பதிவு செய்த நாள்
07
மே
2021
05:05
சாத்துார்: சாத்தூர் சிவன் கோவில் சுமார் 600 ஆண்டுகள் பழமையான கோவிலாகும்.இக் கோவிலை சுற்றி நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.இப்பகுதியில் 10 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கோவில் சுற்றிலும் பேவர் ப்ளாக், மற்றும் சிமிண்ட் ரோடு அமைத்துள்ளார். ஆனால் போதுமான தெருவிளக்கு வசதியில்லாததால் இரவு நேரத்தில் இப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. குடிநீர் வினியோகம் செய்யப்படாத நாட்களில் சிவன் கோவில் தெருவில் அடிகுழாய் தண்ணீரை குடிக்க மற்றும் பாத்திரம் கழுவ, குளிக்க என மக்கள் புழக்கத்திற்கு பயன்படுத்தி வந்தனர். தற்போது இதில் மினரல் வாட்டர் பிளாண்ட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மினரல் வாட்டர் பிளாண்ட்டும் 2 வருடமாக செயல்படாத நிலையில் உள்ளது. இது செயல்பாட்டிற்கு வராத நிலையில் இங்கு மீண்டும் அடிகுழாய் போட்டுத்தர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். பழமையான சிவன் கோவிலின் சுற்றுப் பிரகாரம் மற்றும் சிற்பங்கள் பராமரிப்பில்லாமல் உள்ளது. கோவில் தெப்பத்தின் சுற்றுச் சுவர்களில் அரசமரம் மற்றும் செடிகள் முளைத்து சுவரை சேதப்படுத்தி வருகின்றது. இவற்றை அகற்றி தெப்பத்தின் சுவர்களை பராமரிக்க வேண்டும். இத் தெரு அருகில் காய்கனி மார்க்கெட் உள்ளது. அங்கு சிறுநீர் கழிக்க கூட சுகாதாரவசதி இல்லாததால் காய்கறி மார்க்கெட்டிற்கு வரும் பொதுமக்கள் தெப்பத்தை திறந்தவெளி சிறுநீர் கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். இதனால் சுகாதாரகேடு ஏற்படுகிறது.
கும்பாபிஷேகம் செய்ய வேண்டும்: சாத்துார் சிதம்பரேஸ்வரர் சிவகாமி உடனுறை கோவில் மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டது. ஆகம விதிப்படி 12 ஆண்டுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்திட வேண்டும். கும்பாபிஷேகம் நடந்து 16 ஆண்டுகளாகிறது . பக்தர்கள் மனம் குளிர கும்பாபிஷேகம் நடத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். – சந்திரன், சிவபக்தர் சாத்தூர்.
தெப்பத்திருவிழா நடத்த வேண்டும்: சிவன் கோவில் தெப்பத்தில் கார்த்திகை மாதம் தெப்பத்திருவிழா நடைபெறும். பல ஆண்டுகளாக திருவிழா நடைபெறவில்லை. எம்.எல்.ஏ., ராஜவர்மன் முக்கு ராந்தலில் இருந்து தெப்பத்திற்கு தண்ணீர் வர கால்வாய் அமைத்துள்ளார். இதனை மேலும் விரிவுபடுத்தி தெப்பத்தில் தண்ணீர் தேக்கி திருவிழா நடத்திட வேண்டும். தெப்பத்தின் சுற்றுப்பகுதியை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும். – கார்த்திகேயன், ஓட்டல் உரிமையாளர்.
கட்டுமான பொருட்களால் சேதம்: சிவன் கோவிலை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் கட்டுமான பணி நடக்கும் போது அதன் கழிவுகளையும், கட்டுமான பொருட்களையும் கோவிலின் சுற்று சுவரில் குவித்து வைப்பதால் கோவில் சுவர் பாதிக்கப்படுகிறது. இங்கு கட்டுமான பொருள், கழிவு பொருட்களை வைக்க கோவில் நிர்வாகம் தடை செய்ய வேண்டும். வேண்டும். – ஆனந்த், தனியார் நிறுவன ஊழியர்.
நடவடிக்கை எடுக்கப்படும்: சாத்துார் சிதம்பரேஸ்வரர் கோவில், சோமசுந்தரவிநாயகர்கோவில் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக தொல்பொருள் துறையிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. தொல்பொருள் துறையினர்தான் தெப்பம், கோவில் சேதமடைந்த பகுதியை சீரமைப்பது தொடர்பான வழிமுறைகளையும் அனுமதியும் தரும் . இதற்காக அத்துறைக்கு கடிதம் அனுப்பபட்டுள்ளது. கும்பாபிஷேகத்திற்கான அனுமதிகளை அரசிடம் பெற்று விரைவில் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. – தலைட்சுமி, கோவில் செயல் அலுவலர், இந்து சமய அறநிலையத்துறை சாத்துார்.
நடவடிக்கை எடுக்கப்படும்: சிவன் கோவில் தெருவில் விளக்குகள் எரியவில்லை என புகார் ஏதும் வரவில்லை . தற்போது தட்டுப்பாடு இல்லாமல் சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. – ராஜமாணிக்கம், கமிஷ்னர், சாத்துார் நகராட்சி