ஞானத்தைக் கொடுப்பது, க்ஷõ பாசபந்தத்தை நசிக்கச் செய்வது தீøக்ஷயைச் சாம்பவி, சாக்தி மாந்திரி என்று மூவகையாக, சிவாகமங்களில் சர்வேசனால் சொல்லப்பட்டுள்ளது. ஆசாரியனுடைய பார்வையாலாவது ஸ்பரிசத்தாலாவது சபலத்தாலாவது ஒருவனுடைய பாசபந்தங்கள் ஒழிந்து, அந்தக்கணமே ஞானோற்பத்தி உண்டாவதே சாம்பவீதீøக்ஷ என்றும், விஞ்ஞான தீøக்ஷ என்றும் பெயர் பெறும் அது தீவிரம், தீவிரதரம் என்று இருவகையுண்டு. பிழைத்திருக்கும் ஜீவனுக்குப் பாவத்தை நீக்குவது தீவிரம். ஆசாரியன் தன் யோகமார்க்கத்தால் சீடனுடலில் பிரவேசித்து, தனது ஞான நோக்கத்தால் அவனுடைய மோகத்தை ஒழிப்பது சுகதீøக்ஷ என்றும் ஞானவதி தீøக்ஷ என்றும் பெயர் பெறும் யாகசாலையும் குண்டமும் மண்டலமும் செய்து ஆசிரியன் கிரியாபூர்வமாகச் செய்யும் தீøக்ஷ மாந்திர தீøக்ஷ என்றும் கிரியாவதி தீøக்ஷ என்றும் பெயர் பெறும். மந்த மதியீனருக்கும் ஞானஹீனர்களுக்கும் இந்தக் கிரியாதீøக்ஷயே செய்யத்தகும். சிவதர்மானுசாரணத்திற் சாமர்த்தியப் பிராப்தியை உணர்ந்தே சீடனாகக் கொண்டு உபதேசம் செய்யக் கூடும். சக்தியில்லாத விடத்தில் மந்திர சித்தியும் வித்தையும் சைவாசாரமும் முக்தியும் கைகூடமாட்டாது. குருவானவன் ஞானத்தாலும் கிரியைகளாலும் சீடனைச் சோதித்தே கொள்ளவேண்டும். ஆராய்ந்தறியாமல், ஒருவனைச் சீடனாகக் கொண்டு உபதேசித்த குரு பிரஷ்டனாவான். ஆகையால் சீடனைப் பரீட்சித்தே ஆக வேண்டும். சக்திபாதத்திற்கு அடையாளமாவது, சிவதர்மங்களை உபதேசிக்கும்போது உணர்ந்து ஆனந்திருப்பதாகும். ஆனந்தம் ஞானம் இவ்விரண்டுக்கும் அடையாளங்கள். மனம் உலக விவகாரங்களை விலக்குவதும் உடல் நடுக்கம் மயிர்கூச்செறிதல், ஸ்வரபேதம் நேத்திரபேதம் முதலியனவுமாகும். இத்தகைய லக்ஷணங்களுடன் கூடிய குருவும் சீடனும் வாய்க்க வேண்டும். அத்தகைய குருவின் சம்பந்தத்தையும் சிவாராதனையின் முதலில் சீடன் பார்த்துக் கொள்ள வேண்டும். குருவும் சீடனும் இவ்விதமான சமானத்துவமுடையவர்களாக இருக்கையில் குரு சீடபேதம் எதற்கு? என்று கேட்கலாமா?
சீடன் தண்டிக்கத் தக்கவனும் குரு கவுரவமுடையவனுமாவார்கள். குருவே சிவன் சிவனே குரு குருவும் சிவனும் வித்தியா ஸ்வரூபத்தாலேயே விளங்குவார்கள். வித்தை சிவனைப் போலவே கவுரவமுடையது. குரு வித்தையைப் போலவே கவுரவமுடையவன் சிவன், குரு, வித்தை, இந்த மூவருக்கும் பூஜை செய்வதால் சமானமான பயனே உண்டாகும். சர்வ தேவதாஸ்வரூபன் சிவபெருமான் சர்வமந்திரங்களையும் உணர்ந்தவனாக இருக்கவேண்டியவன் குரு. ஆகையால் குருவைப் பூஜிக்கவேண்டும். கீர்த்தியை விரும்புவோர் குருவின் கட்டளையே மனத்தாலும் குறை கூறக்கூடாது. குருவின் ஆக்ஞையைப் பரிபாலனஞ் செய்பவன் ஞானசம்பத்தை அடைகிறான். எதைச் செய்தாலும் ஒவ்வொரு கர்மங்களுக்கும் குருவின் ஆக்ஞையாலேயே சகலமும் செய்வதாக இருக்க வேண்டும். குருவே தேவன் குருவின் வீடே தேவாலயம்; ஆகையால் குருவின் வீட்டிலாவது குருவின் எதிரிலாவது இஷ்டப்படி ஆசனம் முதலியவற்றில் இருக்கக்கூடாது. பாவிகளின் கூட்டுறவால் பதிதன் ஆவதுபோல, ஆசாரியன் கூட்டுறவால் தர்மவானாகிறான். பொன்னைப் புடமிடுவதால் அதன் மாசு கழிவதுபோல ஆசாரியனுடைய சாந்நித்தியத்தால் சகல பாவமும் ஒழியும். மனம் வாக்கு காயங்களால் குருவிடம் ஒருபோதும் கோபங்கொள்ளக்கூடாது. அவ்வாறு கோபங் கொள்பவனின் செல்வம், ஆயுள், ஞானம், புண்ணியம் யாகபயன், யோகபயன் ஆகியன அழியும். குருவுக்கு விரோதமான வார்த்தைகளைச் சொன்னவன் ரவுரவ நரகத்தை அடைவான். கீர்த்தியை விரும்புவோன் குருவிஷயத்தில் ஆசார மற்றவனாக நடக்கக்கூடாது. எப்போதும் குரு காரியத்தையே செய்துவரவேண்டும். இவ்வாறு குருவுக்குப் ப்ரீதி செய்து வருபவனே உத்தம சீடன் சிவதர்மங்களை உபதேசிப்பதற்கு அவனே தக்கவன்.
