விருத்தாசலம் : விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் கும்பாபிேஷக திருப்பணிகள் தீவிரமாக நடக்கிறது. விருத்தாசலத்தில் 1,500 ஆண்டுகள் பழமையான விருத்தகிரீஸ்வரர் கோவிலுக்கு கும்பாபிேஷகம் நடத்த தீர்மானிக்கப்பட்டு, திருப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இதற்காக, தமிழக இந்து சமய அறநிலையத்துறை மற்றும் பக்தர்கள் நிதியுதவியுடன் கோபுரங்கள் புதுப்பிப்பு, சுற்றுச்சுவர், தரைத்தளம், பிரகாரம், சுவாமிகள் சன்னதி சீரமைப்பு போன்ற திருப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக, திருப்பணி கமிட்டி அமைத்து, பணிகள் முடுக்கி விடப்பட்டன. தொல்லியல்துறை ஆலோசனையுடன் பழமை மாறாமல், ஜெர்மன் நாட்டு அதிநவீன தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கும் பணிகள் நடக்கிறது. ஓரிரு மாதங்களில் திருப்பணிகளை முடித்து, விரைவில் கும்பாபிேஷகம் நடத்தப்பட உள்ளது.அதன்படி, கோபுரங்கள், சுவாமி சன்னதிகள், பிரகாரங்கள், தேர்கள், கொடிமரங்கள், வீதியுலா வரும் சுவாமி வாகனங்கள் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. சன்னதிகளில் ஆங்காங்கே தீபம் ஏற்றி, மாசடைவதை தவிர்த்திட தீர்த்தக் கிணறு அருகே தீபம் ஏற்றும் கூடம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. வெளி பிரகார தளம் முழுவதுமாக ராட்சத கற்கள் மூலம் புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.