பதிவு செய்த நாள்
29
ஏப்
2021
04:04
சென்னை:சிவகங்கை மாவட்டம், கீழடிக்கு அருகில் உள்ள கொந்தகையில் கிடைத்துள்ள ஈமத் தாழிகளுக்குள், ஒரே மாதிரியான குறியீடுள்ள கலையங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தமிழக தொல்லியல் துறை சார்பில், சிவகங்கை மாவட்டம், கீழடியில், அகழாய்வுப் பணிகள் நடக்கின்றன. கீழடி, சங்க கால மனிதர்களின் வாழ்விடப் பகுதியாக இருந்ததற்கான பல்வேறு சான்றுகள் கிடைத்து வருகின்றன.இந்நிலையில், அங்கு வாழ்ந்த மக்களின் ஈமக் காரியங்கள், அந்த ஊருக்கு அருகில் உள்ள கொந்தகையில் நடந்துள்ளதற்கான ஆதாரங்கள், தற்போது கிடைத்துள்ளன.
அகழாய்வுகள்: இதுகுறித்து, கீழடி தொல்லியல் அகழாய்வுப் பிரிவு இயக்குனர் சிவானந்தம் கூறியதாவது: கீழடி அகழாய்வு, சங்க கால தமிழர்களின் வாழ்வியல் முறைகளை அறியும் சான்றுகளை தருகிறது.அதைச் சுற்றியுள்ள இடங்களில் அகழாய்வு செய்யும்போது, ஒருங்கிணைந்த மக்களின் கலாசாரம் பற்றிய புரிதல் ஏற்படும் என்பதற்காக, கொந்தகை உள்ளிட்ட இடங்களில் அகழாய்வுகள் செய்யப்படுகின்றன.
கொந்தகையில், கடந்தாண்டும் அகழாய்வு செய்யப்பட்டது. அங்கு, பல்வேறு விதமான தாழிகள், எலும்புக் கூடுகள் கிடைத்தன. இந்தாண்டு இதுவரை, முதுமக்கள் தாழிகள் எனப்படும், இறந்த மனிதர்களை வைத்து புதைக்கும் மிகப்பெரிய நான்கு மண்பாண்டங்கள் கிடைத்துள்ளன. ஆய்வுகள்பெரிய தாழிகளுக்குள், அவர்களுக்கான சடங்குப் பொருட்களை, கலையங்கள் எனப்படும் சிறிய பானைகளில் வைத்துப் புதைப்பர். அவ்வாறான இரண்டு தாழிகளில் உள்ள, மூன்று கலையங்களில், ஒரே மாதிரியான குறியீடுகள் உள்ளன. அதாவது, குறியீடுகள் எனும் கீறல்கள் தான், எழுத்துக்கள் கண்டறியும் முன் மனிதன் பயன்படுத்திய அடையாளங்கள்.இந்த குறியீடுகள், ஒரே இனக்குழு மனிதர்கள் அல்லது ஒரே குடும்ப மனிதர்களுக்கானதாக இருக்க வாய்ப்புள்ளது. இது குறித்த ஆய்வுகள் நடைபெறுகின்றன.இவ்வாறு, அவர் கூறினார்.