கிருஷ்ணா! குணவானாகவும் பண்டிதனாகவும் பரமானந்தம் அனுபவிப்பவனாகவும் தத்துவம் உணர்ந்தோனாகவும் சிவபக்தியுடையவனாகவும் உள்ளவனே குரு. அவனே முக்தியைக் கொடுப்பவன். பிறர் சமர்த்தரல்ல, சிறந்த பிரமஞானத்திற்கு காரணமான தத்துவத்தை உணர்ந்தவனே ஆனந்தத்தை தரிசிக்கச் செய்வான். இந்த வகையான குரு சீடரே ஒருவரையொருவர் முக்திக்கு ஏற்றவர். தத்துவ உணர்வற்று பெயர் மட்டுமே வகுக்கும் குருவானவன் சொல்லளவில் முக்தியைக் கொடுப்பானேயல்லாமல் உண்மையில் முக்தியைக் கொடுப்பவனல்லன். அந்தக் குருவும் முக்தியை அடையமாட்டான். குருஸ்வரூபனான சாக்ஷõத் சர்வேஸ்வரனுக்கு யாவற்றையும் அர்ப்பணஞ் செய்தவன். அப்போது தான் சைவனாவான். அவனுக்கு மேலே பிறவியில்லை ஈஸ்வரன், உலகத்தில் ஆசாரிய ரூபமாக ஆன்மாக்களின் பாசத்தை ஒழித்து முக்தியைக் கொடுக்கிறான் என்று வேத சிவாகமங்கள் கூறும். குரு தன் சீடர்களில் பிராமணனை ஓராண்டும், க்ஷத்திரியனை இரண்டாண்டுகளும், வைசியனை மூன்றாண்டுகளும் பரிசோதித்து அவர்களில் உயர்ந்தவனை இழி தொழிலிலும், இழிந்தவனை உயர் தொழிலிலும் விடுத்துப் பரிக்ஷித்து தெரியவேண்டும். அஹிம்சை, தயை, மோக்ஷவிருப்பம், கர்வமின்மை, குரோதமின்மை, உண்மை, சாந்தம், விநயம், திடசித்தம், சவுசம், சிவபக்தி முதலியவை உள்ளவர்களை இவ்வாறு தெளிந்து, அவனைப் பலவாறு துன்புறுத்தியும் தன்னைப் பிரியாதவனுக்கே சிவதீøக்ஷ செய்யத்தகும்.
தத்துவ உணர்வுடையவனையே குருவாகக் கொள்ளத்தகும். லக்ஷணங்கள் எல்லாம் அமைந்திருந்தாலும் வேதசாஸ்திர உபாயவிதிகளை உணர்ந்திருந்தாலும் சிவதத்துவமறியாதவனால் பயனில்லை அபரோக்ஷ ஞானம் வரையில் புத்தியுடையவனைக் காண்பதாலேயே சிறந்த ஆனந்தம் உண்டாகும். அத்தகைய குருவையே சீடன் ஆஸ்ரயிக்க வேண்டும். பலகாலம் பணிவிடை செய்து பரீட்சித்த பிறகே சீடனும் ஸ்திரமான பக்தியுடன் குருவாகக் கொள்ளவேண்டும். இடைவிடாமல் ஓராண்டுப் பணிவிடை செய்து குருவினால் ஞானானந்தம் அடையாதவன் அந்தக் குருவைவிட்டு வேறு குருவையடையலாம்.
பெண்களுக்குச் சிவஸம்ஸ்காரத்தில் சுயேச்சையான அதிகாரமில்லை. சிவபக்தி உண்டாயிருந்தாலும் கணவனின் கட்டளையைப் பெற்றே சிவபக்தி செய்யலாம். கணவனை இழந்த விதவை, தன் புத்திரர்களையும் முதியோரையும் அனுமதி கேட்டே சிவசம்ஸ்காரம் செய்து கொள்ளலாம். சூத்திரர், பதிதர் முதலியவர்களுக்கு ஷடத்துவ சுத்தியடைந்தால், குருவின் பாததீர்த்தத்தைக் கொடுத்தே அவர்களுடைய பாவத்தை விலக்க வேண்டும். அனுலோமர்கள் சிவபக்தியடைந்திருந்தால், தாயின் குலத்திற்கேற்றபடி அத்துவசுத்தி செய்யலாம். தந்தையின் கட்டளைப்படி சிவஸம்ஸ்காரஞ் செய்துகொண்டு கன்னிகையைச் சிவபக்தனுக்கே திருமணஞ் செய்து கொடுக்க வேண்டும். ஒருவேளை பிறருக்கு கொடுக்க நேரிட்டாலும் அவனுக்குச் சிவ சம்ஸ்காரம் செய்ய வேண்டும். அவன் அதைக் கடைப்பிடியாதிருப்பின், அந்தக் கன்னி அவனை விட்டு விலகி, சிவதர்மங்களையும், அவனுக்கேற்ப பிறதர்மங்களையும் செய்ய வேண்டும். முன்பு அனுசூயை என்பவள் சிவபக்தி செய்து பெரு வரங்களையும் அத்திரி முனிவரையும் அடைந்தாள். நளாயினியும் சிவபூஜை செய்து பாண்டவர்களைக் கணவர்களாகப் பெற்றாள். சிவ பக்தியை உடையவள் சுதந்திரமாகச் செய்த கர்மங்களால் தோஷமடையமாட்டாள். சிவ சம்பந்தமான ஸம்ஸ்காரம் குருவின் சுவாதீனமாக இருப்பினும் அதிகார பேதத்தால் வெவ்வேறாக இருக்கும். குருவின் பார்வை, ஸ்பரிசம், உரையாடல் முதலியவற்றால் சீடனுக்கு ஞானம் உண்டாகும் வகையும் ஒன்று. அது, மனத்தில் யோகத்தால் செய்யப்படும் ஸம்ஸ்காரம், மிகவும் இரகசியமானது. குண்டமண்டபப் பூர்வமாகச் செய்யப்படுவது. கிரியா பூர்வமான சம்ஸ்காரம், அதையும் சொல்கிறேன்.
