பதிவு செய்த நாள்
25
ஜன
2021
11:01
வேலுார்: வேலுார் தங்கக்கோவில் வளாகத்தில், கட்டப்பட்ட சக்தி கணபதி கோவில் கும்பாபிஷேகத்தில், மத்திய அமைச்சர் சிங் பங்கேற்றார்.
வேலுார் அருகே, ஸ்ரீபுரத்திலுள்ள தங்கக்கோவில் வளாகத்தில், சக்தி கணபதி கோவில் அமைக்கப்பட்டுள்ளன. சக்தி கணபதி கோவிலில், 1,700 கிலோ வெள்ளியால் ஆன, மகா கணபதி சிலை மூலவராக உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, கடந்த 15ல் யாகசாலை பூஜை தொடங்கியது. இதில், நவதானியங்களால் ஒரு லட்சத்து, 8,000 லட்டுகள் தயாரிக்கப்பட்டு, தமிழ் மந்திரங்களுடன் பூஜை நடந்தது. காலை, 9:15 மணி முதல், 10:30 மணிக்குள், வேத மந்திரங்கள் முழங்க, கோவில் கலசத்தில், சக்தி அம்மா, புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினார். தொடர்ந்து, மகா கணபதிக்கு சிறப்பு அலங்கார, ஆராதனை நடந்தது. இதில், மத்திய, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங், மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம், எஸ்.பி., செல்வகுமார், ரத்தினகிரி பாலமுருகனடிமை, வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடம் முரளிதர சுவாமிகள், தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் கார்த்திகேயன், நந்தகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.