‘‘ஆண்டவரே! எனக்கு பாவ மன்னிப்பு கொடும். அப்படி பெரிதாக ஒன்றும் தப்பு செய்யவில்லை. ஏதோ ஒரு கையெழுத்து போட இரண்டாயிரம் ரூபாய் கேட்டேன். அந்தப் பாவி ஆயிரம் தான் கொடுத்தான். அதுவும் எனக்காகவா வாங்கினேன்? என் மகள் பிறந்த நாள் கொண்டாட கேக் வேண்டுமென அடம் பிடித்தாள். அவளுக்காக கை நீட்டி விட்டேன். இருந்தாலும், எனக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்த அந்த நபருக்கு வேறு வகையில் பணத்தைத் திருப்பிக் கொடும்’’ என்று ஒரு மனிதன் ஜெபம் செய்தால் ஆண்டவர் என்ன நினைப்பார்? ‘‘நரம்பில்லாத நாக்கு கொண்டவனே! தப்பு செய்ததையும் ஒப்புக் கொண்டு, அதற்கு நியாயம் கற்பிக்கிறாயா... உன்னால் துன்பத்திற்கு ஆளானவருக்கு சிபாரிசு வேறு செய்கிறாயா?’’ என்று தானே சொல்வார். வெறுங்கண்ணால் பார்த்தால் காற்றில் உள்ள துாசி தெரியாது. அதே நேரம் ஜன்னல் வழியாக சூரிய ஒளி அறைக்குள் புகுந்தால் அதன் வெளிச்சத்தில் துாசி மிதப்பது தெரியும். அதுபோல மனசாட்சியை மதிப்பவனுக்குத் தான் தவறு செய்ததை எண்ணி வருந்துவான். ‘‘இந்த தவறை மீண்டும் செய்ய மாட்டேன். என்னால் பாதிப்பு அடைந்தவரிடம் சென்று மன்னிப்பு கேட்பேன். அவனுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்வேன்’’ எனக் கண்ணீர் விட்டு கதறினால் மன்னிப்பு கிடைக்கும்.