14. சமயதீக்ஷõ விதி
கிருஷ்ணா! சிவதீக்ஷõவிதியைச் சொல்லுகிறேன். குரு பஞ்சாங்க சுத்தமான நாளில் கடற்கரை, ஆற்றங்கரை, பசுமந்தை இருக்குமிடம், பருவதத்து அண்மை தேவாலயம், வீடு முதலிய இடத்தில், சமய சமஸ்காரத்தை முற்படச் செய்ய வேண்டும். அது, எவ்வாறு என்றால் கூறுகிறேன், நிலத்தை கந்த வர்ணரசாதிகளால் பரீசித்து சிற்ப சாஸ்திர விதி முறைப்படி மண்டபம் அமைக்க வேண்டும். அந்த மண்டபத்தின் மத்தியில் ஒரு வேதிகை ஏற்படுத்தி அந்த வேதிகையில் குண்டங்கள் எட்டாவது நான்காவது செய்யவேண்டும். ஈசான திசையிலாவது மேற்குத் திக்கிலாவது வேறு பிரதான குண்டத்தை நியமித்துக் கொண்டு, மண்டபத்தையும் குண்டங்களையும் விதானம், த்வஜம் புஷ்ப மாளிகை ரங்கவல்லி (கோலம்) முதலியவற்றால் பலவகையான அலங்காரஞ் செய்து வேதிகை நடுவில் ஈஸ்வர ஆராதனைக்கு தக்க இரத்தினங்கள், பொன் முதலியவற்றால் அலங்கரிக்கப்பட்ட மண்டலம் ஒன்று செய்யவேண்டும். எளியவனாக இருந்தால் செம்மண், அரிசிமா, முதலிய பொடிகளாலாவது மலர்மாலை முதலியவற்றாலாவது அலங்கரித்துக் கொள்ளவேண்டும். அந்த மண்டலம் ஒரு கஜம் அல்லது இரண்டு கஜம் பரப்புடையதாய் செம்மையாகவாவது இருக்கவேண்டும். ஒரு கஜ பரப்புடையதாய் செய்தால் உயர்வு ஒரு கெஜமாக இருந்தால் அந்தக் கமலத்தில் இடையிலுள்ள கர்ணிகை எட்டு அங்குலமும் சுற்றியிருக்கும் கேசரங்கள் நான்கு அங்குலமுமாக எட்டுத் தளங்களுடன் இருக்கவேண்டும்.
இரண்டு கஜ விஸ்தீரணமான மண்டலம் நியமித்தால், கர்ணிகை பதினாறங்குலமும் கேசரங்கள் எவ்வெட்டு அங்குலமுமாக இருக்கவேண்டும். இவற்றைப் பலவகையாக அலங்கரித்து மண்டலங்கள் பத்மாகாரமாக வேதிகைகளின் மத்தியிலும் ஈஸான திக்கிலும் செய்யவேண்டும் பின்னும் வேதிகையிலே ஒரு மண்டலம் ஒரு கஜம் அல்லது அரை கஜ விஸ்தீரணமாகச் செய்யவேண்டும். நெல், அரிசி, வெண்கடுகு, எள், மலர்கள் தர்ப்பை இவற்றால் அலங்கரிக்கப்பட்ட அந்தமண்டலத்தில் சிவகும்பத்தை அமைக்கவேண்டும். அந்தச் சிவகும்பம், பொன், வெள்ளி, தாமிரம், மண் முதலியவற்றால் சக்திக்கு ஏற்ற வகையில் செய்து அந்தக் கும்பத்தைக் கந்த புஷ்ப, அக்ஷதை அறுகு, தர்ப்பை முதலியவற்றால் அலங்கரித்து மேலே நூல் சுற்றி, இடையே கிழிக்காத இரண்டு வஸ்திரங்கள் சுற்றி, அதற்குள் பூரணமாக ஜலம்பெய்து, தர்ப்பையால் செய்யப்பட்ட கூர்ச்சத்தை அதன் முடிமேலே தெரியும்படி அமைத்து, பரிமள திரவியங்கள் போட்டு, ரத்தினங்கள், முத்துக்கள், பொன். வெள்ளி முதலியவற்றையும் உள்ளிட்டு அதன் மேலே மூடி மத்திய பாகத்தில் வைக்கவேண்டும். பானபாத்திரம், சங்கம், சக்கரம் இவற்றுக்கு நூல் சுற்றாமல் மண்டல கமலத்தின் வடக்கிலுள்ள தளத்தில் வைக்கவேண்டும். (இது உமாதேவி கும்பம்) வேறொரு கும்பத்தை அலங்கரித்து மேற்றிசை இதழில் அஸ்திரதேவனுக்காக வைக்கவேண்டும். கமலத்தின் ஈசான தளத்தின் கிழக்கே மந்திர கும்பம் வைத்து, ஈஸ்வரனுக்கும் பூசை செய்ய ஆரம்பிக்க வேண்டும். மேற்சொன்ன வகையில் மண்டபஞ் செய்யச் சக்தியற்றவர்கள் வேதிகை மண்டலம், அக்கினி குண்டம் ஆகிய இவற்றை மட்டும் கொள்ளலாம்.
பின்னர் குரு மகிழ்ச்சியுடனும் சர்வமங்களங்களுடன் கூடி நித்தியானுஷ்டானங்களை முடித்துக்கொண்டு, சிவபூஜை முடித்து, மண்டல மத்தியிலிருக்கும் சிவ கும்பத்தில் சிவபெருமானை ஆவாஹனஞ் செய்து கிழக்கு முகமாகத் திரும்பி, மேனோக்குஞ் சிவபெருமானைப் பூஜிக்கவேண்டும். யக்ஞரக்ஷகனாகிய ஈஸ்வரனை இவ்வாறு பூஜித்துத் தியானம் செய்து, அதற்குப் பிறகு மேற்குத் திசைத் தளத்திலுள்ள அஸ்திர கும்பத்தில் அஸ்திர தேவனை ஆவாஹனஞ் செய்து பூஜித்து, மந்திர யாகத்தைச் செய்ய வேண்டும். முன்பு, கூறிய சிவகுண்டத்தில் சிவாக்கினியை வளர்த்துத் தேகி கோத்தமன், நெய் முதலியவற்றைச் செய்து ஓமம் செய்யவேண்டும். பிற குண்டங்களில் அவனுடைய சீடர்களும் பிறவேதியர்களும் முறைப்படி ஆசிரியன் செய்யும் ஓமத்தின் அரைப்பங்கேனும் நாற்பங்கேனும் ஓமஞ் செய்ய வேண்டும். அப்பொழுது சில வேதியர்கள்மோதவும், சிலர் சிவஸ்தோத்திரங்களைச் சொல்லவும் சிலர் பஞ்சாக்ஷர மந்திர ஜபம் ஜபிக்கவும், ஆடல் பாடல் வாத்தியம் விளங்கவும் மீண்டும் சிவபெருமானைப் பூஜித்து, சபைக்கு வந்திருக்கும் அந்தணர், பெரியோர், முதலியவர்களை உருத்திர ஸ்வரூபமாகப் பாவித்துப் பூஜிக்கவேண்டும். பிறகு ஆசிரியன் தன் மாணாக்கனைக் கடைத்தேறச் செய்யவேண்டும் என்ற கருத்துடன் சுவாமீ கருணைக் கடலான தேவரீர் என் தேகத்தில் புகுந்து, என் ஜீவனை தயையுடன் பாவ விமோசனம் செய்து காக்கவேண்டும் என்று பிரார்த்திக்கவேண்டும். அவ்வாறே செய்கிறேன் என்று சிவகடாக்ஷத்தைப் பெற்று, முன்னாள் உணவை விலக்கியும் நாள்தோறும் அவிசைப் புசித்தும் புலனடக்கம் செய்தும் நீராடியும் அன்றாடக் கடமைகளை விடியற் காலத்தில் முடித்தும், பிரணவத்தை ஜபித்துக் கொண்டு சிவத் தியானத்தோடு ஜீவன் இருக்கவேண்டும். அந்த ஜீவகலை மண்டலத்தின் மேற்குத் துவாரத்திலாவது தென் வாசலிலாவது தர்ப்பாசனத்தில் வடக்கு நோக்கி உட்காரச் செய்து குரு கிழக்கு திசை நோக்கி நின்றுகொண்டு, கைகூப்பி கும்பிட்டபடி இருக்கும் சீடன் மேல் நீரைப் புரோக்ஷித்து அவன் சிரசில் அஸ்திரமுத்திரையைக் காட்சி புஷ்பத்தாலடித்து தூய்மையான பட்டாடையால் அவனுடைய இருவிழிகளையும் மறைத்துக் கட்டி, மேல் வாயிலால் அவனை உள்ளே அழைத்துச் சென்று அந்த மண்டலத்தை மும்முறை வலம்வரச் செய்யவேண்டும். ஸ்வர்ண புஷ்பாஞ்சலியை சிவ கும்பத்தின் அடியில் சமர்ப்பிக்கச் செய்து கிழக்கு அல்லது வடக்கு முகமாக நமஸ்காரம் செய்விக்க வேண்டும். தான் மூலமந்திரத்தால் அவன் சிரசில் ஜலம், புரோக்ஷித்து, முன்பு சொன்னதுபோல அஸ்திர மந்திரம் உச்சரித்து, மலரால் அடித்து அவனுடைய கண்ணிற் கட்டிய ஆடையை அவிழ்த்துவிட வேண்டும்.
