பதிவு செய்த நாள்
23
ஏப்
2021
12:04
மங்களுரு: கர்நாடகாவில், சிரூர் மடத்தின் தலைமை ஜீயராக, அனிருத்தா சரளத்தையா சுவாமி, 16, தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடகாவில், முதல்வர் எடியூரப்பா தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள உடுப்பி மாவட்டத்தில், ஸ்ரீ மாதவாச்சாரியார், 13ம் நுாற்றாண்டில் கட்டிய புகழ் பெற்ற கிருஷ்ணன் கோவிலும், எட்டு மடங்களும் உள்ளன. அவற்றுள், சிரூரில் உள்ள, த்வந்த மடமும் ஒன்று. இம்மடத்தின் ஜீயர் லட்சுமிவரா தீர்த்தா, 2018ல் சமாதி அடைந்தார். இதையடுத்து, அனிருத்தா சரளத்தையா என்ற, 10ம் வகுப்பு பயிலும், 16 வயது மாணவர், சிரூர் மடத்தின் புதிய ஜீயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதற்கான விழாவில், சோடி மடத்தின் ஜீயர், விஷ்வவல்லப தீர்த்தா செய்தியாளர்களிடம் பேசியதாவது:அனிருத்தா சரளத்தையாவுக்கு பிறவியிலேயே ஆன்மிகத்தில் நாட்டம் உள்ளது. அவர் விருப்பத்தை ஏற்று, பெற்றோர், வேத பாடங்களை கற்றுக் கொடுத்துள்ளனர். மடங்களில் பின்பற்றப்படும், சடங்குகள், சம்பிரதாயங்களை நன்கு அறிந்த அவர், சிரூர் மடாதிபதியாக விரும்புவதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.அவர்கள், மகன் ஜாதகத்தை, ஜோசியரிடம் காட்டியுள்ளனர். அதில், அவருக்கு ஆன்மிக அருள் உள்ளது புலப்பட்டது. பெற்றோர் என்னை அணுகி இந்த விபரங்களை தெரிவித்தனர். நான், அனிருத்தாவின் ஆன்மிக ஞானம், அறிவாற்றல், ஜாதகம் உள்ளிட்ட அனைத்தையும் ஆராய்ந்து, மடத்தின் தலைமை ஜீயராக பொறுப்பேற்க தகுதியானவர் என்ற முடிவிற்கு வந்தேன். வரும், மே, 11 - 14 வரை, அனிருத்தா சரளத்தையாவுக்கு, சன்னியாச தீக் ஷை வழங்கும் நிகழ்ச்சி நடக்கும். இறுதி நாளன்று, மடத்தின் ஜீயராக அவர் பொறுப்பேற்பார். இவ்வாறு அவர் பேசினார்.