மகாபெரியவர் காஞ்சி மடத்தில் பட்டம் ஏற்ற போது அவருக்குப் பாடம் நடத்தும் பாக்கியம் பெற்றவர் கருங்குளம் கிருஷ்ண சாஸ்திரிகள். பெரிய பண்டிதரான அவர், கோமதி என்னும் பெண்ணுக்கு தாத்தா முறை. பேத்தி மீது அளவுக்கு அதிகமான பாசம். கோமதியின் திருமணத்துக்கு மகாபெரியவர் அனுக்கிரகம் செய்தார். மணமக்களுக்குத் தேவையான வேட்டி, புடவை உள்ளிட்ட மங்கலப் பொருட்களை மடத்தின் மூலம் அனுப்பினார். மடத்து சமையல் ஆட்களை அனுப்பி வைக்கவா என்றும் கேட்டார். சமையலுக்கு ஆள் ஏற்பாடு செய்திருப்பதாக சாஸ்திரிகள் தெரிவித்து விட்டார். திருமணம் எளிமையாக நடந்தது. கோமதியின் கணவர் பெயர் நாராயணன். தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு கோமதி கருவுற்றாள். ஆறுமாத கர்ப்பிணியான கோமதி, கணவர் நாராயணன், கருங்குளம் கிருஷ்ண சாஸ்திரிகள் மூவரும் காஞ்சி மடத்திற்கு வந்தனர். நல்ல முறையில் குழந்தை பிறக்க வேண்டும் என மகாபெரியவரின் ஆசியை வேண்டினர். இரண்டாவது குழந்தை ஆணாக இருக்க வேண்டும் என்றும், குழந்தைக்கு மகாபெரியவரின் பெயரை வைக்க விரும்புவதாகவும் தெரிவித்தனர். கருணை பொங்கப் பார்த்த சுவாமிகள், ‘‘ஏன் சாதனை செய்யும் பெண் பிறந்தால் உங்களுக்கு வேண்டாமா? பெண்ணுக்கும் என் பெயரை வைக்கலாமே?’’ எனச் சிரித்தபடி ஆசியளித்தார். நான்கு மாதம் கழித்து பெரியவர் ஊகப்படியே பெண் குழந்தை பிறந்தது. ‘பெண் பிறந்தாலும் என் பெயரை வைக்கலாமே என்று சொன்னாரே? என்ன பெயர் வைப்பது?’ என யோசனையில் ஆழ்ந்தார் நாராயணன். கருங்குளம் கிருஷ்ண சாஸ்திரிகள் ஒருவழி சொன்னார். மகாபெரியவரின் திருநாமம் ‘சந்திர சேகரேந்திர சரஸ்வதி’ என்பது. எனவே ‘சரஸ்வதி’ என பெயர் சூட்டினால் மகாபெரியவரின் பெயரை வைத்ததாகி விடும் என்றார். பிற்காலத்தில் சரஸ்வதி கடாட்சத்தோடு அந்தக் குழந்தை திகழ்ந்தது. இப்போது எண்பது வயதை அடைந்த அந்த குழந்தை ஆன்மிகச் சொற்பொழிவாளரான திருமதி சரஸ்வதி ராமநாதன். ‘மகாபெரியவரால் தான் வாழ்வு பெற்றேன்’ என இன்றும் அடிக்கடி சொல்லி மகிழ்கிறார்.