பிறர் துன்புறுத்தும் போதும் அவற்றை அமைதியாக சகித்துக் கொள்வதே சாந்தம். அப்படிப்பட்ட குணத்திற்கு இலக்கணமாக திகழ்ந்தவர் யோசேப்பு. பொறாமை கொண்ட அவரது சகோதரர்கள் அவரை துன்புறுத்தி குழிக்குள் தள்ளினர். எகிப்து நாட்டுக்கு சென்று கொண்டிருந்த வியாபாரிகளிடம் அவரை அடிமையாக விற்கவும் செய்தனர். எனினும் தனக்கு தீமை செய்த சகோதரர்கள் மீது அவருக்கு கோபம் வரவில்லை. மாறாக அன்பு பெருகியது. அப்போதும் அமைதியுடன் இருந்தார்.யோசேப்பு. அவரின் நற்பண்புகளாலும், விட்டுக் கொடுக்கும் குணத்தாலும், கடின உழைப்பாலும் ஆண்டவரின் அருளைப் பெற்றார். எகிப்து நாட்டிற்கே அதிபராக உயர்ந்தார். அப்போது பஞ்சம் நிலவியதால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனர். சகோதரர்கள் பிழைக்க வழியின்றி எகிப்தின் அதிபராகிய யோசேப்பின் உதவியை நாடி வந்தனர். நடந்ததை எல்லாம் நினைத்து வருந்திய அவர்கள், ‘‘நாங்கள் உமக்கு அடிமை’’ எனப் பணிந்தனர். ‘‘சகோதரர்களே பயப்படாதிருங்கள், நான் உங்களையும், உங்கள் குழந்தைகளையும் பராமரிப்பேன். கவலைப்படாதீர்கள்’’ என யோசேப்பு ஆறுதல் அளித்தார். அமைதியும், பெருந்தன்மையும் கொண்ட யோசேப்பு ஆண்டவரின் கருணைக்கு பாத்திரமானார். நாமும் அவரைப் போல வீட்டிலும், பணி செய்யும் இடத்திலும் சாந்த குணத்தை வெளிப்படுத்தி மற்றவருக்கு விட்டுக் கொடுத்து மகிழ்வோம்.