பதிவு செய்த நாள்
20
ஏப்
2021
02:04
சிவகங்கை : உலகப்பாரம்பரிய தினத்தில் புராதன சின்னங்களை முழுமையாக பாதுகாக்க முன் வர வேண்டும்.
பல்வேறுபட்ட பண்பாடுகள், நினைவுச்சின்னங்கள், வழிபாட்டு இடங்கள், இயற்கை அமைப்பு, தொல்லியல் தளங்கள், என பன்முகத்தன்மை கொண்ட சிறிய உலகமாக இந்தியா திகழ்கிறது.ஒவ்வொரு இனத்துக்குமான வளமான பாரம்பரியம், வரலாறு இருக்கும். இளைய தலைமுறையினர் அதனை அறிந்து கொள்ளவும், போற்றி பாதுகாக்கும் மனப்பான்மையை உருவாக்கவும் ஒவ்வொரு ஆண்டும் பாராம்பரிய தினம்கடைப்பிடிக்கப்படுகிறது.
உலக பாரம்பரிய தினம் குறித்து ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவர் ராஜகுரு தெரிவித்ததாவது: சிவகங்கை மாவட்டத்தில் பாண்டியர்கள் காலத்திற்கு ஆதாரமாக பல கோயில்கள் உள்ளன. திருமலையில் கி.பி.8ம் நுாற்றாண்டை சேர்ந்த குடவரைக்கோயிலும், கி.பி., 13 ம் நுாற்றாண்டு கட்டுமான கோயில்கள் உள்ளன.இங்குள்ள குடவரையில் சிவனும் பார்வதியும் அமர்ந்த நிலையில் உள்ளனர். குன்றக்குடியில் ஒரே இடத்தில் முற்காலப்பாண்டியர்களால் அமைக்கப்பட்ட சிவனுக்கான 3 குடைவரைக்கோயில்கள் உள்ளன.
இங்கு சண்டீஸ்வரர், கருட அனுக்கிரஹமூர்த்தி, லிங்கோத்பவர், ஹரிஹரர், துர்க்கை, நடராஜர், முருகன், விநாயகர், துவாரகபாலகர்கள் சிற்பங்கள் காணப்படுகின்றன.இங்கு சோழர், பாண்டியர்கள் காலத்து கல்வெட்டுக்கள் உள்ளன. முழுவதும் கற்களால் கட்டப்பட்ட முற்காலப்பாண்டியர்களால் காலத்து கோயில் திருப்புத்துாரில் உள்ளது. இங்கு 80 க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் உள்ளன. ஒரு கல்வெட்டில் இக்கோயில் திருக்கற்றளி எனப்படுகிறது.
திருக்கோளக்குடியில் ஒரு குடைவரைக்கோயில், இரு கட்டுமான கோயில்கள் என, சிவனுக்கு 3 கோயில்கள் உள்ளன. முருகனுக்கும் ஒரு கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் அகத்தியர், புலத்தியர் ஆகிய சித்தர்களின் சிற்பங்கள் உள்ளன. வலம்புரி விநாயகருக்கு தனி கோயில் உள்ளது.திருக்காலக்குடி என அழைக்கப்படும் இங்கு திருமலை சேதுபதி மன்னர் காலத்தைச்சேர்ந்த நிலத்தை அளக்கும் கோல் அளவும் உள்ளது. பூலாங்குறிச்சியில் உள்ள களப்பிரர் காலத்தை சேர்ந்த கல்வெட்டில் தான் தேவகுலம் எனப்படும், கோயில்களுக்கு வழங்கப்பட்ட கொடை பற்றியும், பிரம்மதாயம், மங்கலம் போன்ற பிராமணர்களுக்கு வழங்கப்பட்ட தானம் பற்றியும் முதன் முதலில் குறிப்பிடப்படுகிறது. மாறஞ்சடையன் உள்ளிட்ட பெரும்பான்மை பாண்டியர்கள் காலத்து கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இது போன்ற பாரம்பரிய சின்னங்களை பாதுகாக்க முன் வர வேண்டும். இதற்காகவே உலகப்பாரம்பரிய தினம் கடைப்பிடிக்கப்படுகிறது, என்றார்.