பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தரைப்பாலம் அருகில் உள்ள தர்மசாஸ்தா கோயிலில் திருக்கல்யாண விழா நடந்தது.
பரமக்குடி தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில், கேரளாவில் உள்ள ஆரியங்காவு கோயிலுக்கு அடுத்தபடியாக திருக்கல்யாணம் நடப்பது வழக்கம். இதன்படி டிச., 24 இரவு 7:00 மணிக்கு தர்மசாஸ்தா, புஷ்கலா தேவி நிச்சயதார்த்தம் நடந்தது. இன்று காலை 9:45 மணிக்கு மாப்பிள்ளை அழைப்பு, திருமாங்கல்ய பூஜை, மேளதாளத்துடன் நடந்தது. பெண் வீட்டார் அழைப்பு, மாலைமாற்றலுக்குப் பின் காலை 10:15 மணிக்கு புஷ்கலா தேவிக்கும் - தர்மசாஸ்தாவுக்கும் திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து நலுங்கு சுற்றுதல், விவாகச் சடங்குகள் நிறைவடைந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பகல் 11:00 மணி தொடங்கி சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 7:00 மணிக்கு புஷ்கலா தேவி சமேத தர்மசாஸ்தா திருக்கல்யாண திருக்கோலத்தில் யானை வாகனத்தில் வீதி வலம் வந்தார். நாளை டிச., 26 காலை 5:00 மணி தொடங்கி, கணபதி ஹோமம், 108 சங்காபிஷேகமும்,மாலை 6:00 மணிக்கு சர்வ அலங்காரத்துடன் ஐயப்பன் திருவீதி வலம் வருவார். ஏற்பாடுகளை தர்மசாஸ்தா சேவா சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.