கைலாயத்தில் ஒருநாள் பார்வதிதேவிக்கு பிரணவ மந்திரத்தை உபதேசித்தார் சிவன். அப்போது தாயின் மடியில் இருந்த முருகனும் கேட்டு விட்டார். குருநாதரின் மூலமாகத் தெரிய வேண்டிய ரகசியத்தை, மறைமுகமாக கேட்ட முருகன் பாவத்திற்கு ஆளானார். இதற்கு பரிகாரமாக பூலோகத்தில் தவம் செய்தார். முருகப்பெருமானுக்கு பரம்பொருளான சிவன் காட்சியளித்த தலம் ‘பரங்குன்றம்’. இதுவே முருகனின் முதல் வீடான திருப்பரங்குன்றம். முருகனும், தெய்வானையும் மணக்கோலத்தில் இங்கு உள்ளனர். இந்த மலையில் கிழக்குப்பகுதி பெரிய பாறையாகவும், மேற்கில் சிவலிங்கம் போலவும், வடக்கில் கைலாயம் போலவும், தெற்கில் யானை படுத்திருப்பது போலவும் காட்சி தருகிறது. பவுர்ணமியன்று இந்த மலையைச் சுற்றி வந்து வழிபட்டால் விருப்பம் விரைவில் நிறைவேறும்.