பல்லடம்: பல்லடம் அங்காளம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் பக்தி பரவசத்துடன் பங்கேற்ற பக்தர்கள், அம்மனை வழிபட்டனர்.
பல்லடத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீஅங்காளம்மன் கோவில் பல்வேறு கிராம மக்களுக்கு குலதெய்வமாக விளங்கி வருகிறது. ஆண்டுதோறும் மாசி மாதம் கொண்டாடப்படும் குண்டம் திருவிழாவில், பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்று குண்டம் இறங்கி நேர்த்திக்கடனை நிறைவேற்றுவது வழக்கம். நடப்பு ஆண்டு, 46வது குண்டம் திருவிழா மார்ச் 11 அன்று, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து, கொடியேற்றம், திருக்கல்யாண உற்சவங்கள் நடந்தன. நேற்று நடைபெற்ற குண்டம் திருவிழாவில், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் குண்டம் இறங்க பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. கோவில் பூசாரிகள், 6 பேர் மட்டும் குண்டம் இறங்கினர். திருவிழாவை முன்னிட்டு வெண்ணை காப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அங்காளம்மன், குண்டம் முடிந்ததும் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். கட்டுப்பாடுகள் காரணமாக குறைந்த அளவிலான பக்தர்களே பங்கேற்றனர்.