பெரம்பலுார்: பெரம்பலுார் அருகே, முயல் வேட்டை எனும் வினோத வழிபாடு திருவிழா நேற்று வெகு விமர்சையாக நடந்தது.
ஆண்டு தோறும் சித்திரை மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை முயல் வேட்டை திருவிழா எனும் வினோத வழிபாடு திருவிழா நடப்பது வழக்கம். இதன்படி, பெரம்பலுார் மாவட்டம், துறைமங்கலம் கிராமத்தில் முயல் வேட்டை திருவிழா நேற்று வெகு விமர்சையாக நடந்தது. திருவிழாவையொட்டி குறைந்தது வீட்டுக்கு ஒருவர் வீதம் முயல் வேட்டைக்கு செல்வதற்காக கிராமத்தில் மாரியம்மன் கோவில் முன் நேற்று காலை 7 மணி அளவில் ஆண்கள் மட்டும் கூடினர். பின்னர், அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அப்போது கோவில் பூசாரி சாமியாடி வேட்டைக்கு செல்லும் திசை மற்றும் வேட்டையின் போது கிடைக்கும் முயல்களின் எண்ணிக்கை ஆகியவை குறித்து குறி சொல்லப்பட்டது. இதைத்தொடர்ந்து, சிறுவர்கள், பெரியவர்கள், வாலிபர்கள் என 50க்கும் மேற்பட்டோர் குத்தீட்டி, உருட்டுக்கட்டை, வேட்டை நாய் ஆகியவற்றுடன் முயல் வேட்டைக்கு கிளம்பினர்.
மாலை 6 மணி வரை முயல் வேட்டையில் ஈடுபட்டு வேட்டையாடிய முயல்களுடன் குறிப்பிட்ட பகுதியில் மாலையில் கூடினர். வேட்டைக்கு சென்றவர்களின் குடும்பத்தில் உள்ள பெண்கள் அவர்களுக்கு உணவு மற்றும் புத்தாடை எடுத்துக்கொண்டு அப்பகுதிக்கு சென்றனர். வேட்டைக்கு சென்ற அனைவரும் குளித்து புத்தாடை அணிந்து வேட்டையாடிய முயல்களை இரவு 7:30 மணி அளவில் குச்சிகளில் தோரணம் போல் தொங்கவிட்டு மேல தாளங்களுடன் ஆடிப்பாடி ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். வேட்டையில் கிடைத்த முயல்கள் மற்றும் ஆடு ஆகியவை சாமிக்கு பலி கொடுக்கப்பட்டு படையல் செய்யப்பட்டது. முயல் மற்றும் ஆடு கறி பங்கு பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குடும்பத்துக்கும் வழங்கப்பட்டது. இதனை சமைத்து வீட்டிலும் சாமிக்கு படையல் இட்டு பூஜை செய்து துறைமங்கலம் கிராம பொதுமக்கள் சாப்பிட்டு மகிழ்ந்தனர்.