அதன் பிறகு சீடன் அந்த மண்டலத்தின் இடையேயுள்ள சிவபெருமானை நமஸ்கரிக்க வேண்டும். ஆசிரியன் அப்பொழுது மண்டலத்தின் தென்பக்கம் சீடனைத் தன் வலப்பாகத்தில் தர்ப்பாசனத்தில் இருக்கச் செய்து சிவபூஜை செய்து மங்களகரமான சிவதேஜோரூபமான சிவஹஸ்தத்தை அவன் சிரசில் வைத்து சிவ மந்திரத்தை உச்சரித்துக் கொண்டு, அவனுடைய பாவங்கள் யாவும் அகலும்படி அவன் உடலைத் தடவவேண்டும். அதன் பிறகு சீடன் சிவரூபியான குருவிற்கும் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்ய வேண்டும். சிவாக்கினியிலே, அவி முதலியவற்றைச் சொரிந்து, சிவபெருமானைப் பூஜித்து மூன்று ஓமங்கள் செய்து, முன்போலவே சீடனை இடப்புறம் அமர்த்தி, தர்ப்பை முனையால் தன்னுடலைத் தொடுவித்து நாடி சந்தானம் செய்யவேண்டும். சிவசாஸ்திரத்தில் கூறிய முறைப்படி தன்னுடைய ஆன்மாவை சீடனுடைய தேகத்தில் புகுத்திச் சிவ மந்திரங்களால் தர்ப்பணஞ் செய்து மூல மந்திரத்தினால் பத்து ஓமங்கள் செய்து, அங்கதேவதைகளுக்கும் பிரீதியுண்டாக அவரவர்களுக்குரிய மந்திரங்களால் ஓமஞ்செய்து பிராயச்சித்தங்களுஞ் செய்து, மூலமந்திரத்தால் பத்து ஓமங்கள் செய்து சிவபெருமானை பூஜித்து, வணங்கி, பூர்ணாஹுதி செய்து முடிக்க வேண்டும். சீடன் வைசியனாயின் அவனை க்ஷத்திரியனாகவும் பின்னர் பிராமணனாகவும் பின்னர் உருத்திரனாகவும் செய்யவேண்டும். சீடன் க்ஷத்திரியனாயின் அவனைப் பிராமணனாக்கிப் பிறகு உருத்திரனாக்க வேண்டும். பிரமணனாயின் அவனை உருத்திரனாக்க வேண்டும். சிவ கும்பத்திலுள்ள ஜலத்தினால் அவன் சிரமீது புரோக்ஷணஞ்செய்து, மலராலடித்து, முன்பு சீடனின் உடலில் புகுத்திய ஆன்மாவைத் துன்பு செய்யும் அவனுடைய பாவங்களை அகற்றி, அவனுடைய ஆன்மாவையும் தன்னுடைய ஆன்மாவையும் வாங்கித் தன் உடலில் புகுத்தி, அவனது ஆன்மாவை புனிதமாக்கி பிறகு அவனுடைய ஆன்மாவை அவனது உடலில் புகுத்த வேண்டும். அந்தச் சீடனை கரத்திற் பிடித்துக் கொண்டு, உருத்திரனாகப் பாவித்து புதிதாக உபவீ தந்தரித்து மூன்று ஓமங்கள் செய்து பூர்ணாஹுதி செய்து தன் இடது புறத்தில் அவனை தர்ப்பாசனத்தில் வடக்கு முகமாக கைகட்டிக் கொண்டு, சுவஸ்திகாசனமாக இருக்கச் செய்து மங்கள வாத்தியங்கள் ஒலிக்கவும் மந்திரங்கள் முழங்கவும் பிரதான கும்பமாகிய சிவகும்பம் முதலாகவுள்ள கும்பங்களில் நிறைந்துள்ள நீரால், அவனை அபிஷேகிக்க வேண்டும்.
