பதிவு செய்த நாள்
10
மார்
2021
02:03
மேட்டுப்பாளையம்: பட்டத்தரசி அம்மன் கோவிலில், இன்று கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையில், குமரபுரத்தில் பட்டத்தரசி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் செய்து, 12 ஆண்டுகள் ஆனதை அடுத்து, புதிதாக திருப்பணிகள் செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து இன்று கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
இதையடுத்து நேற்று காலை, விநாயகர் வழிபாட்டுடன், விழா தொடங்கியது. காப்பு அணிவித்தல், விமான கலசம் நிறுவுதல், முதற்கால வேள்வி பூஜையும், எண்வகை மருந்து சாத்துதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. இன்று காலை, 6:15 மணிக்கு, திருப்பள்ளி எழுச்சி, புனித நீர் கொண்டு கோவிலை தூய்மை செய்தல், தெய்வத் திருமேனிகளுக்கு காப்பு அணிவித்தல், இரண்டாம் கால வேள்வி ஆகிய நடைபெறுகின்றன. அதைத்தொடர்ந்து, 9:00 லிருந்து, 10:00 மணிக்குள், யாகசாலையில் இருந்து புனித தீர்த்தங்களை ஊர்வலமாக எடுத்து வந்து, கோபுர கலசம் மற்றும் சுவாமி மீது ஊற்றி, கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இவ்விழா சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் தலைமையில் நடைபெற உள்ளது குழந்தைவேல் சக்திவேல் ஆகியோர் தலைமையில், யாக வேள்வி வழிபாடுகள் நடைபெறுகின்றன. விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை, விழாக்குழுவினர், ஊர் பொதுமக்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.