பதிவு செய்த நாள்
01
மார்
2021
07:03
பவானிசாகர்: கெஜஹட்டி ஆதி கருவண்ணராயர் கோவிலில், மாசி மக திருவிழாவில், 500க்கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டு, பக்தர்கள் வழிபட்டனர்.
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் வனச்சரகம், தெங்குமரஹாடா வனப்பகுதியில் உள்ள, கெஜஹட்டி கணவாய் மலையில் ஆதி கருவண்ணராயர் பொம்மதேவியார் கோவில் உள்ளது. உப்பிலிய நாயக்கர் சமூகத்தினரின் குலதெய்வமாக வணங்கப்படுகிறது. அடர்ந்த வனப்பகுதிக்குள் உள்ள கோவிலில், ஆண்டுக்கு ஒரு முறை மாசி மகம் திருவிழாவுக்கு மட்டுமே, வனத்துறை அனுமதி வழங்குகிறது. இதனால் உப்பிலிய நாயக்கர் சமூகத்தினர், குடும்பத்துடன் திருவிழாவில் பங்கேற்கின்றனர். நடப்பாண்டு விழா, கடந்த, 26ல் தொடங்கியது. கடந்த மூன்று நாட்களாக, ஏராளமான பெண்கள், கோவில் வளாகத்தில், பொங்கல் வைத்து, சுவாமியை வழிபட்டனர். இதில், 500க்கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். ஈரோடு, திருப்பூர், சேலம், தர்மபுரி, திருச்சி, திண்டுக்கல், நாமக்கல், கோவை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த, பக்தர்கள் லாரி, பஸ்களில் குவிந்தனர். விழாவில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றதாக, வனத்துறையினர் தெரிவித்தனர்.