சிவகங்கை : தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள கோயில்களில் சிறப்பு அபிேஷக, ஆராதனைகள் நடந்தது.
கொரோனா ஊரடங்கு விதிகளை பின்பற்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.சிவகங்கை: காசி விஸ்வநாத சுவாமி கோயில், கவுரி விநாயகர் கோயில், மதுரை முக்கு காளியம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். வீடுகளில் பஞ்சாங்கம் வைத்தும், சித்திரை விசுவை முன்னிட்டு சுவாமிக்கு பழங்கள் படையலிட்டு தரிசனம் செய்தனர்.சிங்கம்புணரி: சேவுகப்பெருமாள் அய்யனாருக்கு பால் அபிேஷகம் நடந்தது. சித்தர் முத்துவடுகநாதர் கோயிலில் தங்கக் கவசத்தில் சுவாமி எழுந்தருளினார். ஐயப்பன் கோயிலில் சுவாமிக்கு படி பூஜை செய்தனர்.
ஐயப்பன் கனி அலங்காரத்தில் காட்சி அளித்தார். வேட்டையன்பட்டி காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோயிலில் அம்மனுக்கு பழங்களால் அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடு நடத்தினர். உரிய கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.திருப்புத்துார்: திருத்தளிநாதர் கோயிலில் உள்ள சுப்பிரமணியருக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்தி செலுத்தினர். அதை தொடர்ந்து காலை 7:00 மணிக்கு கோட்டை கருப்பண்ண சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. இங்கிருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து திருத்தளிநாதர் கோயிலை அடைந்தனர். சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி கவசத்தில் எழுந்தருளினார்.