பதிவு செய்த நாள்
07
பிப்
2021
06:02
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவில் திருப்பணி செய்வதற்காக மாசி மக பெருவிழா நிறுத்தப்பட்டது.
அட்டவீரட்டானங்களில் ஒன்றான திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவில் பாடல் பெற்ற, பழமையான ஸ்தலமாகும். ஆண்டு தோறும் மாசிமாதம் பத்து நாள் தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெறுவது வணக்கம். ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோவில் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு, குடமுழுக்கு விழா நடத்தப்பட வேண்டியது கட்டாயம். ஆனால் இக்கோவில் குடமுழுக்கு விழா நடைபெற்று 21 ஆண்டுகளை கடந்து விட்டது.
கோவிலுக்கு ஏராளமான சொத்துக்கள் இருந்தும், பக்தர்கள் உண்டியல் காணிக்கை உள்ளிட்ட வருமானங்கள் இருந்த போதிலும், கோவில் மேற்கூரைகள் ஒழுகி, சிதிலமடைந்து வருகிறது. இச்சூழலில் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் செய்வதற்கான நடவடிக்கையை இந்து சமய அறநிலையத்துறை இதுவரை மேற்கொள்ளாமல் இருப்பது பக்தர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இச்சூழலில் இந்த ஆண்டு மாசிமக பெருவிழா நடத்துவதற்கு விழா உபயதாரர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இதுதொடர்பாக கோவில் செயல் அலுவலர் தலைமையில் சமீபத்தில் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கோவில் திருப்பணி செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்வது எனவும், அதுவரை திருவிழாவை நடத்துவதை நிறுத்தி வைப்பது என முடிவு செய்யப்பட்டது.