பதிவு செய்த நாள்
22
ஜன
2021
02:01
தஞ்சாவூர், தென்பெண்ணை நதியை பாதுகாக்க வலியுறுத்தி, ஜன.30ம் தேதி, விழிப்புணர்வு பாத யாத்திரையை துவங்கி நடத்த ஏற்பாடு செய்துள்ளதாக அகல பாரதீய சன்னியாசிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அகில பாரதீய சன்னியாசிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ராமனந்தா சுவாமிகள் தலைமையில், தென்பாரத கும்பமேளா மகாமக அறக்கட்டளையின் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அறக்கட்டளையின் செயலாளர் சத்தியநாராயணன், பொருளாளர் வேதம் முரளி, சன்னியாசிகள் சங்கத்தின் தஞ்சாவூர் மண்டல பொறுப்பாளர் கோராக்ஷனந்தாசுவாமிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு பின் நிருபர்களிடம் ராமானந்தாசுவாமிகள் கூறியாதவது: தமிழ் கடவுள் முருகபெருமானுக்கு உகந்த தினமான தைப்பூச விழாவுக்கு அரசு விடுமுறையை அளித்த தமிழக அரசுக்கு முதலில் நன்றியையும், பாராட்டையும் தெரிவிக்கிறோம். மேலும், டெல்டா உள்ளிட்ட தமிழகத்தில் தொடர் மழையில் விவசாயிகள் பாதிக்கப்பட்டதால் பொங்கல் விழாவை சரிவர கொண்டாடமுடியவில்லை. எனவே வரும் தைப்பூசத்தன்று விவசாயிகள் அவரவர் இல்லத்தில் பொங்கல் வைத்து வழிபட வேண்டும். நீர் நிலைகளை பாதுகாக்க தமிழகத்தில் தனி அமைச்சகம் ஏற்படுத்த வேண்டும்.
கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களைப் போல் தமிழகத்திலும் கையிலாய யாத்திரை செல்பவர்களுக்கு நிதி உதவியை விரைந்து வழங்க வேண்டும். கும்பகோணத்தில் வரும் பிப்.26-ம் தேதி மாசிமக விழாவும், ஆரத்தி பெருவிழாவும் வழக்கம் போல் வெகு சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. நதிகளை பாதுகாக்க வேண்டியும், நீர்நிலைகளை போற்றி வணங்க வேண்டியும், ஏற்கெனவே அகில பாரதீய சன்னியாசிகள் சங்கம் சார்பில் காவிரி நதி பாதுகாப்பு யாத்திரை, தாமிரபரணி, வைகை நதிகளில் விழிப்புணர்வு யாத்திரைகளும், புஷ்கரங்களும் நடத்தப்பட்டு இன்றளவும் அந்த நதிகளில் நீர் குறையாமல் இருந்து கொண்டிருக்கிறது. அதே போல் தென்பெண்ணை நதிக்காக விழிப்புணர்வு பாத யாத்திரை முதற்கட்டமாகவும், அதனைத் தொடர்ந்து புஷ்கர விழாவும் நடத்தப்படவிருக்கிறது. இதில் வரும் 30-ம் தேதி கர்நாடக மாநிலம் நந்திமலையில் இருந்து தென்பெண்ணை நதி பாதுகாப்பு பாதயாத்திரை தொடங்கவுள்ளது. பிப். 24-ம் தேதி பாதயாத்திரை கடலுார் மாவட்டத்தில் முடிவடைகிறது. யாத்திரைக்கு பின்னர் புஷ்கர விழா நடத்துவது குறித்து அறிவிக்கப்படும் என்றார்.