பதிவு செய்த நாள்
12
மார்
2021
01:03
புதுடில்லி : பகவத் கீதையில் கூறியபடி, உலகளவில் மனித குலத்துக்கு, இந்தியா உதவி வருகிறது, என, பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பகவத் கீதை ஆங்கில பதிப்பின், இ - புத்தகத்தை வெளியிட்டார். தமிழகத்தின் திருச்சி மாவட்டம், திருப்பராய்த்துறை சுவாமி சித்பவானந்தர், பகவத் கீதைக்கு, தமிழிலும், ஆங்கிலத்திலும் விளக்க உரைகளை எழுதினார்.
இணைய வழி: இரண்டு புத்தகங்களும், 19 பதிப்புகளில் வெளியாகியுள்ளன. அவற்றில், ஆங்கில பதிப்பின் விளக்க உரை அடங்கிய, டிஜிட்டல் வடிவிலான, இ - புத்தகத்தை, பிரதமர் மோடி, நேற்று டில்லியில் இருந்தபடி, வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பை, பொது மக்கள், மாணவியர் இணைய வழி வாயிலாக பார்க்கும் வகையில், கரூர் சாரதா நிகேதன் மகளிர் அறிவியல் கல்லுாரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவன செயலர் சத்யயானந்த மகராஜ், சாரதா மகளிர் கல்லுாரி செயலர் யதீஸ்வரி நீலகண்ட பிரியா உட்பட, பலர் பங்கேற்றனர்; இதில், பிரதமர் மோடி பேசியதாவது: பகவத் கீதை நம்மை சிந்திக்க துாண்டுகிறது. நம்மை கேள்வி கேட்பவர்களாகவும், திறந்த மனதுடன் விவாதிக்க, நம்மை ஊக்குவிக்கவும் கீதையால் முடியும். நம் மனத்தை திறந்த நிலையில் வைத்திருக்க, கீதை உதவுகிறது.
சுயசார்பு இந்தியா: கீதையால் ஈர்க்கப்பட்ட எவரும், இயற்கையிலேயே இரக்கம் நிறைந்தவர்களாகவும், ஜனநாயக குணமிக்கவர்களாகவும் இருப்பர்.கடந்த காலத்தில் உலகத்திற்கு மருந்துகள் தேவைப்பட்டபோது, இந்தியாவால் என்ன முடியுமோ, அவற்றை அவர்களுக்கு வழங்கியது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள், உலகம் முழுதும் சென்றுள்ளன.
நாம் மனித குலத்திற்கு உதவவும், குணமளிக்கவும் விரும்புகிறோம். இதையே கீதை, நமக்கு போதிக்கிறது. பகவத் கீதையின் முக்கிய தத்துவம், அனைவரும் தங்கள் கடமையை செய்ய வேண்டும் என்பது தான். 130 கோடி இந்திய மக்களும் தங்கள் கடமையை சரியாகச் செய்தால், சுயசார்பு இந்தியா உருவாகும்.சுயசார்பு இந்தியா திட்டத்தின் மையக் கருத்து, இந்தியாவுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த மனித குலத்திற்கே வளங்களை உருவாக்குவது தான்.கொரோனா பரவல் காலத்தில், இந்திய மக்களிடம், மனிதநேயம் அதிகளவில் வெளிப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கு, பல தரப்பினரும் தானாக முன்வந்து உதவினர். இதனால் தான், கொரோனா சவாலை, நம்மால் வெற்றிகரமாக எதிர்கொள்ள முடிந்தது. இ - புத்தகங்கள் இப்போது பிரபலமாகி வருகின்றன; இதை பயன்படுத்தி, கீதையை இளைஞர்கள் ஆர்வத்துடன் படிக்க வேண்டும்.
தமிழ் கலாசாரம்: இந்த புத்தகம், பகவத் கீதையையும், பாரம்பரியமிக்க தமிழ் கலாசாரத்தையும் இணைக்கும் பாலமாக உள்ளது. உலகில் பல்வேறு நாடுகளில் உள்ள தமிழர்களும், இந்த புத்தகத்தை எளிதாக படிப்பர்.தமிழர்கள் எங்கு சென்றாலும், தங்கள் கலாசாரத்தை பரப்புவதில் சிறப்பாக செயல்படுகின்றனர். புதிய இந்தியா உருவாவதற்காக, உடல், உயிர், ஆன்மா அனைத்தையும் அர்ப்பணித்தவர் சுவாமி சித்பவானந்தா.இவ்வாறு பிரதமர் பேசினார்.