பதிவு செய்த நாள்
02
மார்
2021
01:03
திண்டுக்கல் : மனிதனை பக்குவப்படுத்தி மெருகேற்றுவதுதான் கீதை உபதேசம், என, திண்டுக்கல்லில் நடந்த பட்டிமன்றத்தில், நடுவர் சாலமன் பாப்பையா பேசினார்.
திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., பொறியியல் கல்லுாரியில், கல்யாண மாலை, இம்பா அமைப்பு சார்பில், கடமையை செய்; பலனை எதிர்பாராதே என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. முன்னதாக பாராட்டு விழாவில், பத்மஸ்ரீ விருது பெற்ற பேராசிரியர் சாலமன் பாப்பையா, இயற்கை விவசாயி பாப்பம்மாளுக்கு நினைவு பரிசு வழங்கினார். கடமையை செய்கல்யாண மாலை மோகன், மீரா முன்னிலை வகித்தனர்.
கல்லுாரி சேர்மன் ரகுராம் வரவேற்றார். வி.ஐ.டி., பல்கலை துணை தலைவர் செல்வம், இம்பா நிறுவன தலைவர் அருணாசல முதலியார், ஒருங்கிணைப்பாளர் ரவிப்பிள்ளை, மாநில பொருளாளர் சந்திரசேகர், பிரமிட் நடராஜன் பங்கேற்றனர். உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் பேசும்போது, தமிழ் மொழியை, அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்ல வேண்டும். பிள்ளைகளை, தமிழை கட்டாயமாக கற்க வையுங்கள். விவசாயத்தின் மீது கவனம் செலுத்த வேண்டும். தமிழ் அறிஞர்களை, கட்சி பேதமின்றி பாராட்ட வேண்டும், என்றார்.
இதன்பின் நடந்த பட்டிமன்றத்தில், பேராசிரியர் சாலமன் பாப்பையா நடுவராக இருந்தார்.கடமையை செய்; பலனை எதிர்பாராதே தலைப்பை ஆதரித்து, பாரதி பாஸ்கர், டாக்டர் சிவராமன், முனைவர் குருஞானாம்பிகா பேசினர். எதிரணியில், ராஜா, கவிதா, வழக்கறிஞர் வடிவேலன் பேசினர்.கீதை உபதேசம்இறுதியில், நடுவர் சாலமன் பாப்பையா பேசியதாவது:தத்துவங்கள் பல பேசலாம். ஆனால், சிலருக்கு மட்டுமே ஒத்து வரும். மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு குணமுடையவர்கள். கடமை என்பது செயல்; செயலைச் செய்வது உடம்பு; உடம்பை ஊக்கப்படுத்துவது உள்ளம்.உள்ளம் என்பது ஆன்மா. அந்த ஆன்மாவிற்கு எதிர்பார்ப்பும் உண்டு; கடமையும் உண்டு.
பல குணங்கள் கொண்ட மனிதனை பக்குவப்படுத்தி, மெருகேற்றுவது தான் கீதை உபதேசம். கீதையில் குறிப்பிடப்படும் கடமையைச் செய்; பலனை எதிர்பாராதே என்ற சொல் சிரமமாக இருந்தாலும் சாத்தியமே.இவ்வாறு, அவர் பேசினார். நிகழ்ச்சி துவக்கத்தில், அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக் கழகத்தில், தமிழ் இருக்கைக்காக, கல்யாண மாலை சார்பில், 1 லட்சம் டாலர், இந்திய மதிப்பில், 70 லட்சம் ரூபாய் நிதி திரட்டுவதாக கேள்விப்பட்டேன். பட்டிமன்றத்தில் பேசி கிடைத்த தொகையில், என் தமிழிற்காக, என் பங்காக, 2 லட்சம் ரூபாய் தருகிறேன், என, சாலமன் பாப்பையா அறிவித்தார்.