ஒரு பட்டுப்புழு தன் வாயிலிருந்து நுாலை இழைத்து கூடு கட்டத் தொடங்கியது. சிலந்தி ஒன்று அதைக் கவனித்தது. பட்டுப்புழுவைப் பார்த்து பொறாமைப்பட்ட சிலந்தி தானும் வேகமாக வலை பின்னி கூடு கட்டியது. ‘‘ஏ பட்டுப்புழுவே... உனக்கு பின்னால் தான் எனக்கொரு வீடு கட்டத் தொடங்கி முடித்து விட்டேன். ஆனால் உன்னால் முடியவில்லையே’’ என தன்னைத் தானே புகழ்ந்து கொண்டது. பட்டுப்புழு அமைதியாக, ‘‘நண்பனே... பின்னால் திரும்பிப்பார்’’ என்றது. அங்கே ஒரு மனிதன் துடைப்பக்கட்டையால் சுத்தம் செய்தபடி நின்றிருந்தான். ‘‘ வேகத்தை விட விவேகமும் அவசியம். அதிவேகம் ஆபத்தில் முடியும் என்பது உனக்கு புரிந்திருக்குமே. என் பணி மெதுவானது தான். ஆனாலும் பெருமைக்குரியது. கூடு கட்டிய பிறகு அந்த நுாலை எடுத்து, பட்டு நெய்து பலரும் பிழைப்பு நடத்துகின்றனர். நான் கொல்லப்பட்டாலும் மனிதர்களுக்கு பயனுள்ளதை அளித்து விட்டு சாகிறேன். உலகில் பிறந்தவர்கள் என்றாவது ஒருநாள் சாகத்தான் வேண்டும். அதற்குள் மற்றவர்களுக்கு பயனுள்ளவர்களாக வாழ வேண்டும்’’ என்றது பட்டுப்புழு. சிறிது நேரத்தில் துடைப்பத்துடன் வந்த மனிதன் சிலந்தி வலையை கலைத்தான். தப்பித்தோம் பிழைத்தோம் என அங்கிருந்து சிலந்தி ஓடி ஒளிந்தது. யாரும் யாருக்கும் உயர்ந்தவரும் இல்லை. தாழ்ந்தவரும் இல்லை.