பதிவு செய்த நாள்
30
டிச
2020
02:12
சென்னை - பொது இடங்களில், ஆங்கில புத்தாண்டு கொண்டாட அரசு தடை விதித்துள்ளது. ஓட்டல்கள், பண்ணை வீடுகள் என, எந்த இடத்திலும் புத்தாண்டு கொண்டாட்டம் கூடாது. மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், என போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் கூறினார்.
சென்னை, புதுப்பேட்டையில், காவலர் குடியிருப்பு உள்ளது. அங்கு, சில மாதம் முன், போலீஸ் கமிஷனர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, காவலரின் குடும்பத்தார், இங்கு சிறுவர் பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் அமைத்து தர வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, காவலர் குடியிருப்பில், 7 லட்சம் ரூபாய் செலவில், சிறுவர் பூங்கா, உடற்பயிற்சி கூடம் மற்றும் எட்டு வடிவிலான நடைபயிற்சி பாதை அமைக்கப்பட்டன. அவற்றை, கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேற்று திறந்து வைத்தார்.பின், அவர் அளித்த பேட்டி:கொரோனா பரவல் தடுப்பு பணியில், முன் களப்பணியாளர்களாக போலீசார் உள்ளனர். காவலர், அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தார் நலன் காப்பது என் தலையாய கடமை.அந்த வகையில், காவலர் குடியிருப்பில், குடிநீர், சுகாதாரம் உட்பட எவ்வித பிரச்னைகளையும் தீர்க்க, கண்காணிப்பு அதிகாரி நியமிக்கப்பட்டு உள்ளார். அத்துடன், காவலர்களுக்கு அரசு அறிவித்துள்ள திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு செய்வதுடன், பயன்பெறவும் வழிகாட்டுதல்கள் செய்யப்பட்டு வருகின்றன.
காவலர் குடியிருப்புகளில், சிறுவர் பூங்கா, சமூக நல கூடங்கள், வெளியூர்களில் வரும் காவலர்கள் தங்குவதற்கான ஓய்வு அறை புனரமைப்பு என, பல்வேறு வசதிகளை நிறைவேற்றி வருகிறோம்.பொது இடங்களில், ஆங்கில புத்தாண்டு கொண்டாட அரசு தடை விதித்துள்ளது. ஓட்டல்கள், பண்ணை வீடுகள் என, எந்த இடத்திலும் புத்தாண்டு கொண்டாட்டம் கூடாது. மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.பைக்ரேஸில் ஈடுவோர் உடனடியாக கைது செய்யப்படுவர். வாகன சோதனைக்காக, சென்னை முழுதும், 300க்கும் மேற்பட்ட இடங்களில், தற்காலி வாகன சோதனை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. கார்களில், பம்பர் அகற்றுவது பற்றி விழிப்புணர்வு செய்யப்படுகிறது. வணிக வாகனங்களில் பம்பர் அகற்றுவது அவசியமா என்பது குறித்து, என் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதுபற்றி, சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வருகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.