அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டைக்கு அருகில் உள்ளது புலியூரான் கிராமம். இங்கு ஒரு பழைய கால சிற்பம் இருப்பதாக கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அந்த சிற்பத்தை பாண்டியநாடு பண்பாட்டு மைய வரலாற்று ஆர்வலர் ஸ்ரீதர் மற்றும் அழகப்பா பல்கலைக்கழக வரலாற்று ஆய்வு மாணவர் தாமரைக்கண்ணன் ஆய்வு செய்தனர். பின்னர் அவர்கள் கூறியதாவது, " வட தமிழகத்தில் பல்லவ பேரரசின் காலத்தில் சிற்பக்கலையும் கட்டடக் கலையும் சிறப்பாக இருந்தது.
அதே காலகட்டத்தில் தென் தமிழகத்தை ஆட்சி செய்த முற்கால பாண்டியர்களின் காலத்திலும் சிற்பக்கலையும் கட்டடக் கலையும் சிறப்பாக இருந்தது. முற்கால பாண்டியர்களின் சிற்பக் கலைக்கு சிறந்த உதாரணம் இந்த முருகன் சிற்பம். இதன் காலம் ஒன்பதாம் நூற்றாண்டு ஆகும். நின்ற கோலத்தில் நான்கு கரங்களுடன் காட்சியளிக்கிறார். வலது மேல் கரத்தில் வஜ்ராயுதமும், இடது மேல் கரத்தில் சக்தி ஆயுதத்துடன் இடது கரத்தை இடுப்பில் வைத்தபடி காட்சியளிக்கிறார். ஆபரணங்கள் அணிந்தும், மார்பில் போர் கடவுளுக்கே உரித்தான வீரத்துடன் கம்பீரமாக காட்சி தருகிறார். தலையில் காணப்படும் மகுடம கரண்டமகுடம் ஆகும். அதாவது கூர்மையான உருளை வடிவம் என்ற பொருள். பொதுவாக முருகனின் வாகனம் மயிலானது பிற்கால சோழர் காலத்தில் அரிதாகத் தான் காணப்படுகிறது. நாயக்க மன்னர் காலத்தில் ஒவ்வொரு முருகனின் சிற்பத்திற்கு மயில்வாகனமாக்கப்பட்டது. இதுபோன்ற கலைச்செல்வங்கள் ஒவ்வொரு கிராமத்திலும் இருக்கிறது. இதை அனைத்தையும் காப்பது நமது கடமை.