அதன் பிறகுச் சீடன், உடலைத் துடைத்துக் கொண்டு, வேறு ஆடையாபரணங்களை அணிந்து கொண்டு, திருவெண்ணீறணிந்து ஆசமனஞ் செய்து அலங்கரித்துக் கொண்டு கைகளைக் கட்டிக் கொண்டு, மண்டபத்தில் பிரவேசித்து, ஆசிரியனின் இடப்புறத்திலிருந்து, சிவபூஜை செய்து, கரநியாசஞ் செய்து கொள்ளவேண்டும். பிறகு ஆசிரியன் சிவத் தியானத்துடன் திருநீற்றை எடுத்து, நீ சிவன் ஆயினை? என்று அவன் உடலில் பூசி, சோஷணதஹன பலாவனங்களைச் செய்து மாதுருகாநியாச மார்க்கமாகச் சகளீகரணஞ் செய்து அவனுடைய சிரசின் பேரில் சிவபெருமானை ஆவாஹனஞ்செய்து, சிவனாகவே தியானித்துப் பூஜித்துக் கையேற்று எதிர் நின்று, எம்பெருமானே! தேவரீர் எந்தக் காலத்திலும் இவனிடம் இடைவிடாமல் எழுந்தருளியிருக்க வேண்டும் என்று பலமுறை பிரார்த்தித்து, சிவதேஜசோடு பிரபாசித்துக் கொண்டிருக்கும் சீடனுடைய வலது செவியில் சிவ மந்திரத்தை உபதேசிக்க வேண்டும். சீடனும் அப்பொழுது கைகட்டி வாய் பொத்தி, அதைப் பெற்றுக் கொண்டு அதை உணர்ந்து கொண்டு, ஆசிரியனைச் சாஷ்டாங்கமாகப் பணிந்து நிற்கவேண்டும். அப்போது ஆசிரியன் சக்தி மந்திரத்தை அவனுக்கு உபதேசித்து அந்த மந்திரத்தின் பொருளையும், சிவஸ்வரூபத்தையும் உணர்த்தி யோகத்தையும் ஆசனத்தையும் போதிக்க வேண்டும். பின்னர் குருவின் கட்டளையால் சீடன் சிவாக்கினி குரு இவ்விருவர் சன்னதியில் பக்தியாற் குரு தனக்குக் கூறியதையெல்லாம் செய்து தீக்ஷõவாக்கியத்தைச் சொல்ல வேண்டும். அது யாது எனில் என் பிராணன் ஒழியினும் சிரம் இழப்பினும் சிவபூஜை செய்யாமல் நான் புசிக்க மாட்டேன் என்பதாகும். இவ்வாறு கூறி அன்று முதல் தன் புத்தி தனக்குச் சுவாதீனமாகவுள்ள வரை, சிவபக்தி பூரணாகச் சிவபூஜையை முறைப்படி செய்யவேண்டும். இவ்வகைய குரு கடாக்ஷத்தால் சமயதீøக்ஷ செய்யப் பெற்ற பிறகு சீடனுக்கு சிவமந்திரத்தால் அபிமந்திரத்தை உருத்திராக்ஷமும் விபூதியும் சிவவிக்கிரமும் சிவலிங்கமும் பூஜை ஹோமம், ஜபம், தியானம் இவற்றுக்குச் சாதனமான மந்திரங்களுங் கொடுக்க வேண்டும். சீடன், அந்தச் சிவாசாரியனிடமிருந்து அவற்றை பெற்று, சிரமிசை வைத்துக் கொண்டு சிவாலயத்திலாவது, திருமடத்திலாவது தன் வீட்டிலாவது அவற்றைச் சாற்றிக் கொண்டு சிவபூஜை செய்து வரவேண்டும். பக்தி சிரத்தை புத்தி முதலியவற்றிற்கு ஏற்ப, ஆசிரியனாற் சொல்லப்பட்ட சிவாசாரங்களை மாணாக்கன் தவறாமல், அது போலவே நடந்து கொள்ள வேண்டும். சிவாகமத்தைக் கிரகித்தல் அவற்றை வாசித்தல் கேட்டல் செய்யக் கூடாதனவாகும். யாவும் ஆசிரியனின் சிவ சமயதீøக்ஷயைச் சங்கிரகமாகச் சொன்னேன் என்று உபமன்யு முனிவர் கூறியருளினார்.
15. விசேஷ தீக்ஷõ விதி
உபமன்யு முனிவர் மேலும் தொடர்ந்து கூறலானார். சீடனுடைய தகுதியை குரு நன்றாகச் சோதித்து, பந்த நீக்கத்திற்காகச் சடத்துவ சுத்தியைச் செய்வாராக, அத்துவாக்கள் கலை, தத்துவம், புவனம் வர்ணம், பதம், யந்திரம் என அறு வகைப்படும். அவற்றில் நிவ்ருத்தி, பிரதிஷ்டை, வித்யை சாந்தி சாந்தியாதீதை என்ற ஐந்தும் கலாத்துவாக்களாகும். அந்தக் கலாத்துவாவினாலேயே ஐயைந்து வகையாக ஐந்து அத்துவாக்களும் உண்டாவன. அவையெப்படி என்றால், சிவதத்துவம் முதல் பிருத்வி ஈறாகவுள்ள தத்துவங்கள், சுத்தம், அசுத்தம், சுத்தாசுத்தமாய் அவை யாவும் தத்துவாத்துக்களாகும். ஆதார முதல் உன் மனயிறுதியாகவுள்ள அறுபது புவனங்களும் புவன அத்துவாக்களாகும். ஐம்பது உருத்திரர்களின் வடிவாக விளங்கும் ஐம்பது எழுத்துக்களும் வர்ணாத்துவாக்களாகும். அநேக பேதங்களுடன் எண்பத்தோரு வகைப்பட்ட பத முகங்கள் பதாத்துவாக்களாகும். மந்திரங்களும் உப மந்திரங்களுமாகியவற்றுக்கு அங்கமாகி விளங்கும் மந்திராத்துவாவானது ஐந்து பலங்களாக விளங்கும். அதுவே பஞ்சாக்ஷர மஹாமந்திரம் மந்திராத்துவாவில் மந்திர நாயகமாகவுள்ள பஞ்சாக்ஷரத்தைச் சுத்தகோடி மஹா மந்திரங்களில் ஒன்றாகக் கருதக்கூடாது. ஏனென்றால் இந்த பஞ்சாக்ஷர மந்திரத்தாலேயே அவை யாவும் நிறைக்கப்படுவதால், அவற்றோடு ஒப்பு நோக்குந் தன்மையுடையதல்ல - தேவர்கள் அனைவருக்கும் ஈசனே இறைவனாவான். அதுபோல, பஞ்சாக்ஷர மூலமந்திரமே மந்திரங்கள் அனைத்திற்கும் தலைமையாக இருக்கும். கலாத்துவாவானது பிற ஐந்து அத்துவாக்களையும் நிறையச் செய்யும் இந்த ஷடத்துவாக்களின் வியாப்பிய வியாபவ லக்ஷணங்களை உணராதவன் பயனற்றவன். ஆகையால் இவற்றை நன்கு ஆராய்ந்து அத்துவசுத்தியைச் செய்ய வேண்டும்.
