பதிவு செய்த நாள்
18
மார்
2021
05:03
மேட்டுப்பாளையம்: சிறுமுகையை அடுத்த காந்தவயல் மேலூரில், பகவதி அம்மன் மற்றும் மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு பூ குண்டம் திருவிழா நடந்தது.
இக்கோவிலில் குண்டம் விழா கடந்த, 8 ம் தேதி பூச்சாட்டு, 9 ம் தேதி கம்பம் நடுதலுடன் துவங்கியது. 12 ம் தேதி கிராம சாந்தி பூஜையும், 15 ஆம் தேதி குண்டத்திற்கு தேவையான, விறகுகளை எடுத்து வந்தனர். மாலை, 6:00 மணிக்கு அம்மன் சுவாமியை அழைத்து வந்தனர். பின்பு,16 ம் தேதி காலை பவானி ஆற்றில் இருந்து யானை வாகனத்தில், அம்மன் சுவாமியை அழைத்து வந்தனர். பின்பு குண்டத்திற்கு சிறப்பு பூஜை செய்தனர். அதை தொடர்ந்து, குஜ்ஜன், பால்ராஜ், சுந்திரன், மாதன், சிவா ஆகிய பூசாரிகளும், ஏராளமான பக்தர்களும் குண்டம் இறங்கினர். இதையடுத்து அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை செய்தனர். அதைத் தொடர்ந்து மா விளக்கு பூஜையும், பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர், ஊர் மக்கள், வனப்பூக்கள் நற்பணி மன்றத்தினர் ஆகியோர் செய்துள்ளனர்.