பதிவு செய்த நாள்
17
மார்
2021
04:03
மேட்டுப்பாளையம்: மீன்களுக்கு போதுமான ஆக்சிஜன் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், காரமடை அரங்கநாதர் கோவில் நிர்வாகம், தெப்பக்குளத்தில், தண்ணீரை பீச்சி அடித்து வருகிறது.
காரமடை தோலம்பாளையம் சாலையில் உள்ள தெப்பக்குளம், அரங்கநாதர் கோவிலுக்கு சொந்தமானது. இக்குளத்தைக் கருட தீர்த்தமாக பக்தர்கள் வழிபடுகின்றனர். இதில் குப்பையை போட்டு, தண்ணீரை மாசுபடுத்தாமல் இருக்க, குளத்தைச் சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. குளத்து நீர், ஓடுகிற நீராக இல்லாமல், பல ஆண்டுகளாக தேங்கிக் கிடக்கிறது. இதனால், பாசி பிடித்து, பச்சை நிறத்தில் உள்ளது. இந்நிலையில், குளத்தில் மின்மோட்டார் வாயிலாக, தண்ணீரை பீச்சி அடிக்கும் பணியை, கோவில் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் லோகநாதன் கூறியதாவது:அரங்கநாதர் கோவிலுக்குச் சொந்தமான தெப்பக்குளத்தில், தண்ணீர் பல ஆண்டுகளாக தேங்கி இருப்பதால், நீரின் அடர்த்தி கூடியுள்ளது. இதனால், மீன்களுக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைப்பதில், சிரமம் ஏற்படும். எனவே, தெப்பக்குளத்தில் மின் மோட்டார்கள் அமைத்து, அதன் வாயிலாக தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்படுகிறது. நீர் உயரமான இடத்தில் இருந்து விழுவதால், அதன் அடர்த்தியில் மாறுபாடு ஏற்படுவதோடு, மீன்களுக்கும் போதுமான ஆக்சிஜன் கிடைக்க வாய்ப்பு உருவாகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.