அத்துவ சோதனைக்காக மேலே சொன்ன சமயதீக்ஷõ வகையிலேயே, குண்டமண்டலாதிகள் செய்ய வேண்டும். அது எவ்வாறு என்றால் பிரதான மண்டலத்தின் கீழே இரண்டு ஹஸ்த பரிமாணமாக மண்டலஞ் செய்து ஆசாரியன் குனிந்து, நித்தியானுஷ்டானங்களை முடித்து சீடனுடன் கூடி முதலாவதான மண்டலத்திற் புகுந்து சமய தீøக்ஷயில் சொல்லியபடி சிவ பூஜையைச் செய்ய வேண்டும். 32 படி கொண்ட ஆடகத்திற்கதிகமான அரிசியால் பால் சாதம் சமைத்து, அதில் பாதியைச் சிவபெருமானுக்கு நிவேதித்து மறுபாதியை ஓமத்திற்காக நிறுத்தி முற்பட்டுச் செய்துள்ள மண்டலத்தில், நானாவிதமான அலங்காரங்களைச் செய்து ஐந்து கலசங்களை பஞ்சாக்ஷர மூல மந்திரத்தில் விந்து நாதங்களுடன் கூடிய ஐந்து எழுத்துக்களாகி ந ம சி வா ய என்பவற்றால் பஞ்சப் பிரமங்களை ஆவாஹனம் செய்ய வேண்டும். ஈசானகும்பம் நடுவிலும் தற்புருஷகும்பம் கிழக்கிலும் அகோரகும்பம் தெற்கிலும் வாமதேவகும்பம் வடக்கிலும் சத்தியோஜாத கும்பம் மேற்கிலும் இருக்கவேண்டும். அந்தக் கலசங்களை தக்ஷணஞ் செய்து முத்திரைகளைக் காட்டி, கும்பங்களை அபிமந்திரித்து, சிவாக்கினியில் ஓமம் செய்ய ஆரம்பித்து, முன்பு நிறுத்திய பாலன்னத்தில் பாதியை அதில் பெய்து, மிகுதி அன்னத்தை மாணாக்கன் புசிக்க நிறுத்தி வைத்து தர்ப்பணம் செய்து பூர்ணாகுதியை முடித்து ஓம் ஹும் நமச்சிவாய பட் ஓம் ஹும் நமச்சிவாய ஸ்வாஹா என்னும் மந்திரங்களால் மூன்று ஆகுதிகள் செய்து, பிராமண கன்னிகை நூற்ற முப்புரி நூலை சீடனுடைய குடுமியில் முடிந்து, கால் வரையில் தொங்கவிட வேண்டும். சாந்தி முத்திரையைக் காட்டி மூலமந்திரத்தால் மூன்று ஓமங்கள் செய்து சாந்தி முத்திரையின் சாந்நித்தியத்தைச் சீடனுக்குக் கற்பித்து மலர்மாலையாலவனை இதயத்தில் ஷேபணம் செய்து சீடனுடைய ஜீவசக்தியைத் தன் துவாதசரந்தரத்தில் நிறுத்தி அவனுக்குக் கட்டிய கயிற்றில் அவனுடைய சுழிமுனை நாடியை ஆவாஹித்து அஸ்திரம் கவசம் இவற்றால் அதை இரட்சித்து, பிறகு அந்த சூத்திரத்தைச் சுற்றி சிஷ்ய தேஹத்தை ஆலோசிக்க வேண்டும். அது எப்படி என்றால், போகம் போக்கியம் போக்தா என்பதை லக்ஷணமாகவுடைய ஜாதி ஆயுர்போக ரூபமான மும்மலங்களையும் ஆகாயம் முதலிய ஐம்பூதங்களின் வடிவாகி விளங்கும் சாந்தியை முதலாகவுடைய ஐந்து கலைகளையும் கருதி நமோந்தமாக அந்தச் சூத்திரத்தில் ஆவாஹனம் செய்து பூஜிக்க வேண்டும்.
அப்படியில்லையென்றால், தத்துவத்தை மும்மலங்களடையும் வகையையும் மும்மலங்களைக் கலைகள் வியாபிக்கும் வகையையும் கருதி, ஓமஞ் செய்து கலைகளைப் பிரகாசிக்கச் செய்து, சீடனுடைய குடுமியில் முடிந்து கயிற்றில் சில மந்திரங்களை உச்சரித்துக் கொண்டு சாந்தியாதீதையிலிருப்பதாக தியானம் செய்து, இவ்வகையாக சாந்தியாதீதை முதல் நிஷருத்தி வரையிலுள்ள ஒவ்வொன்றுக்கும் முடிந்து மூன்று ஓமங்கள் செய்து நான்கு பூதங்களுக்கும் இவ்வாறே செய்யவேண்டும். பிறகு மூன்று ஓமங்கள் செய்து மண்டலத்திலே சிவபெருமானைப் பூஜித்து மண்டலத்தின் தென் பக்கத்தில் தர்ப்பாசனத்தில் வடதிசை நோக்கி இருக்கும்படிச் சீடனை அமர்த்தி முன்பு நிறுத்தி வைத்த மீதமாகிய பாலன்னத்தைச் சீடன் புசிக்கும்படிக் கொடுக்க வேண்டும். குரு தனக்குக் கொடுத்த அன்னத்தை சீடன் சிவமந்திரோச் சரணையுடன் அருந்தி இருமுறை ஆசமனம் செய்து, இரண்டாமண்டலத்திலுஞ் செய்து பஞ்சகவ்வியத்தைக் கொடுக்க வேண்டும். சீடன், அதையும் பருகி, ஆசமனம் செய்து முடிந்த பிறகு குரு அவனைக் கொண்டு மற்றொரு மண்டலத்தே அடைந்து பன்னிரண்டு அங்குல நீளமும் ஒரு சிறு விரல் அளவு கனமும் உள்ள ஒரு தந்த காஷ்டத்தைக் கொடுக்க (பல் விளக்கும் குச்சி) சீடன் அதைக் கொண்டு, கிழக்கு அல்லது வடக்கு நோக்கியிருந்து பிறரோடு வார்த்தை பேசாது பற்களை விளக்கி, அந்தக் குச்சியை நீரால் கழுவியெறிந்து ஆசமனம் செய்து சிவத்தியானம் செய்து கொண்டிருந்து குருவின் கட்டளையைப் பெற்றுச் சிவ மண்டலத்தில் கையைக் கட்டிக் கொண்டு பிரவேசித்த பிறகு அவன் எறிந்த பற்குச்சியின் முனை கிழக்கு வடக்கு மேற்கு நோக்கி வீழ்ந்திருந்தால் நலம் என்று கொள்ளவேண்டும். தெற்கு நோக்கி வீழ்ந்திருந்தால் தீது என்று கொண்டு, அவன் செவியில் சிவ மந்திரத்தை ஓதவேண்டும்.
