சின்னசேலம் ; கனியாமூர் கும்பகொட்டாய் கிராமத்தில் உள்ள ஸ்ரீமுத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த கனியாமூர் கும்பகொட்டாய் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீமுத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதால், கும்பாபிஷேகம் நடந்து 12 ஆண்டுகள் ஆகிறது.இதனையடுத்து, கடந்த மூன்று மாதங்களாக கோவில் புதுப்பிக்கும் பணி நடந்து வந்தது. இந்நிலையில், தற்போது பணிகள் முற்றிலும் முடிந்து, மூன்று நாட்களாக 5 கால பூஜைகள் நடந்தன.அதன் பின்னர் நேற்று காலை 9 மணியளவில், மகா கும்பாபிஷேக விழாவில் கோவில் கலசங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு, தீர்த்த நீர் பொதுமக்கள் மீது தெளிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.