மேட்டுப்பாளையம்: தமிழகத்தில் கொரோனா தொற்றால், ஊரடங்கு நடைமுறைப்படுத்தி விடுவார்களோ என்ற அச்சம் எழுந்ததை அடுத்து, நேற்று அமாவாசை முன்னிட்டு வனபத்திரகாளியம்மன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.
மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு, வாரநாட்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்களும், விடுமுறை நாட்களில் நூற்றுக்கணக்கான பக்தர்களும், அமாவாசை நாட்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களும், வருவது வழக்கம். தமிழகத்தில் கொரோனா தொற்று வெகுவாக பரவி வருவதை அடுத்து, தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில் கோவில்களுக்கு செல்ல தடை விதித்தால், கோவிலுக்கு சென்று சுவாமியை வழிபட முடியாத நிலை ஏற்படுமோ என்ற அச்சம் மக்களிடையே எழுந்தது. அதனால் நேற்று அமாவாசை முன்னிட்டு மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு, ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். கோவில் ஊழியர்கள், பக்தர்கள் அனைவருக்கும், கிருமிநாசினி மருந்து கையில் தெளித்தனர். பின்பு கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் அனைவரையும் சமூக இடைவெளிவிட்டு நிற்கும்படி கூறினர்.