பதிவு செய்த நாள்
22
ஏப்
2021
04:04
பு.புளியம்பட்டி: ராமநவமியை முன்னிட்டு, புன்செய்புளியம்பட்டி கரிவரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. புன்செய்புளியம்பட்டி, கரிவரதராஜ பெருமாள், வேணுகோபால சுவாமி கோவில்களில் ராமநவமி சிறப்பு வழிபாடு நேற்று காலை சுப்ரபாதத்துடன் துவங்கியது. மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம், திருவாதனம் நடந்தது. பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை, வேணுகோபால சுவாமிகள், பாமா, ருக்குமணியுடன் வெள்ளிகாப்பு அலங்காரமும் செய்யப்பட்டு இருந்தது. தொடர்ந்து உற்சவருக்கு பலவித வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டன. திருவாதன சிறப்பு பூஜையில் பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர், ராமர், லட்சுமணன், சீதை உற்சவர், ஹனுமன் வாகனத்தில் உட்பிரகாரத்தில் எழுந்தருளினர். கோவில் உலா நடந்தது.
* ஈரோடு, கருங்கல்பாளையம் விஸ்வரூப ஷீரடி சாய்பாபா கோவிலில் ராமநவமி விழா, மத நல்லிணக்க விழாவாக கொண்டாடப்பட்டது. காலை சந்தன கூடு (உரூஸ்) ஊர்வலம், தொடர்ந்து, உற்சவருக்கு சந்தன அபி ?ஷகம், சந்தனகாப்பு அலங்காரம், தீபாராதனை ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. இந்நிகழ்ச்சியில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தம் வகையில், 50 முஸ்லிம் குடும்பத்தினர் அழைக்கப்பட்டு, அவர்களுக்கு அரிசி, ரம்ஜான் நோன்பு கஞ்சி வைப்பதற்கான உணவு பொருட்கள் வழங்கப்பட்டன. ராமநாம மகிமைகள் குறித்து, சாய்சிவநேசனின் சொற்பொழிவு நடந்தது.
* பவானி அக்ரஹராத்தில் உள்ள பழமைவாய்ந்த பட்டாபி ராமச்சந்திர சுவாமி கோவிலில், ராம நவமியை முன்னிட்டு கல்யாண உற்சவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதே போல் அந்தியூர், அம்மாபேட்டை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள கிருஷ்ணர், ராமர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.