பதிவு செய்த நாள்
17
டிச
2020
11:12
திருவண்ணாமலை: மார்கழி மாத பிறப்பையொட்டி, திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சிறப்பு பூஜையில் பங்கேற்ற பக்தர்கள் பின், கிரிவலம் சென்றனர்.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், மார்கழி மாத பிறப்பையொட்டி, நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, கோவில் நடை திறக்கப்பட்டு, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மன் மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு, சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. உற்சவ மூர்த்திகளுக்கு, வெள்ளி கவசம் சாத்தப்பட்டது. நடராஜர் சன்னதியில், திருவெம்பாவை பாடல்கள் பாடப்பட்டன. அம்மன் சன்னதி முன், மார்கழி மாதம் முழுவதும் நடக்கும், திருவெம்பாவை சொற்பொழிவு நடந்தது. பக்தர்கள், அதிகாலையில் கோவிலுக்கு வந்து, சுவாமி தரிசனம் செய்து, கிரிவலம் சென்றனர். திருவெம்பாவை இயற்றிய தலமான, கிரிவலப்பாதையில் உள்ள மாணிக்கவாசகருக்கான தனி கோவிலில், சிறப்பு பூஜை நடந்தது. கலசப்பாக்கம் அடுத்த தென்மாதிமங்கலத்தில், 4,668 அடி, உயரமுள்ள பர்வத மலையில், பிரம்மாம்பிகை சமேத, மல்லிகாஜுனேஸ்வரர் சுவாமி, கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதேபோன்று, திருவண்ணாமலை, பூத நாராயணன் கோவில், படவேடு, லட்சுமி நரசிம்மர் கோவில், ஆவணியாபுரம், லட்சுமி நரசிம்மர் கோவில்களில், திருப்பாவை பாடல்கள் பாடி வழிபாடு நடந்தது.