பதிவு செய்த நாள்
16
ஏப்
2021
12:04
திருவண்ணாமலை: ஆதிசேஷன் சிலை செய்ய, 230 டன் எடையுள்ள பாறை, 138 டயர்கள் கொண்ட ராட்சத லாரி மூலம் எடுத்து செல்லும் பணி துவங்கியது.
கர்நாடக மாநிலம், பெங்களூரு தெற்கு ஈஜிபுரா, கோதண்டராம சுவாமி கோவிலில், 64 அடி உயரம், 11 முகங்கள், 22 கைகள் கொண்ட, விஸ்வரூப கோதண்டராம சுவாமி சிலை மற்றும் பீடத்துடன் சேர்த்து, 108 அடி உயரத்தில், ஆதிசேஷன் சிலை அமைக்க, கோவில் நிர்வாகிகள் முடிவு செய்தனர்.
இதற்கான பாறை, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த கொரக்கோட்டை மலையில், அடையாளம் காணப்பட்டது. மத்திய, மாநில அரசிடம், கோவில் அறக்கட்டளை சார்பில் அனுமதி பெறப்பட்டு, பாறை வெட்டி எடுக்கப்பட்டது. முதல் கட்டமாக, சுவாமி சிலை செய்ய, 64 அடி நீளம், 26 அடி அகலம், 7 அடி பருமனுடன், 380 டன் எடையுள்ள பாறை, 2018ல், 240 டயர்கள் கொண்ட ராட்சத லாரியில், பெங்களூரு எடுத்து செல்லப்பட்டது. தொடர்ந்து, ஆதிசேஷன் சிலை செய்ய, 24 அடி நீளம், 30 அடி அகலம், 12 அடி பருமனுடன், 230 டன் எடையுள்ள பாறையை எடுத்துச் செல்லும் பணி, நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு துவங்கியது. 138 டயர்கள் கொண்ட கன்டெய்னர் லாரியில், பாறை ஏற்றப்பட்டது. பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்து, லாரியை வழியனுப்பி வைத்தனர்.வந்தவாசி, வேலுார், கிருஷ்ணகிரி வழியாக, லாரி பெங்களூரு செல்ல உள்ளது. தினசரி, 40 கி.மீ., துாரம் வீதம், 10 நாட்களில், பெங்களூரு செல்ல, கோவில் நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர்.