பதிவு செய்த நாள்
22
ஜன
2021
05:01
வாலாஜாபாத் - பல்வேறு நிபந்தனைகளுடன், ராமலிங்கேஸ்வரர் கோவில் தெப்போற்சவ விழா, 28ம் தேதி நடத்த, மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.வாலாஜாபாத் அடுத்த, திம்மராஜம்பேட்டை கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.
இக்கோவிலில், தைப்பூச தினத்தன்று தெப்போற்சவ திருவிழா நடைபெறும். அப்போது, அம்பாளுடன், ராமலிங்கேஸ்வரர், தாங்கி பிச்சை நாயக்கன் குளத்தில், தெப்பலில் எழுந்தருளி, மூன்று முறை வலம் வருவார்.கொரோனா தொற்று பரவல் தடுக்கும் விதமாக, ஊரடங்கு அமலில் இருப்பதால், வரும், -28ம் தேதி அன்று, தைப்பூச தெப்போற்சவம் நடத்த, திம்மராஜம்பேட்டை கிராம மக்கள், காஞ்சிபுரம் கலெக்டரிடம் மனு அளித்தனர். இதையடுத்து, மாவட்ட நிர்வாகம், நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.கொரோனா தொற்று பரவல் தடுக்கும் விதமாக, கிராமம் மற்றும் விழா நடைபெறும் இடம் முழுதும், கிருமி நாசினி தெளிக்க வேண்டும். கலை நிகழ்ச்சி நடத்தக் கூடாது.விழாவிற்கு வருவோர் அனைவரும், கட்டாயமாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும் உள்ளிட்ட, பல நிபந்தனைகளுடன், தெப்போற்சவ விழா நடத்த அறிவுறுத்தி உள்ளது.