அதன் பிறகு சிவபெருமானுக்குத் தெற்கு பக்கத்தில் தர்ப்பையைப் பரப்பி அதன்மீது அச்சீடனை அன்றிரவு படுக்கச் செய்து, புதிய வஸ்திரத்தால் மூடி அவனைச் சூழத் திருநீற்றால், மூன்று ரேகைகள் வரிந்து, அஸ்திர மந்திரஜபம் செய்த எள், கடுகு இவற்றால் அஷ்டதிக்குப் பாலகர்களுக்குப் பலியிடவேண்டும். அவ்வாறு துயின்ற சீடன் தான் கண்ட கனவை ஆசிரியனுக்குச் சொல்ல வேண்டும். பிறகு விடியற்காலையில் நீராடி நித்திய கர்மங்களை முடித்து, ஆசிரியரின் கட்டளையைப் பெற்று, கைகட்டிக் கொண்டு மண்டலத்தருகே வரவேண்டும். ஆசிரியன், வெண்பட்டினால் சீடனுடைய கண்களைக்கட்டி அவன் கையில் மலர்களைக் கொடுத்து, அவற்றை மண்டலத்தில் இடச் சொல்லவேண்டும். அவன் சொரிந்த மலர்கள் எந்த முகத்தில் விழுந்ததோ அந்த முகத்தின் பெயரை அவனுக்கு இடவேண்டும். அங்குள்ள நிர்மாலியங்களை அப்புறப்படுத்திச் சிவபிரானைப் பூஜித்து சிவாக்கினியில் ஓமம் செய்யவேண்டும். சீடனுக்கு துஷ்ட சொப்பன உண்டாகியிருந்தால் அந்தத் தோஷம் சாத்தியாவதற்காக மூல மந்திரத்தால் நூறு அல்லது ஐம்பது அல்லது இருபத்தைந்து ஆகுதிகள் செய்யவேண்டும். அவன் சிகையில் கட்டிய கயிற்றை முன்போலத் தொங்கவிட்டு, நிவர்த்தி கலையை ஆசிரயித்த பூஜை முதலாக வாகீசுவரி பூஜைவரை, கிரியைகளை ஓமங்களுடன் முடித்து, வாகீசுவரியைப் பணிந்து நமஸ்கரித்து, மண்டலத்தில் சிவபெருமானை பூஜித்து, மூன்று ஓமங்கள் செய்து, சீடனுடைய சூத்திர தேகத்தில் புஷ்பதானமும் மந்திரரோதக புரோக்ஷணமும் செய்து, அவனுடைய ஆன்மாவை வாங்கித் துவாஜ சாந்தத்தில் வைத்து, சிவமூல மந்திரத்தால், அதை வாங்கிப் பிரவேச முத்திரையால் குரு பதினான்கு யோனிகளிலும் சீடனைப் பிரவேசிக்கச் செய்து, பிறகு வாகீஸ்வரியிடம் பிரவேசிக்கச் செய்து, கர்ப்பத்தினின்றும் வெளியே வருவதற்காகச் சிவபூஜையும் சிவநமஸ்காரமும் செய்து ஓமம் செய்து சிசு வெளிவரும் சமயமாகக் கருதி, கர்ப்போற்பத்தி கர்மங்களைச் செய்வதாகவும் புத்தியடைந்ததாகவும் சுகத்தை அனுபவிப்பதாகவும் எல்லா விஷயத்திலும் விருப்புற்றதாகவும் நினைத்து ஜாதி ஆயுர்போகம் என்னும் இவற்றின் சித்திக்காக மூன்று ஓமங்கள் செய்து தேவனைப் பிரார்த்திக்கவேண்டும். பிறகு சீடனை விஷயங்களிற் செல்லவொட்டாமல் செய்து ஜாதியாதி பாசத்திரயங்களைச் சோதிக்கவேண்டும். நிவிருத்திக் கலையாற் கட்டப்பட்ட பாசச்சேதனத்தைச் செய்து, சீடனுடைய ஆன்மா, பரிசுத்தமானதாக நினைத்துப் பூரணாகுதி செய்ய வேண்டும்.
முனிவனே! பிரமனைப் பூஜித்து மூன்று ஓமங்களைச் செய்து, பிரமதேவனே! சிவசம்பந்தமான ஸ்தானத்தை அடையும் இந்தத் தீக்ஷõபரனான சீடனுக்கு நீ ஒரு தடையும் செய்யக்கூடாது. இவ்வகையாக மேம்பட்ட சிவாக்கினையுள்ளது! என்று கூறி, பிரமனைப் பூஜித்து விட்டுவிடவேண்டும். மீண்டும் சிவபெருமானைப் பூஜித்து மூன்று ஆகுதிகள் செய்து நிவிருத்தியில் பரிசுத்தமான சீடனுடைய ஆன்மாவைச் சூத்திரதேகத்திற் பிரவேசிக்கச் செய்து, மீண்டும் வாகீஸ்வரியைப் பூஜித்து, மூன்று ஓமங்கள் செய்து, சிவபெருமானை வணங்கி, வாகீஸ்வரியை விசர்ஜனம் செய்ய வேண்டும். பிரதிஷ்டை நிவிருத்திகளை ஆவாகனஞ் செய்து பூஜித்து மூன்று ஆகுதிகள் செய்து, சீடனுடைய ஆன்மா யதாஸ்தானத்தில் இருப்பதாகப் பாவித்து, மீண்டும் பிரதிஷ்டையை ஆவாகனஞ்செய்து முன்புபோல மூன்று ஆகுதிகள் செய்து நமஸ்கரித்து, அதை விட்டுவிடவேண்டும். பிரதிஷ்டையின் வியாத்தியைத் தியானித்து பூஜைசெய்து, மூன்று ஆகுதிகள் முடித்து பூரணச் சந்திரன்போல் விளங்கும் வாகீஸ்வரியை பூஜித்து, கிரியைகளை முடித்து விஷ்ணுவை பூஜை செய்து, அவனுக்குச் சிவாக்கினியை உணர்த்து, மூன்று ஆகுதிகள் செய்து, விஷ்ணுவை விசர்ஜனம் செய்யவேண்டும். பிரதிஷ்டா கலையை வித்யாகலையுடன் கூட்டி, முன்புபோலக் கிரியைகளைச் செய்து வித்யாகலையில் வியாத்தியை உணர்ந்து, அக்கினியைப் போலப் பிரகாசிக்கும் வாகீஸ்வரியை பூஜித்து, துதி செய்து நீலருத்திரனைப் பூஜித்து, மலர்களால் அருச்சித்து, அவனுக்கு சிவாக்கினியை உணர்த்தி, மூன்று ஆகுதிகள் செய்து, நீலருத்திரனை விசர்ஜனம் செய்யவேண்டும். வித்தியாகலையைச் சாந்திகலையுடன் கூட்டிச் சாந்திகலா வியாத்தியைத் தியானித்து, சூரியனைப் போலப் பிரகாசிக்கும் திருமேனியை உடைய வாகீஸ்வரியைப் பூஜித்து, பிற கர்மங்களை முன் சொன்னதுபோல முடித்து, மஹேஸ்வரனுடைய பாதங்களை மலர்தூவி அர்ச்சித்து, அவனுக்குச் சிவாக்கினியைப் கூறி, மூன்று ஆகுதிகள் செய்து, மகேஸ்வரனை விசர்ஜனம் செய்ய வேண்டும். சன்னதி கலையையும் சாந்தீயாதீத கலையையும் கூட்டி, அதீத சாந்தி கலா வியாப்தியை மனதில் தியானித்து, ஆகாய நிறமுடைய வாகீஸ்வரியைப் பூஜித்து, முன்பு கூறியதுபோல பிற கர்மங்களை முடித்து சதாசிவனைப் பூஜித்து சிவாக்கினையைக் கூறி, மூன்று ஆகுதிகள் செய்து, சதாசிவனை விசர்ஜனம் செய்யவேண்டும். பிற கர்மங்களையும் முறைப்படி செய்து, மலர்களால் அருச்சித்து சாஷ்டாங்கமாகப் பணிந்து, வாகீஸ்வரியையும் விசர்ஜனம் செய்து, கும்ப ஜலத்தைச் சீடனுடைய சிரசின் பேரில் புரோக்ஷித்து, உயர்ந்துள்ள சாந்தியதீதையை வியாபரித்து நிற்கும் சக்தி தத்தவத்தில் அம்மாணவன் ஒடுங்கியதாக நினைக்க வேண்டும்.
