பதிவு செய்த நாள்
12
ஏப்
2021
01:04
திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலில், கொரோனா தொற்று பரவல் காரணமாக, மூலவருக்கு நடத்தப்படும் கட்டண அபிஷேகம், மீண்டும் நிறுத்தப்பட்டது.
கொரோனா தொற்று காரணமாக, கடந்தாண்டு மார்ச், 20ம் தேதி முதல், ஆக., 31ம் தேதி வரை, திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் தரிசனம் மற்றும் பக்தர்களின் கட்டண அபிஷேகம் நிறுத்தப்பட்டது. ஆனால், கோவில் நிர்வாகம் சார்பில் அதிகாலை, 5:00 மணி, மாலை, 5:00 மணி ஆகிய இரு வேளை பூஜைகள் போன்ற நித்ய பூஜைகள் நடத்தப்பட்டு வந்தன.கடந்தாண்டு செப்., 1ம் தேதி, தமிழக அரசின் வழிகாட்டுதலின் படி, கோவில் நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.ஆனால், மூலவருக்கு செய்யப்படும் கட்டண அபிஷேகம் மட்டும் தொடர்ந்து நிறுத்தப்பட்டிருந்தது. கடந்த பிப்., 25ம் தேதி முதல், பக்தர்கள் வேண்டுகோளை ஏற்று கட்டண தரிசனத்திற்கு, கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கியது.தொடர்ந்து, பக்தர்கள் ஆன்லைன் மற்றும் மலைக்கோவில் அலுவலகத்திற்கு நேரில் வந்து, முன்பதிவு செய்து, கட்டண அபிஷேகத்தில் பங்கேற்று வந்தனர்.இந்நிலையில், தற்போது கொரோனா பரவல் இரண்டாவது அலை துவங்கியுள்ள நிலையில், கோவில் திருவிழாக்கள் மற்றும் பக்தர்கள் அதிகளவில் பங்கேற்கும் சிறப்பு பூஜைகளுக்கு அரசு தடை விதித்தது.இதையடுத்து, திருத்தணி முருகன் கோவிலில், நேற்று முன்தினம் முதல், மூலவருக்கு நடத்தப்படும் கட்டண அபிஷேகம் காலசந்தி, உச்சிகாலம் மற்றும் சாய்ரட்சை ஆகியவை நிறுத்தப்பட்டுள்ளன.இதற்கு மாறாக, கோவில் நிர்வாகம் சார்பில், தினசரி அதிகாலை, 5:00 மணி மற்றும் மாலை, 5:00 மணி ஆகிய நேரத்தில், மூலவருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடத்தப்படுகின்றன.