பதிவு செய்த நாள்
26
பிப்
2021
05:02
தஞ்சாவூர், கும்பகோணத்தில், மாசிமக திருவிழாவை முன்னிட்டு, மகாமக குளத்தில் நடைபெற்ற தீர்த்தவாரியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகாமக, விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதை போன்று, மாசி மாதம் மக நட்சத்திரத்தன்று, ஆண்டுதோறும் மாசிமக விழா கொண்டாடப்படுகிறது.
மாசிமக விழாவினை முன்னிட்டு, கடந்த 17ம் தேதி ஆதிகும்பேஸ்வரர் உள்ளிட்ட 6 சிவாலயங்களில், கொடியேற்றத்துடன் பத்துநாள் உற்சவம் தொடர்ந்து நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தீர்த்தவாரியை முன்னிட்டு, காலை ஆதிகும்பேஸ்வரர், காசிவிஸ்வநாதர், அபிமுகேஸ்வரர் உள்ளிட்ட மகாமத்திற்கு தொடர்புடையை, 12 சிவலாயங்களில் இருந்து, சுவாமி– அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன், ரிஷப வாகனங்களில் மகாமக குளத்தின் நான்கு கரையில் எழுந்தருளினர். பின்னர், அந்தந்த கோவிலின் அஸ்திரதேவர்களுக்கு மஞ்சள், பால், விபூதி உள்ளிட்ட மங்கள பொருட்களால், சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அஸ்திரதேவர்கள் மகாமக குளத்தில் நீராடியதை, தொடர்ந்து நான்கு கரைகள் மற்றும் குளத்தில் காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மகாமக குளத்தில் பக்தர்கள் நீராட அனுமதி இல்லை என போலீசார் தெரிவித்தனர். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நேற்று காலை முதல் பக்தர்கள் நீராட போலீசார் அனுமதி அளித்தனர். சுமார் 350க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.
சக்கரபாணி கோவில் தேரோட்டம்: இதை போல, வைணவ தலங்களில், கடந்த பிப்.18ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. நேற்று தீர்த்தவாரியை முன்னிட்டு, சக்கரபாணிசுவாமி சுதர்சனவல்லி, விஜயவல்லி தாயாருடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினர். பின்னர் காலை 8.30 மணியளவில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
பொற்றாமரை குளத்தில் தெப்ப உற்சவம்: சாரங்கபாணி சுவாமி கோவிலில் ஐந்து நாட்கள் கோவிலுக்குள்ளே உள்புறப்பாடு நடந்தது. இறுதி நாளான மாசி மகத்தன்று, கோயிலின் பின்புறமுள்ள பொற்றாமரை குளத்தில், அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில், பூதேவியுடன் சாரங்கபாணி சுவாமி தெப்பத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர் இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.