ஜனாதிபதியாக இருந்த ஆர். வெங்கட்ராமன் ஒருமுறை ஆதிசங்கரர் ஜெயந்தியை முன்னிட்டு ஆங்கிலத்தில் உரையாற்றினார் .அதை மகாபெரியவர் கேட்க வேண்டும் என்பதற்காக மடத்திற்கு அனுப்பினார். அதைக் கேட்ட மகாபெரியவர், உரையை தமிழில் மொழிபெயர்த்தால் ஆதிசங்கரரின் பெருமையை பலருக்கும் தெரியும்’ என விரும்பியதால் நிர்வாகியை அழைத்து உடனடியாக ஏற்பாடு செய்ய கூறினார். ‘சுருக்கெழுத்து தெரிந்த நபரும், மொழிபெயர்ப்பாளரும் தேவை. அதன் பின்னர் தானே அச்சடித்துக் கொடுக்க முடியும். இதெல்லாம் உடனடியாக நடக்கும் செயலா...’ என யோசித்தார். ‘ ‘எல்லாம் நல்லதாகவே நடக்கும். காத்திருக்கலாம்’ எனச் சிரித்தார் மகாபெரியவர். அப்போது மகாபெரியவரின் தரிசனத்திற்காக பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். ‘‘வந்திருப்பவர்களில் சுருக்கெழுத்து தெரிந்தவர், மொழிபெயர்ப்பாளர் யாராவது இருக்கிறார்களா?’ என விசாரிக்கும்படி நிர்வாகியிடம் தெரிவித்தார். என்ன ஆச்சரியம்! அறிவிப்பு செய்ததும் இரண்டு செல்வந்தர்கள் கையை உயர்த்தினர். இருவரும் மகாபெரியவரிடம் அழைத்துச் செல்லப்பட்டனர். செய்ய வேண்டிய பணி குறித்தும், அதன் முக்கியத்துவம் குறித்தும் மகாபெரியவர் அவர்களுக்கு விளக்கினார். மடத்திலேயே அமர்ந்து பணியில் ஈடுபட்டனர். சில மணிநேரத்திற்குள் மொழிபெயர்ப்பை ஒப்படைத்தனர். மகாபெரியவர் அதை திருத்திய போது, ‘‘இதை ஐந்தாயிரம் பிரதிகள் அச்சடித்து மடத்திற்கு வரும் பக்தர்களுக்கு கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும். ஆதிசங்கரருக்குச் செய்யும் பெரிய கைங்கர்யம் இது’’ என்றார். தாங்களே அதைச் செய்ய விரும்புவதாகவும், இரண்டே நாளில் பிரதிகளை ஒப்படைப்பதாகவும் வாக்குறுதி அளித்தனர். மகாபெரியவர் அவர்களுக்கு ஆசி வழங்கி குங்குமப் பிரசாதம் கொடுத்தார்.