அத்துவாக்களுக்கெல்லாம் மேம்பட்டு இருளையொழித்து, பிரகாசிக்கும் சூரியர் கோடி உதயமானது போல விளங்கும். சிவசக்தியைத் தியானஞ் செய்து சுத்தஸ்படிக மயமாக விளங்கும். சீடனுடைய ஆன்மாவை, அந்தச் சக்தி பதத்துக்கு மேம்பட்டுச் சென்றதென்று பாவித்து, முன் அவன் குடுமியிற் கட்டிய கயிற்றைக் குடுமியுடன் சூரியால் அறுத்து பசுவின் சாணத்தில் வைத்து, ஜ்வலித்துக் கொண்டிருக்கும் சிவாக்கினியில் வைத்து விட்டு, முன்பு வாங்கிய சீடனுடைய ஆன்மாவை அவனுடலில் புகுத்தி, அவன் ஸ்நானம் செய்து வந்த பிறகு, மண்டலத்தை பிரதக்ஷிணை நமஸ்காரங்கள் ஜபித்து தானும் சிவபெருமானைப் பணிந்து, சுவாமி! இதுவரை செய்த மந்திரம், ஓமம், ஜபம் முதலியவற்றில் என்னையறியாமல் குறைபாடுகள் நேர்ந்திருந்தாலும் அவற்றை மன்னித்து அருளவேண்டும் என்று பிரார்த்தித்து ஓமம் செய்து நூறு ஆகுதிகள் கொடுத்து, சிவபெருமானையும் பார்வதி தேவியையும் பூஜித்து, மீண்டும் ஓமஞ்செய்து, பணிந்து கைகட்டி நின்று, இவனுக்கு அத்துவசுத்தி செய்தேன். இவனை உன் திருவடியில் வசிக்கும்படி அருள்புரிக என்று பிரார்த்தித்து அவன் உடலில் நாடி சந்தானஞ் செய்து ஓமஞ் செய்து, பூத சுத்தியை முறைப்படி செய்யவேண்டும். பூதாதிவதிகளைப் பூதங்களுடன் அவற்றின் பிணிப்பு ஒழிய புறத்தே செலுத்தி சீடனுடைய ஆன்மாவைச் சிவபெருமானிடத்திற் செலுத்தி அவனுடலை சோஷண தஹன பிலாவனங்கள் செய்து சிவபெருமானிடத்து வைத்த அவனுடைய ஆன்மாவை வாங்கி சுத்தவத்துவாவின் சொரூபமாகக் கருதி சாந்தியாதீத கலையைச் சிரசிலும் சாந்திகலையை முகத்திலும், வித்தியாகலையைக் கழுத்திலிருந்து உந்தி வரையிலும், பிரதிஷ்டாகலையை உந்தியிலிருந்து முழங்கால் வரையிலும் நிவ்ருத்தி கலையை முழங்காலிலிருந்து பாதம் வரையிலும் நியாசம் செய்து, மூலமந்திரத்தால் ஷடங்க நியாசம் செய்யவேண்டும்.
அவ்வாறு செய்தபிறகு, சீடனைச் சிவனாகக் கருதி அவனுடைய ஞானமயமான இதய கமலத்தின் கர்ணிகையில் உமாமகேஸ்வரரை மலர்களால் அருச்சித்து, இவனிடத்திலிருந்து பிரியாது எழுந்தருளியிக்க வேண்டும் என்று பிரார்த்திக்க வேண்டும். பிறகு அணிமாதி குணங்களை அவனுக்குக் கொடுத்து ஒவ்வொரு குணங்களுக்கும் மும்மூன்று ஆகுதிகள் செய்யவேண்டும். பிறகு சர்வக்ஞரும் நித்தியதிருப்தி அநாதியறிவு குறைவிலாற்றல் தன்வயமாதல் எல்லையில்லாத ஆற்றல் ஆகிய இவற்றை அவனுக்குக் கொடுக்க வேண்டும். சக்திமந்திரஞ் சிவமந்திரம் இவற்றை ஜபித்து ருஷி, சந்தஸ், தெய்வம், கடவுள், உமை, உருவம், ஆவரணம் இவற்றுடன் சிவபெருமானைப் பூஜை செய்து, ஆசனங்களின் இயல்பை நன்றாகவுணர்த்திச் சிவபெருமானை இருவருமாகப் பூஜை செய்து அடியேன் செய்த கர்மங்களையெல்லாம் அங்கீகரித்துக் கொள்க என்று பிரார்த்திக்கச் செய்து தானும் சீடனுடன் சாஷ்டாங்கமாகப் பணிந்து என் பிறவிகள் எல்லாம் புனிதமாகுக. இனிப்பிறவி ஒழிக எனக்குச் சிவகடாக்ஷம் உண்டாகுக! என்று பிரார்த்தித்து சிவபெருமானைப் பணிந்து, தன் கர்மங்களைச் செய்யவேண்டும். தன் பாசபந்தங்களை ஒழித்த ஆசிரியனுக்குப் பொன், பொருள், ஆடை முதலியவற்றைக் குறைவின்றித் தன் சக்திக்கு ஏற்ப கொடுக்க வேண்டும்.