பதிவு செய்த நாள்
10
மார்
2021
12:03
ஒருமுறை பிரம்மனுக்கும் திருமாலுக்கும் இடையே, தங்களில் பெரியவர் யார் எனும் சர்ச்சை எழுந்தது. அவர்கள் இருவருக்குமான மோதலால் உலகமும் உயிர்களும் பாதிப்படையுமே என அச்சம் கொண்ட தேவர்கள், பரமேஸ்வரரைச் சரணடைந்தனர். அவர்களை ஆறுதல்படுத்தினார் ஈஸ்வரன். திருமாலுக்கும் பிரம்மனுக்கும் நடுவில் பெரும் நெருப்பு தூணாய் தோன்றினார். அதன் பிரமாண்டம் அவர்களை அயரவைத்தது. அந்தப் பிரமாண்டத்தின் (நெருப்புத் தூணின்) திருவடியையோ அல்லது திருமுடியையோ முதலில் கண்டு வருபவரே பெரியவர் என்று முடிவானது. உடனே பெருமாள், வராக உருவெடுத்து பூமியை அகழ்ந்து, திருவடியைக் காணச்சென்றார். பிரம்மன், அன்னப் பறவையாக மாறி திருமுடி காண உயரப் பறந்தார். ஆனால் இருவராலும் அந்த நெருப்புத் தூணின் அடி-முடியைக் காண இயலாமல் போனது. செய்வதறியாமல் இருவரும் துதித்து நிற்க, தேவர்கள் யாவரும் போற்றி வழிபட, அந்த நெருப்புத் தூணின் மையத்தில்... மான், மழு, அபய, வரத முத்திரை தாங்கியவராக திருக்காட்சி தந்தார் சிவபெருமான். அங்கிருந்த அனைவருக்கும் அனுக்கிரஹம் தந்தவர், இவ்வாறு நான் காட்சியளித்த தினம் சிவராத்திரி ஆகும்.
இதுபோல், முன்னம் ஒரு சிவராத்திரி நாளில் தேவியும் என்னை பூஜித்து பேறு பெற்றாள். ஆகம முறைப்படி இந்த தினத்தில் எம்மை பூஜிக்க.. நல்லது யாவும் நடந்தேறும். பாவங்களைப் பொசுக்கி, சிவகதி காட்டும் அற்புதமான இந்த பூஜை, அஸ்வமேதம் முதலான யாகங்கள் செய்வதைக் காட்டிலும் நூறு மடங்கு பலன் தருவது என்று அருள்பாலித்த பின் திருக்கயிலைக்கு எழுந்தருளினார். இப்படி, திருமால் மற்றும் பிரம்மாதி தேவர்கள் சிவனருள் பெற்ற தினம் மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி நாள். இதையே உலகத்தார் மகா சிவராத்திரியாகக் கொண்டாடுகின்றனர்.