பதிவு செய்த நாள்
25
ஜன
2021
11:01
அயோத்தி; அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு, நிதி வழங்க விருப்பம் தெரிவித்தால், காங்கிரஸ் தலைவர்களான சோனியா, ராகுல் ஆகியோரிடம், நிதி வாங்குவதற்கு, நாங்கள் தயார் என, ராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக, ராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா என்ற பெயரில், அறக்கட்டளையை அரசு அமைத்தது. இந்நிலையில், அறக்கட்டளையின் பொருளாளர் சுவாமி கோவிந்த் தேவ் கிரி மஹராஜ், தனியார், டிவி சேனலுக்கு அளித்த பேட்டி: அயோத்தியில் பிரதான ராமர் கோவில் கட்டி முடிக்க. மூன்று முதல் மூன்றரை ஆண்டுகள் ஆகும். இதற்கு மட்டும், 300 - 400 கோடி ரூபாய் வரை செலவாகும்.ஒட்டு மொத்தமாக, 70 ஏக்கர் பரப்பளவில், ராமர் கோவில் முழுவதையும் கட்டி முடிக்க 1,100 கோடி ரூபாய் செலவாகும். ராமர் கோவில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் வல்லுனர்களிடம் ஆலோசித்த பின், அவர்கள் அளித்த புள்ளிவிபரங்களின் அடிப்படையில், இந்த தொகை தெரிவிக்கப்பட்டுள்ளது. சில கார்ப்பரேட் நிறுவனங்கள், திட்டத்தை எங்களிடம் ஒப்படையுங்கள், கோவிலை கட்டி முடித்து தருகிறோம் என்றனர். ஆனால், அந்தக் கோரிக்கையை நிராகரித்து விட்டோம்.நாட்டு மக்கள் அனைவரின் பங்களிப்புடன், கோவில் கட்டப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
ஆறு லட்சத்துக்கும் அதிகமான கிராமங்களில், 15 கோடிக்கும் அதிகமான வீடுகளை தொடர்பு கொண்டு, ராமர் கோவிலுக்கான நிதி வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட பலரும், தாங்களாக முன்வந்து நன்கொடை அளித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியினர் நன்கொடை அளித்தாலும், அதை வாங்குவதற்கு நாங்கள் தயார்.சோனியா, ராகுல் உள்ளிட்டோர் நன்கொடை அளிக்க முன்வந்தால், வாங்குவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். யாரையும் அவமரியாதை செய்ய மாட்டோம். இவ்வாறு, அவர் கூறினார்.