சித்ரகுப்தர் விரதம் குறித்த புராணக் கதை ஒன்று வழங்கப்படுகிறது. இதற்கு நயினார் நோன்பு என்றும் பெயருண்டு. முக்திபுரி என்ற ஊரில் கலாவதி என்ற பெண் வாழ்ந்தாள். ஒரு நாள் அவள் தோழியரோடு வனத்தின் அழகைக் காணச் சென்றாள். காட்டிள்ள கோயிலில் தேவ கன்னியர் பூஜை செய்து கொண்டிருந்தனர். ஆச்சரியம் அடைந்த கலாவதி வெளியில் காத்திருந்தாள். பூஜை முடிந்து வந்த போது, “தேவ கன்னியரான நீங்கள் யாரை வழிபட்டீர்கள்?” என்று கலாவதி கேட்டாள். அதற்கு,“பெண்ணே! இன்று சித்ரா பவுர்ணமி. சித்திர குப்தர் அவதரித்த நன்னாள். அவரை வழிபட்டால் செல்வம் கொழிக்கும்; நல்ல குடும்ப வாழ்வு அமையும். எண்ணிய செயலில் வெற்றி உண்டாகும்,” என்றனர். அதன்பின், கலாவதியும் சித்ராபவுர்ணமி நோன்பைக் கடைப்பிடித்தாள். அதன் பலனாக ஆகமபுரியின் அரசர் வீரசேனனின் மனைவியாகும் பாக்கியம் பெற்றாள். தன் நாட்டு மக்களிடமும் இதன் மகிமையைச் சொல்லி விரதமிருக்கச் செய்தாள்.