காஞ்சி மகாபெரியவரிடம் பக்தர் ஒருவர் சந்தேகம் கேட்டார். ‘‘சுவாமி! ‘காயமே இது பொய்யடா’ என்று சிலர் பாடல் பாடியுள்ளார்களே? மனித உடம்பு அவ்வளவு இழிவானதா? அதை அப்படியே பராமரிக்காமல் விட்டு விடலாமா?’’ மகாபெரியவர் சிரித்தபடி அதற்கு பதிலளித்தார். ‘‘யோசித்துப் பார்த்தால் இந்த உண்மை புரியும். உடம்பு ஒரு அற்புதமான கருவி. இந்தக் கருவியில் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு தினுசான பணியைச் செய்கிறது. கண்கள் பார்க்கின்றன. காதுகள் கேட்கின்றன. இரண்டும் அருகருகே இருந்தும் கண்ணால் கேட்க முடிவதில்லை. காதால் பார்க்க முடிவதில்லை. பக்கத்தில் தானே வாய் இருக்கிறது. அதற்குத்தான் சாப்பாட்டின் சுவை தெரிகிறது. பேசும் சக்தியும் அதற்கு மட்டுமே உண்டு. பொருட்களைப் பிடிப்பதற்கு ஏற்ற மாதிரி கையும், விரல்களும் உள்ளன. இந்த அமைப்பு கொஞ்சம் மாறினாலும் நம்மால் பணிகளைச் செய்ய முடியாமல் போகுமே! அடி மேல் அடி எடுத்து செல்வதற்கு வசதியாக காலின் அமைப்பு இருக்கிறது. நடக்கும் போது கூடிய மட்டும் புழு, பூச்சிகளின் மீது பட்டாலும் அவை தப்பிக்க வசதியாக உள்ளங்கால்களில் குழிவான ஏற்பாடு. காலை மடக்கி உட்கார வசதியாக முழங்கால் எலும்பு, நரம்புகளின் வடிவமைப்பு இருக்கிறது. இப்படி ஒவ்வொன்றைப் பார்த்தாலும் அன்னை பராசக்தி எத்தனை சூட்சுமமாக நம் உடம்பை படைத்திருக்கிறாள் என ஆச்சர்யம் தான் மிஞ்சும். உணவு ஜீரணமாக ஒரு அங்கம். ஜீரணித்ததை ரத்தமாக்க ஒரு அங்கம். மூச்சுவிட ஒன்று. ரத்தத்தை பம்ப் பண்ணி மேலேற்ற ஒன்று. எல்லாவற்றுக்கும் மேலே அனைத்தையும் கன்ட்ரோல் பண்ணும் மூளை என்றெல்லாம் விசித்திரமாக உடம்பு படைக்கப்பட்டுள்ளது. சதை, ரத்தம், நரம்பு, எலும்பு என்ற ஒவ்வொன்றுக்கும் ஒரு தேவை இருக்கிறது. எலும்புக்குள்ளே கூட மஜ்ஜை என்னும் ஜீவசத்து ஓடுவது ஒரு அதிசயம். உடம்பிலுள்ள கோடிக்கணக்கான செல்களில் ஒவ்வொன்றும் ஓர் அற்புதம். ஒவ்வொரு பாகமும் ஒன்றுக்கொன்று ஒத்தாசை செய்து காப்பாற்றிக் கொள்வது மகா அதிசயம். கடவுளால் வழங்கப்பட்டுள்ள இந்த உடம்பைக் கொண்டு தர்ம நெறியுடன் வாழ வேண்டும். ‘‘உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன் உடம்பினுக்குள்ளே உறுபொருள் கண்டேன் உடம்புளே உத்தமன் கோயில் கொண்டானென்று உடம்பினை யானிருந்து ஓம்புகின்றேனே’’ என திருமந்திரம் இதைச் சொல்கிறது. உடம்பை பாதுகாத்து தர்மநெறி தவறாமல் வாழ்பவர் இறுதியில் முக்தி நிலையை அடைவர்’’ என்றார். மனநிறைவுடன் பக்தர்கள் விடை பெற்றனர்.