பதிவு செய்த நாள்
29
ஏப்
2021
04:04
சென்னை: கோவில்களின் உண்டியல் திறப்பு நிகழ்வில், பணியாளர்கள், பொதுமக்கள் சேர்த்து, 20 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என, அறநிலைய துறை கமிஷனர் ராஜாமணி உத்தரவிட்டுள்ளார்.
கோவில் நிர்வாகத்தினருக்கு, அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நோக்கில், பக்தர்கள் நலன் கருதி, கோவில் நிர்வாகத்தால் எடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை, தவறாது கடைப்பிடிக்க வேண்டும்.கோவில் உண்டியல்கள் திறப்பில், பணியாளர்கள், பொதுமக்கள் சேர்த்து, 20 பேருக்கு மேல் பங்கேற்கக் கூடாது. இவர்களால் எவ்வளவு உண்டியல்களை திறந்து, கணக்கிட முடியும் என்பதை கணக்கிட்டு, அதற்கேற்ற வகையில் பல்வேறு நாட்களில், பல்வேறு கட்டங்களாக, உண்டியல் திறப்புக்கு அனுமதி பெற வேண்டும். உண்டியல் திறப்பு நிகழ்வில், ஆரம்பம் முதல் இறுதி வரை கண்காணிப்பு கேமரா வாயிலாக பதிவு செய்ய வேண்டும். அதன் வெளிப்படை தன்மையை உறுதி செய்ய, தனித்திரையில் ஒளிபரப்பு செய்ய வேண்டும். இந்த நிகழ்வில், 50 வயதிற்கு உட்பட்ட நபர்கள் மட்டும் பங்கேற்க வேண்டும். பங்கேற்கும் நபர்களுக்கு பரிசோதனை கட்டாயம். பங்கேற்பாளர்கள் முக கவசம், கையுறை, தொற்று நீக்கிகள், தனிநபர் இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.