பதிவு செய்த நாள்
22
ஏப்
2021
03:04
கோவை : பெருமாள் கோவில்களில், நேற்று ஸ்ரீ ராமநவமி விழா கொண்டாடப்பட்டது.
பெரியகடைவீதி லட்சுமி நாராயண வேணுகோபால சுவாமி கோவிலில், அதிகாலை சுவாமிக்கும் தாயாருக்கும் சகலவித திரவியங்களில், ஸ்நபன திருமஞ்சனம் செய்யப்பட்டது. பட்டாடை அணிவிக்கப்பட்டு பெருமாள் சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு காட்சியளித்தார்.கோவில் வளாகத்திலுள்ள ராமர் சன்னதி, மாவிலை தோரணங்கள் மற்றும் வாழைகன்றுகளால் அழகுபடுத்தப்பட்டிருந்தது. உற்சவர் ராமர், லட்சுமணர் சீதா சமேதர ராக ஆஞ்சநேயர் சகிதமாக எழுந்தருளுவிக்கப்பட்டிருந்தார்.நாமசங்கீர்த்தன குழுவினர், ஸ்ரீ ராமசந்திர மூர்த்தி கீர்த்தனைகளை பாடினர். பக்தர்கள் கோரசாக கீர்த்தனைகளை தொடர்ந்து பாடினர்.சலிவன்வீதி வேணுகோபால சுவாமி கோவில், உப்பார வீதியிலுள்ள கல்யாணவெங்கட்ரமணசுவாமி கோவில், உக்கடம் லட்சுமிநரசிம்ம பெருமாள் கோவில், சிங்காநல்லுார் உலகளந்த பெருமாள் கோவில், ராமர்கோவில் கோதண்டராமர் கோவில், ராமநாதபுரம் நரசிங்கபெருமாள் கோவில்களிலும், நேற்று ஸ்ரீ ராமநவமி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.